rcb vs mi
ஆர்சிபி vs மும்பைcricinfo

FINAL-ஐ மிஞ்சிய விறுவிறுப்பான ஆட்டம்.. கடைசிவரை எகிறிய Heart Beat.. மும்பை கோட்டையை தகர்த்தது RCB!

2025 ஐபிஎல் போட்டியில் வான்கடே மைதானத்தில் வைத்து மும்பை அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
Published on

ஐபிஎல் வரலாற்றில் சில போட்டிகள் மட்டும்தான் இரண்டு அணி ரசிகர்களையும் இறுதிப்பந்துவரை சீட் நுனியில் அமரவைத்து படபடப்போடு போட்டியை பார்க்கவைக்கும். சில போட்டிகளில் தான் பந்துக்கு பந்து ஆட்டமானது இரண்டு அணியின் பக்கமும் மாறிக்கொண்டே இருக்கும், இறுதிவரை பவுலர்கள் தங்களை நிரூபிக்க போராடிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு தலைசிறந்த போட்டியை தான் இன்றைய நாளில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விருந்தாக படைத்தன.

4 போட்டிகளில் விளையாடி மூன்றில் தோற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை தேடி தங்களுடைய சொந்த மண்ணான வான்கடே மைதானத்தில் ஆர்சிபிக்கு எதிராக களம்கண்டது. அவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும்விதமாக நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து மீண்டுவந்து மும்பை அணியில் இடம்பிடித்தார்.

ஆனால் 2025 ஐபிஎல் கோப்பை வெல்லக்கூடிய அணியாக பார்க்கப்படும் ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸை அவர்களின் கோட்டையான வான்கடேவில் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கியது.

221 ரன்கள் குவித்த ஆர்சிபி..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்ய ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து அரைசதமடித்து அசத்தினார். விராட் கோலி-பும்ரா இடையேயான மோதல் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு கவனம் ஈர்த்த நிலையில், பும்ராவை எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சரை பறக்கவிட்ட கோலி கலக்கிப்போட்டார்.

virat kohli
விராட் கோலிcricinfo

ஒருபக்கம் 42 பந்தில் 67 ரன்கள் அடித்து விராட் கோலி மிரட்டிவிட, மறுமுனையில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய படிக்கல் 37 ரன்கள் அடித்து சம்பவம் செய்தார்.

ரஜத் பட்டிதார்
ரஜத் பட்டிதார்

இருவரும் வெளியேறினாலும் ஒருவர் போனால் ஒருவர் என களத்திற்கு வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் மும்பை அணி பவுலர்களுக்கு சிக்சர்களாக பறக்கவிட்டு மைதானத்தை சுற்றிக்காட்டினார். 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 32 பந்தில் 64 ரன்கள் அடித்து போட்டியையே தலைகீழாக திருப்பிய பட்டிதார் மும்பை அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.

ஜிதேஷ் சர்மா
ஜிதேஷ் சர்மா

’ஆனால் அவர் அடிச்சதெல்லாம் அடியே இல்லையென’ கடைசியாக வந்த ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்தது மட்டுமில்லாமல் 19 பந்தில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டி 40 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 221 ரன்கள் என்ற அபாரமான டொட்டலை குவித்தது ஆர்சிபி அணி.

மோசமாக தொடங்கிய மும்பை..

மும்பை வான்கடேவில் 213 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யப்பட்டதே இல்லை என்பதால், மும்பை இந்தியன்ஸ் அணி என்ன செய்யப்போகிறது என்ற பெரிய கவலை மும்பை ரசிகர்களுக்கு எழுந்தது. கவலையை மேலும் அதிகரிக்கும் விதமாக தொடக்க வீரராக களமிறங்கிய ஹிட்மேன் ரோகித் சர்மா, யஷ் தயாள் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார்.. அவரைத்தொடர்ந்து ரியான் ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் வரிசையாக நடையை கட்ட, 9.4 ஓவரில் 79 ரன்கள் மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மும்பை அணி.

