
'சகளை என் அடியை பார்த்ததில்லையே. என்ன அடின்றத மட்டும் பார்க்குற நீயி' என ஈடன் கார்டனில் வாங்கிய அடிக்கு சின்னசாமியில் வைத்து திருப்பி கொடுக்க முஷ்டியை முறுக்கியது ஆர்.சி.பி. சென்னையுடன் தோற்ற சோகத்தில் அமைதியாக பெங்களூர் வந்து இறங்கியது கொல்கத்தா. டாஸ் ஜெயித்த கோலி, `இப்போ பேசுற நேரம் எல்லாம் முடிஞ்சு போச்சு. தூக்கிப்போட்டு பந்தாடுற நேரம்' என சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
ஜேசன் ராய், நாராயணன் ஜெகதீசன் என இன்னொரு ஓபனிங் ஜோடியை முயற்சி செய்தது கொல்கத்தா. முதல் ஓவரை வீசவந்தார் சிராஜ். இரண்டு பவுண்டரிகள் அடித்து சிறப்பாகத் தொடங்கினார் ராய். வில்லி வீசிய 2வது ஓவரில், ஒரு பவுண்டரி கிடைத்தது. சிராஜின் 3வது ஓவரில் இன்னொரு பவுண்டரி தட்டினார் ராய். நானும் மேட்சில் இருக்கிறேன் என வெகுண்டெழுந்த ஜெகதீசன், வில்லியின் 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார். அதற்கு போட்டியாக அதே ஓவரில், ராய் ஒரு சிக்ஸரே பறக்கவிட்டார். ஹசரங்காவை அழைத்து வந்தார் கேப்டன் கோலி. கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
பொறுத்திருந்த பார்த்த ஜேசன் ராய், பஸ்ஸில் பாம்பை போட்டு சீட் பிடிக்கும் போன்டா மணியைப் போல் `ஹூஹூம் இது சரிபட்டு வராது' என ஒரு முடிவு எடுத்தார். 6வது ஓவர் வீசிய சபாஷ் அகமதை தொடர்ந்து 3 சிக்ஸர்கள், ஒரு பந்து கேப் விட்டு மற்றொரு சிக்ஸர் என நான்கு சிக்ஸர்களை கொளுத்திவிட்டார். சின்னசாமியே, சபாஷைப் பார்த்து `என்ன சாமி?' என பாவமாய்க் கேட்டது. பவர்ப்ளேயின் முடிவில் 66/0 சிறப்பாக தொடங்கியிருந்தது கொல்கத்தா. முதன்முறையாக ஓபனர்கள் ஆடிய மகிழ்ச்சியிலேயே கொல்கத்தா ரசிகர்கள் ஜிலேபி ஆர்டர் செய்தார்கள்.
ஹசரங்கா வீசிய 7வது ஓவரில், 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. விஜய்குமார் வீசிய 8வது ஓவரில், 22வது பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ராய். அந்த ஓவரிலும் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே. ஹர்ஷலின் 9வது ஓவரில், ஒரு பவுண்டரி தட்டினார் ஜெகதீசன். ஃப்ரூட்டி டப்பாவுக்குள் பேப்பர் ஸ்ட்ராவை நுழைக்க முயல்வதுபோல், பந்தைத் தூக்கியடிக்க ரொம்பவே சிரமப்பட்டார் ஜெகதீசன். ஒருவழியாக, விஜயகுமாரின் 10வது ஓவரில் அவுட்டாகி நடையைக் கட்டினார். அதிர்ச்சியாக, அதே ஓவரில் ராயின் விக்கெட்டையும் கழட்டினார் விஜய்குமார். லெக் ஸ்டெம்பில் வீசபட்ட யார்க்கர், நன்றாக விலகி காட்டி அவுட் ஆனார் ராய். 10 ஓவர் முடிவில் 88/2 என சறுக்கியிருந்தது கொல்கத்தா.
கேப்டன் ராணா களமிறங்கினார். ஹர்ஷல் வீசிய 11வது ஓவரில் 5 ரன்கள். ஹசரங்காவின் 12வது ஓவரில் ஒரு வழியாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார் வெங்கி. விஜய்குமார் வீசிய 13வது ஓவரில், ராணா கொடுத்த எளிதான கேட்சை லாங் ஆஃபில் கோட்டைவிட்டார் சிராஜ். அதே ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து பெருமூச்சு விட்டார் ராணா. வில்லியின் 14வது ஓவரில், இன்னொரு பவுண்டரி அடித்தார் ராணா. இப்போது, சிராஜ் செய்த தப்பை சிராஜே சரி செய்வதுபோல ஒரு பந்தை வீசினார். இம்முறை கேட்சை கோட்டை விட்டது ஃபைன் லெக்கில் இருந்த ஹர்ஷல் படேல்! மேட்ச் முடிந்ததும் இருவரின் குரல்வளையைக் கடிக்க காத்திருந்தார் கோலி. 15 ஓவர் முடிவில் 131/2 என மெல்ல மீண்டிருந்தது கொல்கத்தா.
ஹர்ஷல் வீசிய 16வது ஓவரில், வெங்கி ஒரு பவுண்டரியும், ராணா இரண்டு சிக்ஸர்களும் பறக்கவிட்டனர். மீண்டும் விஜய்குமாரை அழைத்து தீர்ப்பை மாற்றி எழுத சொல்ல, இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என ஸ்கோர்போர்டை மாற்றி எழுதினார் ராணா. ஹசரங்காவின் 18வது ஓவரில், ராணா கொடுத்த கேட்சை ஒருவழியாக பிடித்தது ஆர்.சி.பி. 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார் கேப்டன் ராணா. அதே ஓவரின் 4வது பந்தில் வெங்கியும் அவுட். 31 ரன்களில் அவரும் காலி. ரஸலும் ரிங்குவும் களத்தில் இருந்தனர்.
