’அந்த மனசு தான் சார்..’ சூர்யவன்ஷிக்காக எனது இடத்தை இழப்பதற்கு தயாராக இருக்கிறேன்! - சஞ்சு சாம்சன்
2025 ஐபிஎல் சீசனானது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 15 போட்டிகளே மீதமுள்ள நிலையில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ முதலிய 6 அணிகளுக்கு இடையே பிளேஆஃப் போராட்டங்கள் நீடித்துவருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளை தொடர்ந்து நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா அணியும் 4ஆவது அணியாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இன்றைய பரபரப்பான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நேஹல் வதேரா (70) மற்றும் ஷஷாங்க் சிங் (59) இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 219 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து விளையாடிவரும் ராஜஸ்தான் அணி 10 ஓவரில் 114 ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.
சூர்யவன்ஷிக்காக ஓப்பனிங் இடத்தை விட்டுக்கொடுத்த சாம்சன்..
2025 ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பாக 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி பார்க்கப்படுகிறார். இளம் வயதில் ஐபிஎல் சதமடித்த வீரராக ஜொலித்துவரும் வைபவ் சூர்யவன்ஷி, தொடர்ந்து தன்னுடைய அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார்.
கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயத்தால் தொடக்க வீரராக விளையாடிவரும் வைபவ், இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் பங்கேற்ற போதும் தொடங்க வீரராகவே களமிறங்கினார்.
இன்றைய போட்டியில் தொடக்க வீரராக களம்கண்ட சூர்யவன்ஷி 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பிரமாண்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்தில் 40 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “வைபவ் சூர்யவன்ஷி எந்த பொசிஷனில் பேட்டிங் செய்கிறாரோ அதை நான் மதிக்க விரும்புகிறேன், அவர் எங்களுக்காக தொடக்க வீரராக களமிறங்கி நன்றாக விளையாடியுள்ளார். ஒருவர் சிறப்பாக விளையாடுகிறார் என்றால், அவருடைய வயதை பார்க்காமல் அவருடைய திறமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதனால் நான் அவருக்கான ஆர்டரை மாற்றவிரும்பவில்லை, நான் பேட்டிங்கில் கீழறிங்கி விளையாட தயாராகவே இருக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
220 என்ற இலக்கை நோக்கி விளையாடிவரும் ராஜஸ்தான் 12 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது.