GTvCSK | ருத்ரதாண்டவம் ஆடிய ருத்ராஜ்... குஜராத் அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை!
ஐபிஎல்லின் 16வது சீசன், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இதில் 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, சென்னை அணியில் தொடக்க பேட்டர்களாய் களமிறங்கிய டெவன் கான்வே 1 ரன் எடுத்த நிலையில் முகம்மது ஷமி பந்தில் போல்டாகி வெளியேறினார். ஆனால் மறு தொடக்க பேட்டரான ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டினார். அவருக்குத் துணையாக விளையாடிய மொயின் அலி 17 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்த நிலையில், ரஷீதுகான் பந்துவீச்சில் விருத்திமான் சகாவிடம் வீழ்ந்தார்.
அடுத்து, சென்னை அணியால் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களில் அதே ரஷீதுகானின் பந்துவீச்சில் சகாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தபோதும் ருத்ராஜ் கெய்வாட் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். ருத்ராஜ், 44 ரன்கள் எடுத்திருந்தபோது அல்ஷாரி ஜோசப் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அரைசதம் எடுத்தார்.
இதன்மூலம் இந்த சீசனில் முதல் அரை சதத்தை கெய்க்வாட் எடுத்து அசத்தியுள்ளார். அவர் ஒருபுறம் அதிரடியுடனும் அதேநேரத்தில் நிதானத்துடனும் விளையாடி வர, மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருந்தது. அம்பத்தி ராயுடு 12 ரன்கள் எடுத்த நிலையில், ஜோஷ்வா லிட்டில் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவருக்குப் பின் ஷிவம் துபே களமிறங்கினார். அப்போது சென்னை அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடிய ருத்ராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் முதல் சதத்தையும், ஐபிஎல்லில் அவர் இரண்டாவது சதத்தையும் அடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 92 ரன்களில் அல்ஷாரி ஜோஸப் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்சாகி வெளியேறினார். புல்டாஸாக வீசப்பட்ட அந்தப் பந்தை தூக்கியடிக்க கேட்சாக மாறியது. அவர் 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் 92 ரன்களை எடுத்தார்.
ருத்ராஜ் வெளியேறிய பின்பு ரன் ரேட்டும் குறையத் தொடங்கியது. மிகவும் எதிர்பார்த்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 1 ரன்னில் வெளியேறினாலும், கடைசிக் கட்டத்தில் அதிரடியாய் விளையாடிய ஷிவம் துபே, 19 ரன்களில் கேட்சானார். கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடிக்க சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணியில் ரஷீத் கான், முகம்மது ஷமி, அல்ஷாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஜோஷ்வா லிட்டில் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.