CSK vs RR | சென்னையை மீண்டும் வெச்சி செய்த சேட்டா! கேப்டன் கூலையே சூடாக்கிய சி.எஸ்.கே வீரர்கள்!

கடைசிப் பந்தில் டூபேவின் விக்கெட்டையும் தூக்கினார் குல்திப் யாதவ். முன்னாடியே இதை பண்ணியிருந்தா தோனியோட பேட்டிங்கையாவது பார்த்திருப்போமே என புலம்பி தள்ளினார்கள் சென்னை ரசிகர்கள்.
CSK vs RR
CSK vs RR- PTI

இதே சீசனில் சேப்பாக்கம் கோட்டையை சேட்டாவின் அணி, தகர்த்தெறிந்து வெற்றி வாகை சூடியது. ‘அன்புடன் எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ’ என சென்னை ரசிகர்களே வெறியாகி விட்டார்கள். அதற்கு பழிக்குப்பழி வாங்க ஜெய்பூர் கோட்டையை துவம்சம் செய்ய கிளம்பிச் சென்ற சூப்பர் கிங்ஸ், நினைத்தபடி பழி வாங்கியதா இல்லை, கோட்டைக்குள் வைத்து அடி வாங்கியதா? என்ன நடந்தது நேற்று? பார்ப்போம்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் ஜெயிக்க, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் கேப்டன் சாம்சன். ஜோஸ் - வால் ஜோடி ராயல்ஸின் இன்னின்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் ஆகாஷ் சிங். முதல் இரண்டு பந்துகள் பவுண்டரிக்கு சீறிப் பாய்ந்தன. ஆகாஷ் சிங் அரண்டு விட்டார். அடுத்த பந்தில் ஒரு புள்ளி வைத்துவிட்டு, அதற்கடுத்து பந்து பவுண்டரியில் கோலம் போட்டார் ஜெய்ஸ்வால். அதி அற்புதமான தொடக்கம்!

CSK vs RR
CSK vs RR- PTI

தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில், 2 பவுண்டரிகள் அடித்தார் பட்லர். மீண்டும் வந்தார் அகாஷ் சிங். மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் ஜெய்ஸ்வால். அதே ஓவரில் இன்னும் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என தெறித்தது. தீக்‌ஷானவை அழைத்தார் தோனி. அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே. தேஷ்பாண்டே வீசிய 5வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார் ஜெய்ஸ்வால். இப்போது தீக்‌ஷானாவையும் விட்டு வைக்காமல், அவரது ஓவரிலும் 2 பவுண்டரிகளை வெளுத்தார் பட்லர்.

பவர்ப்ளேயின் முடிவில் 64/0 என ராயலாக ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான்.

ஜடேஜா வீசிய 7வது ஓவரில், இன்னொரு சிக்ஸர் பறந்தது. 26 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் அவர். தீக்‌ஷனாவின் 8வது ஓவரில், பந்து பிட்சில் இடது இன்டிக்கேட்டர் போட்டு வலது பக்கம் திரும்ப, பேட்ஸ்மேன் பட்லர், கீப்பர் தோனி இருவரும் தவறவிட்டார்கள். பைஸில் ஒரு பவுண்டரி. அதே ஓவரில், ஒரு கேட்சும் டிராப் செய்தார் தோனி. ஜடேஜா வீசிய 9வது ஓவரில், லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பட்லர்! சுழற்பந்துக்கு தடுமாறுகிறது ராயல்ஸ் என்பதை உனர்ந்த தோனி, மொயின் அலியை அழைத்துவந்தார். 86 மீட்டருக்கு ஒரு சிக்ஸ் அடித்தார் ஜெய்ஸ்வால். 10 ஓவர் முடிவில் 100/1 என சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான் அணி.

CSK
CSK- PTI

ஜடேஜாவின் 11வது ஓவரில் 4 ரன்கள். தலயின் செல்லப்பிள்ளை பதீரனாவின் 12வது ஓவரில், பவுண்டரிகள் ஏதுமின்றி 9 ரன்கள் மட்டுமே. 13வது ஓவரை வீசவந்தார் ஜடேஜா. ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியும் கேப்டன் சாம்சன் ஒரு பவுண்டரியும் அடித்து பிரித்தனர். தேஷ்பாண்டேவின் 14வது ஓவரில், சாம்சன் விக்கெட் காலி. அதே லாங் ஆனில் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அப்போதும் அடங்காத ஜெய்ஸ்வால் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார். தேஷ்பாண்டேவுக்கு ஆத்திரம் தலைக்கேற, அடுத்த பந்தே ஜெய்ஸ்வால் அவுட். பந்தை கொடியேற்றி ரஹானேவின் கையில் சாக்லேட்டை கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். 43 பந்துகளில் 77 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 15 ஓவர் வீசிய மொயின் அலி, 7 ரன்கல் மட்டுமெ கொடுத்தார். 15 ஓவர் முடிவில் 139/3 என கொஞ்சம் தடுமாறியிருந்தது ராயல்ஸ்.

சென்னை ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள்.
CSK vs RR
CSK vs RRPTI

பதீரனாவின் பதினாறாவது ஓவரில், பதறாமல் ஒரு பவுண்டரி அடித்தார் ஜுரேல். 17வது ஓவரை வீசவந்த தீக்‌ஷானா, முதல் பந்திலேயே ஹெட்மயரின் விக்கெட்டைத் தூக்கினார். அடுத்து களமிறங்கிய படிக்கல், அதே ஓவரில் ஒரு பவுண்டரி தட்டினார். பதீரனாவின் 18வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் படிக்கல். 19வது ஓவரை வீசினார் தேஷ்பாண்டே. படிக்கல் ஒரு பவுண்டரி, ஜுரேல் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார்கள். கடைசி ஓவரை பதீரனாவே வீச, முதல் பந்தே சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஜுரேல். அடுத்த பந்து பவுண்டரி. 4வது பந்தில், படிக்கல் ரன் அவுட். 5வது பந்தில் பவுண்டரி, 6வது பந்தில் மூன்று ரன்கள்.

