
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றதையடுத்து, அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதனால் சிஎஸ்கே, லக்னோ அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிப்பெற்றாக வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஐதராபாத் அணியில் கிளாசென் மிகச் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். பின்பு களமிறங்கிய பெங்களூரு அணியின் கோலி மற்றும் டூபிளசிஸ் அதரிடியாக விளையாடினர். இதில் கோலி 62 பந்துகளில் சதமடித்து ஐதராபாதின் வெற்றியை தடுத்தார். இதனால் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன், மும்பையைவிட கூடுதலான நெட் ரன்ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்தது பெங்களூரு. சிஎஸ்கே 13 போட்டிகளில் 15 புள்ளிகளை பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ அணியும் இதே புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது. மேலும் லக்னோ, சிஎஸ்கே, மும்பை, பெங்களூரு அணிகள் தத்தமது கடைசி லீக் போட்டிகளில் கட்டாயம் வெற்றிப்பெற்றாக வேண்டும். மும்பை வெற்றிப்பெற்றால் மட்டும் போதாதது, அந்த அணிக்கு கூடுதல் நெட் ரன் ரேட்டும் தேவைப்படுகிறது. இதனால் எஞ்சியப் போட்டிகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.