ஒருமுறைகூட IPL கோப்பையை உச்சிமுகராத சோகம்.. ஆனாலும், RCB வசம் அசைக்க முடியாத 8 சாதனைகள்!

நாளை, நடப்பு ஐபிஎல்லின் 20வது போட்டியில் பெங்களூரு அணி, டெல்லி அணியை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில், ஐபிஎல்லில் இதுவரை முறியடிக்கப்படாத, பெங்களூரு அணி வைத்திருக்கும் 8 சாதனைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
RCB
RCBTwitter

உலகில் ஆயிரம் விளையாட்டுகள் இருந்தாலும், அதில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும், தாமும் தமது அணியும்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என எண்ணுவார்கள். ஆனால், இது எல்லாருக்கும் நடப்பதில்லை. கோப்பையை வெல்வதற்கு பல நேரங்களில் திறமையும், சில நேரங்களில் அதிர்ஷ்டமும் கைகூட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸுக்கும் அந்தச் சோதனை தொடர்கிறது.

விராட் கோலி
விராட் கோலிfile image

ஒருமுறைகூட இன்னும் கோப்பையை உச்சிமுகராத அந்த அணி, சில சாதனைகளை மட்டும் தன்னகத்தே கொண்டுள்ளது. தற்போது 16வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஏப்.15) 20வது போட்டியில் பெங்களூரு அணி, டெல்லி அணியை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு அணி வைத்திருக்கும் அந்த 8 சாதனைகள், இன்னும் எந்த அணியாலும் முறியடிக்கப்படவில்லை. அந்த அணி செய்திருக்கும் சாதனைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

1. ஐபிஎல்லில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்கள்

2008ஆம் ஆண்டுமுதல் விளையாடப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியே ஓர் இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை எடுத்துள்ளது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய புனே அணி 20 ஓவர்களில் 133 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றிபெற்றது.

இன்றுவரை ஒரு இன்னிங்ஸில் 200க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டாலும், பெங்களூரு செய்த இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை.

2. ஐபிஎல் அணியில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன்கள்

டி20 கிரிக்கெட் அறிமுகத்திற்குப் பிறகு எத்தனையோ சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பேட்டர்களுக்கு மைதானங்கள் சிம்மசொப்பனமாக விளங்கி வருகின்றன.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்file image

அந்த வகையில் ஐபிஎல்லில் ஓர் இன்னிங்ஸில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாய் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் எடுத்த 175 ரன்களே, இன்றுவரை சாதனையாகத் தொடர்கிறது. அவர், பெங்களூரு அணியில் அங்கம் வகித்தபோது 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார்.

3. ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஒரே அணியைச் சேர்ந்த வீரர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே அணியில் விளையாடும் வீரராக வலம் வரும் விராட் கோலி, இதுவரை 226 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த வரிசையில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். அவர், இதுவரை 230 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ரோகித்சர்மா, விராட்கோலி
ரோகித்சர்மா, விராட்கோலிfile image

என்றாலும், ஐபிஎல்லின் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் என்ற சாதனை பட்டியலில் விராட் கோலியே முதலிடத்தில் உள்ளார். அவர், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், 16 போட்டிகளில் பங்கேற்று 973 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 4 சதங்களும் 7 அரைசதங்களும் அடக்கம்.

4. ஐபில் தொடரில் குறைந்த ரன்கள் எடுத்த அணி

ஐபிஎல் தொடரில் மிகவும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த என்ற மகத்தான சாதனையும் பெங்களூரு வசமே உள்ளது. அந்த அணி, கடந்த 2017ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் சுருண்டது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 19.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.

விராட்கோலி
விராட்கோலிfile image

பின்னர் ஆடிய பெங்களூரு அணி, 9.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 49 ரன்களை மட்டுமே எடுத்து வரலாற்றில் இடம்பிடித்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஐபிஎல் தொடரில் ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள் குவித்த இணை

ஐபிஎல் தொடரில் 2வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன்கள் குவித்த இணை என்ற சாதனையும் பெங்களூரு அணியிடம்தான் இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக, விராட் கோலி - ஏ.பி. டி.வில்லியர்ஸ் இணை 229 ரன்களைத் திரட்டியது.

விராட் கோலி, டி.வில்லியர்ஸ்
விராட் கோலி, டி.வில்லியர்ஸ்file image

அது இன்றுவரை தொடர்கிறது. அதற்கு முன்பு 2015ஆம் ஆண்டில் இதே இணை மும்பை அணிக்கு எதிராக 2வது விக்கெட்டுக்கு 215 ரன்களை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஓர் அணிக்காக அதிக ரன்கள் குவித்த கேப்டன்

ஐபிஎல் போட்டியில் ஓர் அணிக்கு கேப்டனாய்ப் பொறுப்பேற்று அதிக ரன்கள் குவித்தவர்கள் என்ற சாதனை பட்டியலிலும் பெங்களூரு அணி வீரரே இடம்பெற்றுள்ளார்.

விராட் கோலி
விராட் கோலிfile image

முன்னாள் கேப்டனான விராட் கோலி, தாம் கேப்டனாய்ப் பதவியேற்ற (2011 - 2021) காலத்தில் 139 போட்டிகளில் விளையாடி 4,881 ரன்கள் குவித்துள்ளார். இதில் 35 அரைசதங்களும், 5 சதங்களும் அடக்கம்

7. ஓர் அணியில் அதிக சதம் அடித்த வீரர்கள்

ஐபிஎல் தொடரில் ஓர் அணிக்காக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லும், விராட் கோலியும் சமநிலை வகிக்கின்றனர். இருவரும் தலா ஓர் அணிக்காக 5 சதம் அடித்துள்ளனர். அதேநேரத்தில் ஐபிஎல்லிலேயே அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் 6 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையையும் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது.

8. ஓர் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்

ஐபிஎல் ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை பெங்களூரு அணிக்காக ஆடிவரும் விராட்கோலி, இதுவரை 226 போட்டிகளில் விளையாடி 6,788 ரன்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும், 46 அரைசதங்களும் அடக்கம். தவிர, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் விராட் கோலியே முதல் இடத்தில் உள்ளார். இந்த சீசனிலும் அவரது ரன் வேட்டை தொடர்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com