"லாராவின் நம்பிக்கையை பொய்யாக்கமாட்டோம் என்று கூறியிருந்தேன்" - ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும், வங்கதேசத்தையும் வீழ்த்தி வரலாற்றை அரங்கேற்றியிருக்கிறது ரஷீத் கானின் ஆப்கானிஸ்தான் அணி. இதைப் பற்றிப் பேசியிருக்கும் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் என்ன சொல்லியிருக்கிறார்? பார்க்கலாம்...
ரஷீத் கான்
ரஷீத் கான்ட்விட்டர்

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்று சரித்திரம் படைத்திருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும், வங்கதேசத்தையும் வீழ்த்தி இந்த வரலாற்றை அரங்கேற்றியிருக்கிறது ரஷீத் கானின் அணி. இதைப் பற்றிப் பேசியிருக்கும் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான், “இந்த வெற்றி எங்கள் நாட்டினரைப் பெருமைப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “செமி ஃபைனல் சாதாரணமாக இருக்கப்போவதில்லை. இது ஆப்கானிஸ்தானில் இருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக விளங்கப்போகிறது. ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. அண்டர் 19 லெவலில் இதற்கு முன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறோம். ஆனால் சீனியர் லெவலில் இப்படியொரு விஷயம் நடந்தது இல்லை.

அரையிறுதி என்ன, சூப்பர் 8 சுற்றுக்கே இப்போதுதான் முதல் முறையாக முன்னேறியிருந்தோம். இதையெல்லாம் என்னால் நம்பவே முண்டியவில்லை. விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும்போது எங்களால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த உலகக் கோப்பையில் நாங்கள் அதைத்தான் செய்தோம். உண்மையில் சில கடினமான தருணங்கள் இருந்தன. ஆனால், அதற்கெல்லாம் நாங்கள் தளர்ந்துவிடவில்லை. எப்போதுமே திடமாக கம்பேக் கொடுக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தோம்.

ஒரு அணியாக நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறியதை நினைத்தால் இன்னும் அது கனவு போல இருக்கிறது. இந்த இடத்துக்கு நாங்கள் வந்ததற்கு நல்லபடியாக இந்தத் தொடரை தொடங்கியதுதான் என்று நினைக்கிறேன். நியூசிலாந்து அணியை நாங்கள் தோற்கடித்தபோது அந்த நம்பிக்கை பிறந்தது. இன்னும் இதை நம்ப முடியவில்லை. எனக்குள் எழும் எண்ணங்களை சரியாக சொல்ல வார்த்தைகளே இல்லை. நிச்சயமாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைவருமே இதை நினைத்து எல்லையற்ற சந்தோஷம் அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று ஒரே ஒருவர் மட்டும்தான் கணித்திருந்தார். அவர், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரயன் லாரா. எங்கள் வரவேற்பு விருந்தின் போது நான் அவரிடம், 'உங்கள் நம்பிக்கையை நாங்கள் பொய்யாக்க மாட்டோம். நீங்கள் கணித்தது சரிதான் என்று நாங்கள் நிரூபிப்போம்' எனக் கூறினேன். அப்படியே செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் குறைவான ஸ்கோர் எடுத்திருந்தாலும், சிறப்பாக டிஃபண்ட் செய்தது ஆப்கானிஸ்தான். இன்னிங்ஸுக்கு இடையே தங்கள் அணியின் திட்டம் என்னவாக இருந்தது என்று ரஷீத் கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இந்த ஆடுகளத்தில் 130 முதல் 135 வரை எடுத்தால் அது வெற்றி பெறுவதற்குப் போதுமான ஸ்கோராக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்திருந்தோம்.

ஆனால் இங்கு முன்பு நடந்திருந்த சில போட்டிகளை நாங்கள் பார்த்திருந்ததில் இந்த ஆடுகளத்தில் 115 ரன்களே சிறந்த ஸ்கோராக இருந்தது. அதனால் எல்லாமே மனநிலையைப் பொறுத்ததுதான். அவர்கள் 12 ஓவர்களில் வெற்றி பெற வேண்டிய தேவை இருந்ததால் நிச்சயம் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தோம்.

அவர்களுக்கு ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து பந்துவீசினால் நிச்சயம் அவர்களை ஆல் அவுட் ஆக்க முடியும் என்று நம்பினோம். அதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை என்று நம்பினோம். எங்கள் திட்டங்களில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். ஆனால் அந்த 100 சதவிகித உழைப்பைக் கொட்டுவது எங்கள் கையில்தான் இருக்கிறது.

மழையோ, தூரலோ எதுவும் எங்கள் கையில் இல்லை. எங்கள் நாட்டில் இருக்கும் மக்களுக்காக, அவர்கள் மகிழ்ச்சிக்காக நாங்கள் எங்கள் முழு உழைப்பையும் கொட்டவேண்டும் என்று நினைத்திருந்தோம். எங்கள் நாட்டை பெருமப்படுத்த நினைத்தோம். அதுதான் நாங்கள் இன்னிங்ஸுக்கு இடையே பேசிய விஷயம். அதன்பிறகு எல்லோரும் அற்புதமாக செயல்பட்டார்கள்" என்று கூறினார்.

மேலும், "பவர்பிளேவில் சில விக்கெட்டுகள் எடுத்தது ஸ்பின்னர்கள் எங்களுடைய வேலையை எளிதாக்கியது. டி20 போட்டிகளில் நல்லபடியாக தொடங்கிவிட்டால், அதன்பிறகு ஸ்பின்னர்கள் பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்யத் தொடங்கிடுவார்கள். அது எங்களுக்கு முன்பெல்லாம் சரியாக அமைந்திடவில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு இருக்கும் தரமான இந்த வேகப்பந்துவீச்சாளர்களால் அது அமையப்பெற்றிருக்கிறது.

அவர்கள் அவ்வளவு வேகமாகப் பந்துவீசக் கூடியவர்கள் இல்லை என்றாலும் மிகவும் திறமையானவர்கள். டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் உங்களுக்குத் திறமைகள் இருந்தால் உங்களால் சிறப்பாகச் செய்ய முடியவில்லை. அவர்கள் இந்த உலகக் கோப்பையில் எங்களுக்குத் தொடர்ச்சியாக நல்ல தொடக்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது" என்று தங்கள் அணியின் எழுச்சிக்கு வேகப்பந்துவீச்சாளர்களை முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டார் ரஷீத் கான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com