rr vs pbks
rr vs pbksbcci

ஃபினிசர் என்று SCAM செய்யும் ஹெட்மயர்.. பட்லருடன் ஒப்பிட்டு RR ரசிகர்கள் வேதனை! 10 ரன்னில் தோல்வி!

2025 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மீண்டும் 10 ரன்னில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
Published on

நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு அணி என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டும் தான். 13 போட்டிகளில் 3-ல் வெற்றிபெற்றுள்ள அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியடைந்து ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.

இதில் சோகம் என்னவென்றால், ராஜஸ்தான் அணி தோற்ற 10 போட்டிகளில் 5 தோல்விகள் 11 ரன்களுக்கும் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விகளாகும். அந்த 5 போட்டியிலும் நிச்சயம் வெற்றியை பெற்றிருக்க வேண்டிய இடத்திலேயே ராஜஸ்தான் அணி இருந்தது. ஆனால் கடைசிநேரத்தில் நின்றுவெற்றிபெற வேண்டிய ரோலில் ஒரு வீரர் கூட இல்லாததால், அந்த அணி கையிலிருந்த 5 வெற்றிகளை மோசமான முறையில் பறிகொடுத்தது. இதில் சூப்பர் ஓவர் வரை சென்று அடைந்த தோல்வியும் அடங்கும்.

rajasthan royals
rajasthan royals

இப்படி படுமோசமான தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் அணி, இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கையிலிருந்த ஆட்டத்தை கோட்டைவிட்டது.

219 ரன்கள் குவித்த பஞ்சாப் கிங்ஸ்..

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பேட்டிங்கை தேர்வுசெய்தோம் என வருத்தப்படுமளவு அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் பவுலர்கள், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டை கைப்பற்றி மிரட்டிவிட்டனர்.

ஆனால் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேஹல் வதேரா இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஒருபக்கம் ஸ்ரேயாஷ் ஐயர் நிதானமாக விளையாட, மறுமுனையில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த வதேரா 70 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.

அணியை நல்ல நிலைமைக்கு எடுத்துவந்த ஸ்ரெயாஸ் ஐயர் 30 ரன்னிலும், வதேரா 70 ரன்னிலும் வெளியேற, கடைசியாக கைக்கோர்த்த ஷஷாங் சிங் மற்றும் அஸ்மதுல்லா இருவரும் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என மரண அடி கொடுத்தனர். 34-க்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலைமையில் இருந்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 219 ரன்கள் என்ற இமாலய டோட்டலை குவித்து அசத்தியது.

10 ரன்னில் தோற்ற ராஜஸ்தான்..

220 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி இருவரும் மூச்சடைக்க வைக்கும் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என 22 ரன்களை ஜெய்ஸ்வால் விரட்ட, இரண்டாவது ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட 14 வயது சூர்யவன்ஷி துவம்சம் செய்தார். அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகள் பறக்க 2.5 ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது ராஜஸ்தான் அணி. இது நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு அணி அடித்த அதிவேகமான 50 ரன்களாக பதிவுசெய்யப்பட்டது.

4 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய சூர்யவன்ஷி 15 பந்தில் 40 ரன்கள் அடிக்க, 9 பவுண்டரிகள் 1 சிக்சர் என மிரட்டிவிட்ட ஜெய்ஸ்வால் 25 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். 6 ஓவருக்கே 89 ரன்களை இந்த ஜோடி குவிக்க, இம்பேக்ட் வீரராக வந்த ஹர்ப்ரீத் ப்ரார் சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றி பஞ்சாப் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்தார்.

எப்போதும் போல ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி இருவரும் அவுட்டான பிறகு அடுத்தடுத்து வந்த சாம்சன் 20, ரியான் பராக் 13 ரன்கள் என வந்தவர்கள் எல்லோரும் விரைவாகவே வெளியேறினர். ஆனால் யார் போனா என்ன நான் அடிக்குறன் என்று தனியாளாக போராடிய துருவ் ஜுரல் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார்.

ஃபினிஷர் என்ற பெயரில் ஏமாற்றும் ஹெட்மயர்..

கடைசி 5 ஓவருக்கு 66 ரன்கள் என்ற எட்டக்கூடிய நிலையிலேயே ஆட்டம் இருக்க, ஃபினிசர் என்ற ரோலில் களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் ‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ என நொந்து போகுமளவு ஒரு படுமோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஒரு பக்கம் சிக்சர் பவுண்டரி என அடித்து ஜுரல் போராட, மறுமுனையில் 12 பந்துக்கு 11 ரன் என மோசமாக விளையாடிய ஹெட்மயர், அணியை பரிதாபமான நிலைமைக்கு தள்ளிவிட்ட பிறகு வெளியேறினார். ராஜஸ்தான் அணி ‘இன்னுமா இவர ஃபினிசர்னு நம்பிட்டு இருக்கு’ என்ற எண்ணமே எல்லோருக்கும் தோன்றியது.

அழுத்தம் அதிகமாக அடித்து ஆடும் முயற்சியில் ஜுரலும் வெளியேற, கடைசிவரை போராடிய ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

ஃபினிஷர் என்ற பெயரில் மோசடி செய்துவரும் ஹெட்மயர் இல்லாமல், வேறுஒரு நல்ல வீரர் இருந்திருந்தால் ராஜஸ்தான் அணி தற்போது 8 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்திருக்கும். ஆனால் நடப்பு சீசனில் ஃபினிஷர் என்ற பெயரில் ராஜஸ்தான் அணியையே முடித்துவிட்டார் ஹெட்மயர். தங்கத்தை தேடுகிறோம் என்று ஹெட்மயரை தக்கவைத்த ராஜஸ்தான் அணி, வைரம் போன்ற பட்லரை இழந்துவிட்டது என ராஜஸ்தான் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பட்லர் மட்டும் இருந்திருந்தால் ராஜஸ்தான் டாப் 4-ல் இருந்திருக்கும் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அசத்தலான வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ஆட்டநாயகனாக போட்டியை திருப்பிய ஹர்ப்ரீத் ப்ரார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com