உலகின் பணக்கார டி20-லீக் நடத்த சவுதி அரேபியா திட்டம்! BCCI, ஐபிஎல் உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை!

ஐபிஎல் ஸ்பான்சர்களாக மாறி கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் காட்டிவரும் சவுதி அரேபியா, உலகின் பணக்கார டி20 லீக்கை அமைப்பதற்கு பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரியமையாளர்களை அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியா டி20 லீக்
சவுதி அரேபியா டி20 லீக்டிவிட்டர்

டி20-இன் பல்ஸை பிடித்துக்கொண்ட பிசிசிஐ!

டி20-யானது கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அடுத்த வருடமே அதன் பல்ஸை பிடித்துக்கொண்ட பிசிசிஐ, 2008ஆம் ஆண்டே இந்தியன் பிரீமியர் லீக்கை தொடங்கி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை கட்டிப்போட்டது. உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என பல திறமை வாய்ந்த வீரர்கள் இதன் மூலம் கண்டெடுக்கப்பட்டு, கவனம் ஈர்த்தனர். புதிய ஒரு வீரர் களத்திற்கு வந்து, புகழ்பெற்ற ஒரு சர்வதேச வீரருக்கு எதிராக அபாரமாக செயல்பட்டால் அதன் கவனம் எந்தளவு மக்களை சென்று சேரும் என்பதற்கு, ஐபிஎல் ஒரு உதாரணமாகவே மாறிவிட்டது.

ஐபிஎல்
ஐபிஎல்டிவிட்டர்

தொடர்ந்து ஐபிஎல்லின் சக்சஸை பார்த்து மிரண்டு போன மற்ற நாடுகள், பிக்பேஷ் லீக், கரீபியன் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், லங்கா பிரீமியர் லீக், இண்டர்நேசனல் லீக், பங்களாதேஷ் லீக், சவுத் ஆப்ரிக்கா டி20 லீக் என அடுத்தடுத்து தொடங்கி நடத்திவருகின்றனர். உலகளவில் இப்படி பல டி20 லீக்குகள் தொடங்கப்பட்டாலும், ஐபிஎல் தொடருக்கு இருக்கும் வரவேற்பும், அதில் பங்கெடுக்கும் அதிகளவான நிதி மற்றும் சமூக ஊடகங்களின் இருப்பு, இதையெல்லாம் தாண்டி உலகத் தரம் வாய்ந்த வீரர்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில், மற்ற உலக டி20 லீக்குகளுடன் ஒப்பிடும்போது ஐபிஎல் மேலோங்கி நிற்கிறது.

உலகின் பணக்கார டி20 லீக் உருவாக்க சவுதி அரேபியா திட்டம்!

இந்நிலையில், கால்பந்து மற்றும் ஃபார்முலா 1 போன்ற விளையாட்டுகளில் அதிக முதலீடு செய்துவரும் சவுதி அரேபியா, தற்போது கிரிக்கெட்டின் மீதும் தனது பார்வையை திருப்பியுள்ளது. ஐபிஎல் ஸ்பான்சர்களாக களமிறங்கியிருக்கும் சவுதி அரேபியா, தங்களது நாட்டில் உலகின் பணக்கார டி20 லீக்கை உருவாக்கும் பெரிய லட்சியத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அவர்கள் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களை அணுகியுள்ளதாக தெரிகிறது.

சவுதி அரேபியா டி20 லீக்
சவுதி அரேபியா டி20 லீக்டிவிட்டர்

பிசிசிஐ-யை பொறுத்தவரையில் இந்திய வீரர்கள் யாரும், ஐபிஎல்லை தவிர்த்து மற்ற எந்தவிதமான லீக்குகளிலும் பங்கேற்க கூடாது என தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சவுதி அரேபியா டி20 லீக் தொடங்கப்பட்டால், அதில் வீரர்கள் பங்கேற்பதற்கான சலுகையை பிசிசிஐ வழங்கும் என்ற பார்வை தற்போது மேலோங்கி உள்ளது.

கிரிக்கெட்டில் முதலீடு செய்ய சவுதி அரேபியா விரும்புகிறது! - ஐசிசி தலைவர்

தி ஏஜ் பத்திரிக்கையின் அறிக்கையின் படி, சுமார் ஒருவருட காலமாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. இதெல்லாம் முழுமையாக நடைபெறுவதற்கு முன்னால், சவுதி அரேபியா டி20 லீக் தொடங்க முதலில் ஐசிசி அனுமதியளிக்க வேண்டும். ஆனால், சில காலத்திற்கு முன்பே ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, சவுதி அரேபியா கிரிக்கெட்டில் அதிக முதலீடு செய்ய விரும்புவதை உறுதிப்படுத்தியிருந்தார்.

சவுதி அரேபியா டி20 லீக்
சவுதி அரேபியா டி20 லீக்டிவிட்டர்

அப்போது பேசியிருந்த அவர், “சவுதி அரேபியா மற்ற விளையாட்டுகளில் ஆர்வமாக முதலீடு செய்துவருவதை பார்த்தால், அவர்களை கிரிக்கெட் மிகவும் கவரும் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டுகளை வைத்து முன்னேற நினைத்தால், அவர்களுக்கு கிரிக்கெட் நன்றாக வேலை செய்யும். அவர்கள் அதில் அதிக முதலீடு செய்ய விரும்புகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

உலகளாவிய கிரிக்கெட் இடமாக மாற்றுவது தான் எங்கள் நோக்கம்! - சவுதி அரேபியா கிரிக்கெட் சேர்மன்

இந்நிலையில், இதுகுறித்து கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்த சவுதி அரேபியா கிரிக்கெட் ஃபெட்ரேசன் சேர்மன் சௌத் பின் மிஷால் அல்-சௌத், “சவுதி அரேபியாவில் வசிக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினருக்கு நிலையான தொழில்துறையை உருவாக்குவதும், நாட்டை ஒரு உலகளாவிய கிரிக்கெட் இடமாக மாற்றுவதும் தான் எங்கள் நோக்கம்” என்று தெரிவித்திருந்தார்.

சவுதி அரேபியா டி20 லீக்
சவுதி அரேபியா டி20 லீக்டிவிட்டர்

கிடைத்திருக்கும் தகவல்களின் படி, ஐபிஎல் உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ என இருதரப்பையும் தங்கள் திட்டமிட்ட டி20 லீக் அமைப்பதற்கான வாய்ப்பை உறுதிசெய்வதில் சவுதி அரேபியா தீவிரமாக முயன்றுவருவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் சவூதி அரேபியாவில் வருடாந்திர ஆசியக் கோப்பை, சில ஓபனிங் போட்டிகள் அல்லது ஐபிஎல்-ன் ஒரு சுற்றை நடத்துவதற்கான வாய்ப்பும், திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com