2025 மெகா ஏலத்திற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால், தான் சேர விரும்பும் ஐபிஎல் அணியின் பெயரை ரிங்கு சிங் பெயரிட்டுள்ளார்.
இந்திய அணியின் அடுத்த பினிசிங் வீரராக பார்க்கப்படுபவர் ரிங்கு சிங். 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக யஷ் தயாள் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி எல்லோருடைய கவனத்தையும் திருப்பிய ரிங்கு சிங், அங்கிருந்து இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தினார். 2024 டி20 உலக்கோப்பையில் இடம்பிடிக்கவிட்டாலும், அவரை ரிசர்வ் வீரராக கொண்டுசென்றது இந்திய அணி.
ரிங்கு சிங் தனது ஐபிஎல் பயணத்தை 2017-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் தொடங்கினார். பின்னர் 2018-ல் KKR அணிக்கு IPL அறிமுகமான அவர், தற்போதுவரை கொல்கத்தா அணியின் பினிசிங் வீரராக விளையாடிவருகிறார்.
2018-ம் ஆண்டு கேகேஆர் அணிக்காக விளையாடினாலும் அவருக்கு ஆரம்பத்தில் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் 2018-ல் 4 போட்டிகள், 2019-ல் 5 போட்டிகள், 2020-ல் ஒரு போட்டி மட்டுமே விளையாடி 2021 ஐபிஎல் தொடர் முழுவதும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். ஆனாலும் 2022 தொடருக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 80 லட்சத்துக்கு வாங்கிய அவரை, மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் விட்டு 55லட்சத்துக்கு ரீடெய்ன் செய்தது. 2022 ஐபிஎல்லில் அவர் 7 போட்டிகளில் விளையாடினார்.
இதையும் படிக்க: 3 ஐசிசி கோப்பை.. 50 ODI சதம்.. தலைசிறந்த TEST கேப்டன்! 16 ஆண்டுகள் நிறைவு செய்த கோலியின் சாதனைகள்!
2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான KKR-ன் புகழ்பெற்ற வெற்றியில், யஷ் தயாளுக்கு எதிராக ஐந்து சிக்ஸர்களை அடித்த பிறகு ரிங்குசிங் பிரபலமடைந்தார். அதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணியின் நிரந்தர பினிசராக பார்க்கப்படும் ரிங்குசிங், 2024 ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடினார். புகழின் உச்சிக்கு சென்றபிறகும் ரிங்குசிங் 55லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுவருகிறார்.
‘அடிவாங்குனது நானு; அதனால கப்பு எனக்குதான் சொந்தம்’ என்ற வடிவேலு காமெடி போல, 5 சிக்சர் அடிச்ச ரிங்குசிங்குக்கு 55 லட்சம் சம்பளமும், 5 சிக்சர் விட்டுக்கொடுத்த யஷ் தயாளுக்கு 5 கோடி சம்பளமும் ஐபிஎல்லில் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் வீரர்களின் ரீடெய்ன் விதிமுறை குறித்து பேசிய இந்தியவீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “வீரர்களின் வாழ்க்கையில் ரீடெய்ன் விதியை போல மோசமான விதிமுறை இல்லை. அது வீரர்களின் திறமைக்கான சம்பளத்தை கிடைக்கவிடாமல் தடுக்கிறது” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனால் ‘2025 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கபடவில்லை என்றால் எந்த அணிக்கு செல்வீர்கள்?’ என்ற கேள்வி ரிங்கு சிங் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதில், இரண்டு அணிக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் கூறி இருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ்டாக்கிடம் இதுபற்றி பேசிய போது வெளிப்படுத்திய ரிங்கு சிங், "ஆர்சிபி-தான். விராட் கோலி அங்கு இருப்பதால் ஆர்சிபிக்காக விளையாட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல்லில் விராட் கோலிக்கு எதிராக விளையாடிய போதிலும் ரிங்கு சிங் கோலியுடன் வலுவான பிணைப்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.
போலவே மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து பேசிய ரிங்கு சிங், “SKY ஒரு நல்ல கேப்டன் மற்றும் எப்போதும் அமைதியாக இருப்பார். அதிகம் பேசமாட்டார்” என்றுள்ளார்.