சிராஜின் 19வது ஓவரை, சிக்ஸர், பவுண்டரி, பவுண்டரி என பட்டாசாக ஆரம்பித்தார் ரிங்கு. அதே ஓவரில் புஸ்வானமாகிப் போனார் ரஸல். ஹர்ஷல் வீசிய 20வது ஓவரில், வீசா இரண்டு சிக்ஸர்களை கொளுத்த சரியாக 200/5 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை முடித்தது கொல்கத்தா. 201 என மொய் வைத்தால் வெற்றி எனும் இலக்குடன் இன்னிங்ஸைத் துவங்கியது பெங்களூர் அணி.
ஜேசன் ராய்க்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் சுயாஷ் சர்மா. டூப்ளெஸ்ஸியும் ஹர்ஷல் படேலுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக உள்ளே வந்தார். கோலி ஃபாஃப் ஜோடி களமிறங்க, அவர்களுக்கு லாலி பாப் கொடுக்க வந்தனர் கொல்கத்தா பவுலர்கள். முதல் ஓவரை வீசவந்தார் அரோரா. முதல் பந்தே பவுண்டரி அடித்தார் ஃபாஃப். அரோகரா என அலறியது பெங்களூர் மைதானம். அதே ஓவரில், இன்னொரு பவுண்டரி அடிக்க இன்னொரு அரோகரா போட்டனர்.
உமேஷ் வீசிய 2வது ஓவரில், கோலி ஒரு பவுண்டரி விளாச, ஃபாஃபோ இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். ஆரஞ்சு கேப் ரொம்பவே பிடித்துவிட்டது போல அவருக்கு. சுயாஷை உள்ளே அழைத்துவந்தார் கேப்டன் ராணா. 3வது ஓவரின், 2வது பந்திலேயே ஃபாஃப் அவுட். ரிங்குவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வருண் சக்கரவர்த்தியின் 4வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் கோலி. சுயாஷின் அடுத்த ஓவரில் கோலி இரண்டு பவுண்டரிகள் அடிக்க, சபாஷ் அகமது எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறினார். 6வது ஓவரில், சக்கரவர்த்தியை மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடிக்க, அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல்லை அடித்தார் சக்கரவர்த்தி. வீசாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு சோகமாக நடையைக் கட்டினார். பவர்ப்ளே முடிவில் 58/3 என மைதானமே நிசப்தமாக இருந்தது.
ரஸல் வீசிய 7வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. நரைனின் 8வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 8 ரன்கள். ராணாவின் 9வது ஓவரில், லோம்ரோர் ஒரு பவுண்டரி அடித்தார். நரைன் வீசிய 10வது ஓவரை, சிக்ஸருடன் தொடங்கி சிக்ஸருடன் முடித்தார் லோம்ரோர். சுயாஷின் 10வது ஓவரில், ஒரு பவுண்டரியை தட்டிய கோலி, தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். பெங்களூர் ரசிகர்கள் ஆர்பரித்தனர். 11 ஓவர் முடிவில் 106/3 என விரட்டியது ஆர்.சி.பி. 54 பந்துகளில் 95 ரன்கள் தேவை.
12வது ஓவரில், சக்கரவர்த்தியை லோம்ரோர் ஒரு சிக்ஸர் அடிக்க, அடுத்த பந்திலேயே லோம்ரோரை அடித்தார் சக்கரவர்த்தி. ரஸலிடம் கேட்ச் கொடுத்துவிட்டு சோகமாக நடையைக் கட்டினார். 13வது ஓவரில், கோலியின் விக்கெட்டை காலி செய்தார் ரஸல். 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த கோலியும் பெவிலியனுக்கு திரும்பினார். கே.ஜி.எஃப் மூன்றும் முடிவுக்கு வந்ததில் ஓ.எம்.ஜி என தலையில் கைவைத்தார்கள் ஆர்.சி.பி ரசிகர்கள். அடுத்த களமிறங்கிய பிரபுதேசாய் அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார்.
நரைனை பவுண்டரியுடன் வரவேற்றார் டி.கே. 15வது ஓவரில், பிரபுதேசாய் ரன் அவுட். 15 ஓவர் முடிவில் 138/6 என பஞ்சு பறக்க ஆர்.சி.பியை அடித்துக்கொண்டிருந்தது கொல்கத்தா. நரைன் வீசிய 16வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. ரஸலின் 17வது ஓவரில், டி.கே ஒரு சிக்ஸர் அடிக்க, ஹசரங்கா அவுட் ஆனார். சொல்லி வைத்து தூக்கியது கே.கே.ஆர்.
18வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்தார் டி.கே. மேட்ச் முடிவுக்கு வந்தது. 19வது ஓவரில் ரஸலை ஒரு சிக்ஸ் அடித்தார் வைசாக். நீண்ட நேரமாக ரேம்ப் ஷாட் ஆடும் முயற்சியில் பந்துகளை விரட்டிக்கொண்டிருந்தார் வில்லி. அரோராவின் கடைசி ஓவரில், 13 ரன்கள் கிடைத்தும் 179/8 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆர்.சி.பி. இப்போது கொல்கத்தா ரசிகர்கள் கோரஸாக அரோகரா போட்டார்கள். 3/27 என சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது!