’கோப்பையை எடுத்துவைங்க..’ 9 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது RCB!
2025 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 18வது ஐபிஎல் கோப்பைக்காக 10 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தின.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு யார் செல்வார் என்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் டாமினேட் செய்த ஆர்சிபி அணி, பஞ்சாப் கிங்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
அனுபவமின்மையால் வீழ்ந்த பஞ்சாப்!
நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட இரண்டு அணிகளுக்கு இடையேயான மோதல் என்பதால் போட்டி விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்து பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தது.
இளம் வீரர்களை அதிகமாக கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் குவாலிஃபையர் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில் அனுபவமின்மையை வெளிப்படுத்தியது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் இல்லாதது பஞ்சாப் அணியை பாதாளத்தில் தள்ளியது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடுவதற்கு சென்று விக்கெட்டை இழக்க, அனுபவத்தை சரியாக பயன்படுத்திய ஹசல்வுட், புவனேஷ்வர் குமார், யஷ் தயாள் அனைவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 30-3, 60-6 என ஒவ்வொரு பத்து ரன்னுக்கும் ஒரு விக்கெட்டை இழந்த பஞ்சாப் 101 ரன்களில் ஆல்அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய ஹசல்வுட் மற்றும் சுயாஷ் சர்மா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
4வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது RCB!
102 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சால்ட் மற்றும் கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 ஓவருக்கு 30 ரன்களை ஆர்சிபி அடிக்க, ஆடுகளத்தில் இருந்த ஸ்விங்கை பயன்படுத்தி கோலியை 12 ரன்னில் வெளியேற்றிய ஜேமிசன் அச்சுறுத்தினார்.
ஆனால் மறுமுனையில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என 200 ஸ்டிரைக்ரேட்டுக்கு மேல் வெளுத்துவாங்கிய பிலிப் சால்ட், 27 பந்தில் 56 ரன்கள் அடிக்க 10 ஓவரில் இலக்கை எட்டிய ஆர்சிபி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
அதுமட்டுமில்லாமல் 60 பந்துகளை மீதம் வைத்து, அதிக பந்துகள் வித்தியாசத்தில் ஐபிஎல் பிளேஆஃப் போட்டியை வென்ற அணியாக மாறி வரலாறு படைத்தது ஆர்சிபி.
2009, 2011 மற்றும் 2016 என 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது ஆர்சிபி, 9 வருடங்களுக்கு பிறகு 4வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் காலடி வைத்துள்ளது. ஒருமுறை கூட கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி, நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்ல இன்னும் ஒரு வெற்றிமட்டுமே மீதமுள்ளது.