ரோகித், விராட் ஓய்வு.. இந்தியாவுக்கு இழப்பா? அஸ்வின் சொல்வது என்ன?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான விராட் கோலியும் ஓய்வு பெற்றார். இருவரும் டெஸ்ட்டிலிருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவிர, இதுதொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின், “இருவரும் ஒன்றாக ஓய்வு பெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. எனினும், இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு சோதனையான நேரமாக இருக்கும். அதேநேரத்தில், உண்மையிலேயே இப்போது கௌதம் கம்பீர் சகாப்தத்தின் தொடக்கமாகும். இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும், பும்ரா மிகவும் மூத்த வீரராக இருப்பார். அவர் கேப்டன்சி விருப்பங்களில் ஒருவர் என்பது தெளிவாகிறது; அவர் கேப்டன்சிக்கு தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் தேர்வாளர்கள் அவரது உடல் திறனைப் பொறுத்து ஒரு முடிவை எடுப்பார்கள்.
இங்கிலாந்து தொடரில் அவர்களுடைய ஓய்வு நிச்சயமாக ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கும். அனுபவத்தை வாங்க முடியாது. குறிப்பாக இது போன்ற சுற்றுப்பயணங்களில். விராட்டின் ஆற்றலும் ரோஹித்தின் அமைதியும் தவறவிடப்படும். கடந்த 10-12 ஆண்டுகளில் இந்தியாவிற்கு டெஸ்ட் போட்டிகள் மிகச்சிறந்த வடிவமாக இருந்து வருகிறது. ஆனால் தலைமைத்துவத்திற்காக, ரோஹித் இங்கிலாந்து தொடர் வரை விளையாடியிருக்க வேண்டும், அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தால், அவர் தொடர்ந்து தலைமைத்துவத்தை வழங்கியிருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.