ஆர்சிபி 2025
ஆர்சிபி 2025

போதாக்குறைக்கு சூர்யகுமார் யாதவிற்கும் பேட்டில் பந்து படாமல் 26 பந்தில் 28 ரன்கள் அடித்து வெளியேற கடைசி 9 ஓவரில் 133 ரன்கள் தேவை என்ற கடினமான நிலைக்கு சென்றது போட்டி. இங்கிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியால் நிச்சயம் வெல்லவே முடியாது என்ற நிலை உருவானது. ஆர்சிபி அணியின் லெக் ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா ரன்னையே விட்டுக்கொடுக்காமல் மேலும் மும்பை அணியின் நம்பிக்கையை உடைத்துகொண்டிருந்தார்.

இறுதிவரை அனல்பறந்த ஆட்டம்..

ஆனால் ”யார் அடிக்கலனா என்ன நான் அடிக்கிறன், நின்னு வேடிக்கை பாருங்க” என களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பண்டியா 8 பந்தில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டி வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் திலக் வர்மா போட்டிப்போட்டுக்கொண்டு சிக்சர்களாக பறக்கவிட, அடுத்த 3 ஓவரில் 22 ரன்கள், 19 ரன்கள், 17 ரன்கள் என வெளுத்துவாங்கிய இந்த ஜோடி ஆர்சிபி அணிக்கு பயத்தை காட்டியது.

ஒவ்வொரு ஓவருக்கும் 12, 10 ரன்கள் என வந்துகொண்டே இருக்க ஆர்சிபியின் எந்த பவுலராலும் இவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை, 33 பந்தில் 85 ரன்கள் குவித்து மிரட்டிய இந்த ஜோடி ஆட்டத்தை கடைசி 18 பந்துக்கு 41 ரன்கள் என்ற நிலைக்கு எடுத்துவந்தது.

ஹர்திக்
ஹர்திக்

எந்தப்பக்கம் வேண்டுமானாலும் போட்டி செல்லலாம் என்ற நிலைமைக்கு ஆட்டம் மாற, இரண்டு அணி ரசிகர்களுக்கும் ஹார்ட் பீட் அதிகமாக அடிக்க ஆரம்பித்தது. ஆர்சிபிக்கு இந்த ஜோடியை பிரிக்க வேண்டும், மும்பைக்கு இரண்டு பேரில் ஒருவர் நிலைத்துநின்று போட்டியை முடித்துதர வேண்டும் என்ற நிலை உருவாக, யார் பக்கம் வெற்றி செல்லப்போகிறது என்ற படபடப்பான கட்டத்திற்கு ஆட்டம் சென்றது. ஆனால் 18வது ஓவரில் திலக் வர்மாவை புவனேஷ்குமாரும், 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவை ஹசல்வுட்டும் அடுத்தடுத்து வெளியேற்ற ஆர்சிபி ரசிகர்கள் ‘அப்பாடா’ என பெருமூச்சு விட்டனர்.

திலக் வர்மா
திலக் வர்மா

8 பந்துக்கு 26 ரன்கள் என்ற நிலை இருந்தபோது சிக்சரை பறக்கவிட்ட மிட்செல் சாண்ட்னர், இறுதி 6 பந்துக்கு 19 ரன்கள் என்ற எட்டக்கூடிய நிலைக்கு போட்டியை மாற்றினார். இன்னும் முடியலையா என்ற ஆச்சரியத்திற்கே போட்டி செல்ல, இறுதிஓவரை சிறப்பாக வீசிய க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆர்சிபி அணிக்கு வெற்றியை உறுதிசெய்தார். முடிவில் கடைசிவரை போராடிய மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆர்சிபி 2025
ஆர்சிபி 2025

10 ஆண்டுகளாக வான்கடேவில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த போராடி வந்த ஆர்சிபி அணி, 10 ஆண்டாக மும்பை கட்டி எழுப்பிய கோட்டையை தகர்த்து பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது. முதலில் ஈடன் கார்டனில் கொல்கத்தாவை வீழ்த்திய ஆர்சிபி அணி, அதற்குபிறகு 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் வைத்து சென்னை அணியை சம்பவம் செய்தது. அதனைத்தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடேவில் மும்பையையும் வீழ்த்தி, மீதமிருக்கும் அனைத்து அணிகளுக்கும் ‘நாங்க வர்றோம்’ என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com