வந்தார்.. சென்றார்!! தொடரும் சோகம்.. மீண்டும் 2 ரன்னில் வெளியேறிய ரிஷப் பண்ட்!
2025 ஐபிஎல் ஏலத்தில் 27 கோடி, 26.75 கோடி, 23.75 கோடி என அதிக தொகைக்கு சென்ற வீரர்களாக ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் மூன்றுபேரும் ஜொலித்தனர்.
ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு 3வது சுற்றுப்போட்டிகள் நடந்துவரும் நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் பேட்டிங்கில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
பேட்டிங் செய்த இரண்டு போட்டிகளில் 6, 3 என சொற்ப ரன்களில் வெளியேறிய வெங்கடேஷ் ஐயர், 4வது போட்டியில் 29 பந்துகளுக்கு 60 ரன்கள் அடித்து கம்பேக் கொடுத்துவிட்டார். மறுபக்கம் 2 போட்டிகளில் 97* ரன்கள், 52* ரன்கள் என இரண்டு அரைசதங்களை அடித்து ஸ்ரேயாஸ் ஐயர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
இந்த சூழலில் 4 போட்டிகளாக ரிஷப் பண்ட் மட்டும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார்.
தொடரும் சோகம்.. 2 ரன்னில் பண்ட் அவுட்!
2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
இந்த மூன்று போட்டியிலும் ரிஷப் பண்ட் 0, 15 மற்றும் 2 ரன்கள் என மோசமான ரன்களில் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதுவும் எப்படியான தருணங்களில் அவுட்டாகி சென்றுள்ளார் என்றால், அணி நல்ல நிலைமையில் இருக்கும் சமயத்தில் அடித்து ஆட முயற்சி செய்து பொறுப்பற்ற முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து அடுத்துவரும் வீரர்களுக்கு அழுத்தம் அதிகமாகி அவர்களும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இந்த சூழலில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அணியின் ஓனர் கோயங்கா ரிஷப் பண்ட் உடன் உரையாடுவது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் இன்று தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட், முந்தைய போட்டிகளை போல அடித்து ஆட முயற்சிக்காமல் நிலைத்து நின்று ஆடவே முயற்சி செய்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக 2 ரன்னில் பந்து எட்ஜ் ஆகி வெளியேறினார். அவருடைய மோசமான ரன்கள் தொடர்ந்து வருகிறது. 4 போட்டிகளில் வெறும் 19 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் ரிஷப் பண்ட்.
மும்பை அணிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 17 ஓவரில் 168/3 என நல்ல நிலைமையில் பேட்டிங் செய்துவருகிறது.