இந்த ஆட்டம் முழுக்கவே கடுகடுவென இருந்தார் தோனி. கேப்டன் கூலையே கேழ்வரகு கூழைப் போல் சூடாக்கினார்கள் சென்னை வீரர்கள்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கை நோக்கி தொடங்கியது ருத்து - கான்வே ஜோடி. முதல் ஓவரை சந்தீப் சர்மா வீசினார். ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு பவுண்டரி கிடைத்தது கான்வேவுக்கு. இடது கை வேகபந்து வீச்சாளர் குல்திப் யாதவ், 2வது ஓவரை வீசினார். வெறும் 5 ரன்கள் மட்டுமே. சந்தீப் சர்மாவின் 3வது ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே.

சென்னை ரசிகர்களுக்கு இந்த ஓவரிலேயே ஆட்டத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது.

ஹோல்டர் வீசிய 4வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார் ருதுராஜ். அஸ்வின் வீசிய 5வது ஓவரில், ஒரு பவுண்டரியும் அடித்தார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீசிய ஜாம்பா, ருத்துவுக்கு ஒரு பவுண்டரி, கான்வேவுக்கு ஒரு விக்கெட் பார்சல் செய்தார்.

பவர்ப்ளேயின் முடிவில் 42/1 என தவழ்ந்து கொண்டிருந்தது சென்னை.
CSK
CSK- PTI

7வது ஓவரை வீசினார் சஹல். ருதுவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. அஸ்வின் - சஹல் - ஜாம்பாவை வைத்தே நம்மை முடித்துவிடப் போகிறார் என யோசிக்கையில், குல்திப் யாதவ்வை மீண்டும் எடுத்து வந்தார் சாம்சன்! அந்த ஓவரில் ஒரு பவுண்டரியும் 9 ரன்கள் கிடைத்தது. அடுத்த சஹலை இறக்குவார் எனப் பார்த்தால், அஸ்வினை இறக்கிவிட்டார்.

பவுண்டரிகள் ஏதுமின்றி 9 ரன்கள். 10வது ஓவரை வீசினார் ஜாம்பா. 2வது பந்திலேயே கெய்க்வாட் அவுட்! 10 ஓவர் முடிவில் 72/2 என தள்ளாடியது சென்னை அணி.

தூக்கத்தில் சென்னை ரசிகர்களின் கண்கள் சொருகியது. இன்னும் 60 பந்துகளில் 131 ரன்கள் தேவை. பல பேர் டி.வியை அணைத்துவிட்டு படுத்தேவிட்டார்கள்!
CSK vs RR
CSK vs RR- PTI

11வது ஓவரில் ரஹானேவின் விக்கெட்டைக் கழட்டினார் அஸ்வின். லாங் ஆனில் கேட்ச்! இம்பாக்ட் வீரராக களமிறங்கிய ராயுடு, சந்தித்த 2வது பந்திலேயே ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு முட்டையோடு நடையைக் கட்டினார். அதற்கு ஆகாஷ் சிங் ஆடியிருந்தால் கூட, ஓரிரண்டு ரன்களாவது வந்திருக்கும் என வெறியானார்கள் சென்னை ரசிகர்கள். ஹோல்டரின் 12வது ஓவரில், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் மொயின். அடுத்து சஹல் வீசிய 13வது ஓவரிலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார்.

இன்னொரு பக்கம், அஸ்வின் வீசிய 14வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு கடாசினார் டூபே. இந்த ஜோடி ஜாம்பாவையும் விட்டு வைக்கவில்லை. 15வது ஓவர் வீசிய ஜாம்பேவை சிக்ஸருடன் வரவேற்ற டூபே, சிங்கிள் தட்டி மொயினிடம் அனுப்பிவைத்தார். மொயின் ஒரு பவுண்டரி தட்டினார். ஆனால், அடுத்த பந்தே அன்டர் எட்ஜாகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கிளம்பிவிட்டார் மொயின் அலி.

சென்னை ரசிகர்களுக்கு நெஞ்சு வலி!

15 ஓவர் முடிவில் 125/5 என மீண்டிருந்தது சென்னை. 30 பந்துகளில் 78 ரன்கள் தேவை.

சந்தீப்பின் 16வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. ஹோல்டர் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என சிதறடித்தார் டூபே. சந்தீப்பின் 18வது ஓவரில், ஜடேஜா இரண்டு பவுண்டரிகள் அடித்தார். 12 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஹோல்டர் வீசிய 19வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் டூபே. அந்த ஓவரில் ஜடேஜா ஒரு பவுண்டரி அடித்தும் 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 6 பந்துகளில் 37 ரன்கள் தேவை. குல்திப் யாதவ் வந்தார்.

CSK vs RR
CSK vs RRPTI

அற்புதமாக பந்து வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து, கடைசிப் பந்தில் டூபேவின் விக்கெட்டையும் தூக்கினார்.

முன்னாடியே இதை பண்ணியிருந்தா தோனியோட பேட்டிங்கையாவது பார்த்திருப்போமே என புலம்பி தள்ளினார்கள் சென்னை ரசிகர்கள்.

32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை மீண்டும் வெச்சி செய்தார் சேட்டா.

43 பந்துகளில் 77 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com