pbks - gt - rcb
pbks - gt - rcbipl

11 ஆண்டுக்கு பிறகு நிறைவேறிய கனவு.. RCB, GT, PBKS 3 அணிகள் Playoff சென்றன! சதமடித்த சாய்!

2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
Published on

2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற போகின்றன என்ற குழப்பம் அதிகரித்துகொண்டே சென்ற நிலையில், ஒரு வழியாக ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கும் போது வரிசையாக 4 போட்டிகளில் வென்று யாராலும் வீழ்த்தவே முடியாத அணியாக வலம்வந்த டெல்லி கேபிடல்ஸ் அணி, கடைசி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று பிளேஆஃப்க்கு செல்லுமா செல்லாத என்ற நிலையில் தத்தளித்து வருகிறது.

சதமடித்து மிரட்டிய கேஎல் ராகுல்..

இன்றைய பரபரப்பான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டூபிளெசியை விரைவாகவே வெளியேற்றிய டைட்டன்ஸ் அணி பந்துவீச்சில் சிறந்த தொடக்கத்தை பெற்றது. ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேஎல் ராகுல் மற்றும் அபிஷேக் போரல் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய கேஎல் ராகுல் அரைசதமடிக்க, 3 சிக்சர்களை பறக்கவிட்ட அபிஷேக் போரல் மிரட்டிவிட்டார். 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி மிகப்பெரிய டோட்டலுக்கு அடித்தளம் போட, பந்துவீச்சில் சிறப்பாக வீசிய டைட்டன்ஸ் பவுலர்கள் மிகப்பெரிய ஓவரை வழங்காமல் டைட்டாக பந்துவீசினர்.

அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு சிறந்த பங்களிப்பு போட, மறுமுனையில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்து 60 பந்தில் சதமடித்து அசத்தினார். கேஎல் ராகுலின் அசத்தலான சதத்தால் 199 ரன்களை அடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

சதமடித்து மிரட்டிய சாய் சுதர்சன்..

200 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்குதான் என்றாலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த டைட்டன்ஸ் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறியது. தொடக்கத்தில் புதியபந்தில் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் அதிரடிக்கு திரும்பிய இந்த ஜோடி, மறக்கவே முடியாத ஒரு இரவை டெல்லி அணிக்கு பரிசளித்தது..

ஒருத்தர் ஃபார்ம்ல இருந்தாலே அவுட்டாக்குறது கஷ்டம், சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே மரண ஃபார்மில் இருப்பதால் டெல்லி பவுலர்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்துவதே கனவாகிப்போனது. போட்டிப்போட்டுக்கொண்டு சிக்சர் பவுண்டரிகளாக விரட்டிய இந்த ஜோடி, விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 200 ரன்கள் டார்கெட்டை எளிதாக சேஸ் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

12 பவுண்டரிகள் 4 சிக்சர்களை பறக்கவிட்ட சாய் சுதர்சன் 56 பந்தில் சதமடித்து அசத்தினார். அதேபோல 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் 93 ரன்கள் அடித்து சதமடிக்க ரன்கள் இல்லாமல் தவறவிட்டார்.

இன்றைய போட்டியில் நடந்த சாதனைகள்..

839 ரன்கள் பார்ட்னர்ஷிப் - நடப்பு சீசன் முழுவதும் பிரமாண்ட பார்ட்னர்ஷிப் போட்டுவரும் இந்த ஜோடி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் பார்டனர்ஷிப் போட்ட முதல் ஜோடியாக வரலாறு படைத்துள்ளது. 839 ரன்கள் அடித்திருக்கும் இந்த ஜோடி சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

3 அணிகள் பிளேஆஃப் - இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்ற நிலையில், ஒரே நேரத்தில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் 3 அணிகளும் பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளேஆஃப்க்கு தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது.

முதல் கேப்டனாக சாதனை படைத்த ஸ்ரேயாஸ் - ஐபிஎல் வரலாற்றில் முதல் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் என  3 வெவ்வேறு அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச்சென்ற முதல் ஐபிஎல் கேப்டனாக வரலாறு படைத்துள்ளார்.

ஆர்சிபி சாதனை - அதேபோல கடைசி 6 ஐபிஎல் சீசன்களில் 5வது முறையாக பிளேஆஃப்க்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது ஆர்சிபி அணி.

1 இடத்திற்கு 3 அணிகள் போட்டி - குஜராத், பஞ்சாப், ஆர்சிபி 3 அணிகள் பிளேஆஃப்க்கு தகுதிபெற்ற நிலையில், கடைசி ஒரு இடத்திற்காக மும்பை, டெல்லி மற்றும் லக்னோ மூன்று அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. மும்பை மற்றும் டெல்லி இரண்டு அணிகளும் கடைசி 2 போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் லக்னோ அணி கடைசி 3 போட்டிகளில் வெற்றிபெறுவதோடு, டெல்லி மற்றும் மும்பை அணிகள் ஒரு போட்டியிலாவது தோற்றால் தான் தகுதிபெற முடியும் என்ற நிலையில் லக்னோ நீடிக்கிறது.

முடிவில் கடைசி ஒரு இடத்தை யார் பிடிக்கப்போகிறார்கள் என்ற சுவாரசியம் தொற்றியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com