புதிய சிம் வாங்கிய சத்தீஸ்கர் நபர்.. Call செய்த விராட் கோலி.. முறையிட்ட ரஜத் படிதார்!
2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றார். இந்த நிலையில், சத்தீஸ்கரின் காரியாபந்தின் மடகான் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மணீஷ் பிசி, என்பவர், கடந்த ஜூன் மாத இறுதியில் சிம் ஒன்றைப் புதிதாக வாங்கியுள்ளார். அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி கேப்டன் ரஜத் படிதார் பயன்படுத்தியது என்பது அவருக்குத் தெரியாது. ஆறு மாதங்களுக்கும் மேலாகச் செயல்படாத எண்கள், நிறுவனத்தின் கொள்கையின்படி, புதிய வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒதுக்கப்படுகின்றன.
அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் முந்தைய மொபைல் எண் நீண்ட நாட்களுக்கும் மேலாகச் செயல்படாமல் இருந்ததால், அந்த நம்பர் செயல் இழந்து வேறொருவருக்குப் புதிதாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே அந்த நம்பர் மூலம் தனது வாட்ஸ்அப் கணக்கை மணீஷ் பிசி உருவாக்கியுள்ளார். அப்போது பழைய சுயவிவரப் படி ரஜத் படிதாரின் உருவப்படம் வந்துள்ளது. ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தனக்கான வாட்ஸ் அப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளார். இதற்கிடையே பிரபல நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ், யாஷ் தயாள் மற்றும் பிற ஆர்சிபி வீரர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களிடமிருந்து அவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. எனினும், இரண்டு வாரங்களுக்கும் மேலாக, உண்மையில் விஷயம் தெரியாமல் அவர்களிடம் மணீஷ் வேடிக்கையாக விளையாடியுள்ளார்.
இதற்கிடையில், தனது வாட்ஸ்அப் கணக்கை இனி அணுக முடியாது என்பதை உணர்ந்த படிதார், மத்தியப் பிரதேச சைபர் செல்லில் புகார் அளித்தார். விசாரணையில் மணிஷ் விரைவாகத் தனது தொலைபேசி எண்ணை மறு ஒதுக்கீடு செய்திருப்பது தெரியவந்தது. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மறு ஒதுக்கீடு கொள்கையின் கீழ் அந்த எண் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து, தற்போது அதே சிம் கொண்ட எண் ரஜத் படிதாருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.