ரோகித் சர்மா
ரோகித் சர்மாipl

300 சிக்சர்கள்.. 7000 ரன்கள்! பிரமாண்ட சாதனை படைத்த ரோகித்.. 228 ரன்கள் குவித்த MI!

2025 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 228 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
Published on

2025 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 18வது ஐபிஎல் கோப்பைக்காக 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்த ஆர்சிபி அணி, 2025 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.

ஆர்சிபி 2025
ஆர்சிபி 2025web

இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

228 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ்..

சண்டிகரில் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலர்கள் விக்கெட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாலும், கைக்கு வந்த கேட்ச்களை எல்லாம் கோட்டைவிட்ட டைட்டன்ஸ் அணி ஃபீல்டர்கள் சொதப்பினர்.

பேர்ஸ்டோ
பேர்ஸ்டோ

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட பேர்ஸ்டோ மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்மழை பொழிந்தனர். 22 பந்தில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 47 ரன்கள் அடித்த பேர்ஸ்டோ தரமான தொடக்கத்தை கொடுக்க, 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் குவித்த ரோகித் சர்மா மிகப்பெரிய டோட்டலுக்கு அடித்தளம் போட்டார்.

அடுத்தடுத்து வந்த சூர்யகுமார் 33 ரன்கள், திலக் வர்மா 25 ரன்கள் மற்றும் ஹர்திக் பண்டியா 22 ரன்கள் என அடிக்க 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

229 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிவரும் குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் ஓவரிலேயே கேப்டன் சுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.

ரோகித் சர்மா படைத்த சாதனைகள்!

300 சிக்சர்கள் - இன்றைய போட்டியில் 4 சிக்சர்களை பறக்கவிட்ட ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

7000 ரன்கள் - குஜராத் அணிக்கு எதிராக 81 ரன்கள் அடித்த ரோகித் சர்மா, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த இரண்டாவது வீரராக சாதனை படைத்தார். முதலிடத்தில் 8618 ரன்களுடன் விராட் கோலி நீடிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com