முடிவுக்கு வந்த திருமண பந்தம்.. கணவரைப் பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!
ஒலிம்பிக்கில் 2012ஆம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றவர், சாய்னா நேவால். கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி சாய்னா ஆவார். பேட்மிண்டனில் உலக நம்பர் 1 தரவரிசையைப் பெற்ற ஒரே இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையையும் சாய்னா பெற்றுள்ளார். இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சாய்னா நேவால் தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, நானும், பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி மற்றும் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி” என அதில் பதிவிட்டுள்ளார்.
அதேநேரத்தில், சாய்னா நேவாலின் பிரிவு குறித்த கருத்துக்கு பாருபள்ளி காஷ்யப் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. காஷ்யப் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.