மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் CLT20..? உலக டி20 கிரிக்கெட்டின் அடுத்த நகர்வு!
கால்பந்து விளையாட்டில் எப்படி பல நாடுகளின் ஃபுட் பால் கிளப் அணிகள் ஒரே லீக் தொடரில் விளையாடுகிறதோ, அதேபோல பல நாடுகளின் டி20 கிரிக்கெட் லீக் அணிகள் ஒரே தொடரில் விளையாடும் வகையில் ‘உலக கிளப் சாம்பியன்ஷிப்’ என்பதை உருவாக்க இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சிஇஒ ரிச்சர் கோல்ட் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ’உலக கிளப் சாம்பியன்ஷிப்’ 2009-2014 காலகட்டங்களில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 (CLT20) தொடரின் நீட்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்போது மக்களிடையே அதிகப்படியான வரவேற்பு இல்லாததாலே சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தற்போது மீண்டும் கொண்டுவருவது டி20 கிரிக்கெட்டின் அடுத்த நகர்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மீண்டும் திரும்ப வரும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்..
ஐபிஎல் தொடர் அடைந்துவரும் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து (தி ஹண்ட்ரட்), தென்னாப்பிரிக்கா (SA20), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ILT20) மற்றும் அமெரிக்கா (MLC) என பல்வேறு நாடுகள் டி20 லீக்கை தொடங்கி நடத்திவருகின்றன.
இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு மறைந்து போன சாம்பியன்ஸ் லீக் டி20 (CLT20) என்பதை புதுப்பித்து ‘உலக கிளப் சாம்பியன்ஷிப்' என்பதை உருவாக்க திட்டமிட்டு வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சிஇஒ ரிச்சர்ட் கோல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்திருக்கும் அவர், "பல நாடுகளின் லீக் அணிகள் ஒரே தொடரில் விளையாடுவது டி20 கிரிக்கெட்டின் அடுத்த நகர்வாக இருக்கும். அது நிச்சயமா நடக்கப்போகிறது. சந்தேகமே இல்லாமல் வரும் காலத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரு உலக கிளப் சாம்பியன்ஷிப் இருக்கும்" என்று கூறியுள்ளதாக கிறிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது.
2009 முதல் 2014 வரை நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் லீக் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை முதலிய பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட டி20 லீக்கின் ஃபைனலிஸ்ட் அணிகளும், இந்தியாவில் ஐபிஎல்லில் டாப் 3 லிஸ்ட்டில் இடம்பிடித்து 3 அணிகளும் என பல்வேறு அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தின. நடத்தப்பட்ட 6 பதிப்புகளில் சிஎஸ்கே 2 முறை, மும்பை இந்தியன்ஸ் 2 முறை என ஐபிஎல் அணிகள் 4 முறை கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்தி இருந்தன.
’உலக கிளப் சாம்பியன்ஷிப்’ என்பது நவீனகால டி20 கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், ஐபிஎல் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை பாதிக்குமா என்பதை பொறுத்தே பிசிசிஐ முடிவெடுக்கும் என்று தெரிகிறது.