மைதானத்திலேயே பட்டிதாரை கடுமையாக திட்டிய கோலி.. பஞ்சாபை வீழ்த்தி 5வது வெற்றியை பதிவுசெய்தது RCB!
2025 ஐபிஎல் சீசன் பாதி போட்டிகளை கடந்து விட்டது. ஒவ்வொரு அணியும் தலா 7 போட்டிகளை விளையாடியிருக்கும் சூழலில், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலிய 5 அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களை ஆக்கிரமித்துள்ளன.
இந்த சூழலில் வெற்றிபெற வேண்டிய முக்கியமான போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது ஆர்சிபி அணி.
157 ரன்கள் மட்டுமே அடித்த பஞ்சாப்!
சண்டிகரில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4 ஓவரில் 41 ரன்களை பஞ்சாப் அடிக்க, 5வது ஓவரை வீசவந்த க்ருணால் பாண்டியா பிரியான்ஸ் ஆர்யாவை 22 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல், அடுத்த ஓவரில் பிரப்சிம்ரனையும் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.
தொடக்க வீரர்கள் இருவரும் அவுட்டாகி வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்கோர் போர்டில் எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாமல் 10 பந்துக்கு 6 ரன்கள் அடித்து நடையை கட்டினார். உடன் பேட்டிங் செய்யவந்த வதேராவும் ரன்அவுட் மூலம் வெளியேற, 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப்.
என்னதான் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ஜோஸ் இங்கிலீஸ், ரன்வேகத்தை குறையவிடாமல் பார்த்துக்கொண்டார். ஆனால் 14வது ஓவரை வீசவந்த லெக் ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா, அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்கிலீஸை போல்டாக்கி வெளியேற்றினார். உடன் களத்திற்கு வந்த ஸ்டொய்னிஸின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்த சுயாஷ், பஞ்சாப் அணிக்கு அடிக்குமேல் அடிகொடுத்தார்.
அதற்குமேல் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்சிபி அணி பஞ்சாபை எழவே விடாமல் நசுக்கியது. இறுதிவரை களத்திலிருந்தாலும் ஷஷாங் சிங்கால் 33 பந்தில் 31 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசியாக வந்த மார்கோ யான்சன் 2 சிக்சர்களை பறக்கவிட 20 ஓவர் முடிவில் 157 ரன்களை மட்டுமே அடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
படிக்கல்லின் அதிரடியால் வென்ற ஆர்சிபி!
158 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களத்திற்கு வந்த ஆர்சிபி அணிக்கு முதல் ஓவரிலேயே பிலிப் சால்ட்டை 1 ரன்னில் வெளியேற்றிய அர்ஷ்தீப் சிங் அதிர்ச்சி கொடுத்தார். என்னதான் விரைவாகவே விக்கெட்டை இழந்தாலும் இம்பேக்ட் வீரராக களத்திற்கு வந்த படிக்கல் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவந்தார்.
ஒருமுனையில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 61 ரன்கள் அடித்து அசத்த, இறுதிவரை நிலைத்துநின்று விளையாடிய விராட் கோலி 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 73 ரன்கள் அடித்து ஆர்சிபி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்த பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 73 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவிய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டியில் 59வது அரைசதத்தை பதிவுசெய்த விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரராக மாறி சாதனை படைத்தார். 59 அரைசதங்களும், 8 சதங்களும் அடித்திருக்கும் விராட் கோலி 67முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் 66முறை அடித்த டேவிட் வார்னர் இடம்பிடித்துள்ளார்.
மைதானத்திலேயே பட்டிதாரை கடுமையாக திட்டிய கோலி!
போட்டியின் 16வது ஓவரின் 4வது பந்தில் லெக் சைடில் பந்தை தட்டிவிட்ட விராட்கோலி 2 ரன்களுக்கான அழைப்பை கொடுத்துவிட்டு வேகமாக ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்த கேப்டன் ரஜத் பட்டிதார், ஒரு ரன்னோடு நின்றுவிட்டு பந்தை வேடிக்கை பார்த்துகொண்டிருக்க, விராட் கோலி 2வது ரன்னையே முடித்துவிட்டார். இரண்டு வீரர்களும் ஒரே பக்கத்தில் இருக்க, ரன் அவுட் கிட்டத்தட்ட முடிவானது.
ஆனால் பந்தை டைரக்ட்டாக அடிக்க முயன்ற ஸ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட்டை தவறவிட்டார். இதில் கோவமடைந்த விராட் கோலி, களத்திலேயே ரஜத் பட்டிதாரை கடுமையாக திட்டத்தொடங்கிவிட்டார். இதைப்பார்த்த சில ரசிகர்கள் விராட் கோலியின் ஆக்ரோசமான அணுகுமுறையை விமர்சித்தாலும், சில ரசிகர்கள் ரஜத் பட்டிதாரையும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.