ஒரே ஆட்டத்தில் வெளியேறிய 2 அணிகள்.. வாழ்வா சாவா ஆட்டமாக மாறிய RCB - CSK போட்டி! LSG-ஐ காலி செய்த DC!

லக்னோ அணியை 19 ரன்னில் வீழ்த்தியதின் மூலம் தொடரிலிருந்தே வெளியேற்றியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
LSG vs DC
LSG vs DCpt

2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 13 போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில், முதல் 4 இடத்தை பிடிக்கப்போகும் அணிகள் எவை என்பதை நோக்கி ஐபிஎல் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் கட்டாயம் வெல்லவேண்டும் என்ற போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து நேற்று விளையாடியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஏற்கெனவே ஆர்சிபி அணியுடன் தோற்றதால் வாய்ப்பை தவறவிட்டிருக்கும் டெல்லி அணி நல்ல ரன்ரேட்டில் வெல்லவேண்டிய சூழலில் நேற்று களம்கண்டது.

அதிரடியில் மிரட்டிய போரல்!

டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, ரன்களை வாரிவழங்கும் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. காட்டடி அடித்து எதிரணிகளை மிரட்டி வரும் ஜாக் பிரேசரை 0 ரன்னில் வெளியேற்றிய லக்னோ அணி, ஒரு தரமான தொடக்கத்தை எடுத்துவந்தது. ஆனால் ‘ஃப்ரேசர் போனால் என்ன நான் இருக்கிறேன்’ என சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு லக்னோ பந்துவீச்சாளர்களுக்கு மைதானத்தை சுற்றிக்காட்டிய அபிஷேக் போரல் மிரட்டிவிட்டார். 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வாணவேடிக்கை காட்டிய போரல் 21 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். உடன் சாய் ஹோப்பும் அவருடைய பங்கிற்கு 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்ய, 2 விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி அசத்தியது.

abishek porel
abishek porel

விக்கெட்டை தேடிய லக்னோ அணி சாய் ஹோப்பை 38 ரன்னிலும், அபிஷேக் போரலை 58 ரன்னிலும் வெளியேற்றி கம்பேக் கொடுத்தது. 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய பந்துவீச்சில் இழுத்துப்பிடித்த லக்னோ அணி, 200 ரன்களுக்கு மேல் டெல்லி அணி செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. ஆனால் கடைசியாக வந்து காட்டடி அடித்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 25 பந்தில் 57 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 208 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

44 ரன்னுக்கு 4 விக்கெட் காலி!

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என பேட்டிங் ஆடிய லக்னோ அணிக்கு, கேப்டன் கேஎல் ராகுலை 5 ரன்னிலும், டி-காக்கை 12 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றிய இஷாந்த் சர்மா அதிர்ச்சி கொடுத்தார். உடன் களத்திற்கு வந்த அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸை 5 ரன்னில் வெளியேற்றிய அக்சர் பட்டேல் அடிக்கு மேல் அடிகொடுத்தார். அடுத்தவந்த தீபக் ஹூடாவும் நானும் வருகிறேன் என 0 ரன்னில் நடையை கட்ட, 44 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி நிலைகுலைந்தது.

kl rahul
kl rahul

‘இவங்க இன்னும் திருந்தல மாமா’ எனுமளவு பேட்டிங் ஆடிய லக்னோ அணியில், இம்பேக்ட் வீரராக வந்த ஆயுஸ் பதோனியும் 6 ரன்னுக்கு நடையை கட்டி லக்னோ ரசிகர்களை ஏமாற்றினார். வந்தவர்கள் எல்லாம் வரிசையாக பெவிலியன் திரும்பி கொண்டிருக்க, தனியொரு ஆளாக களத்தில் நின்ற நிக்கோலஸ் பூரனை மட்டும் டெல்லி அணியால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

இருக்கும் திறமையை எல்லாம் வெளிக்கொண்டுவந்த பூரன், 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வாணவேடிக்கை காட்டி 27 பந்தில் 61 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார்.

’விட்டா தனியாவே போட்டியை முடிச்சிடுவார் போல’ என பயந்த டெல்லி அணிக்கு, நிக்கோலஸ் பூரனை ஒரு அபாரமான கேட்ச் மூலம் வெளியேற்றிய அக்சர் பட்டேல் பெருமூச்சுவிட வைத்தார்.

ishant sharma
ishant sharma

அவ்வளவுதான்... அடித்துகொண்டிருந்த பூரனும் போயாச்சு, இனி டெல்லி அணி எளிதாகவே வென்றுவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 8வது வீரராக களத்திற்கு வந்த அர்ஷத் கான், யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.

கடைசிவரை போராடிய அர்ஷத் கான்!

கடைசி 4 ஓவர்களுக்கு 60 ரன்கள் தேவையென இருந்த போட்டியை, இரண்டே ஓவர்களில் 18 ரன்கள், 13 ரன்கள் என அடித்து தலைகீழாக திருப்பினார். 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பொளந்துகாட்டிய அர்ஷத் கான், கடைசி 2 ஓவரில் 29 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கே போட்டியை எடுத்துவர ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால் முக்கியமான தருணத்தில் மறுபுறம் இருந்த வீரர்களை வெளியேற்றிய டெல்லி கேபிடல்ஸ் அணி, அர்ஷத் கானை ஏமாற்றியது. இறுதியில் அர்ஷத் கான் 58 ரன்களில் நாட் அவுட்டில் முடித்தாலும், டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. ஆட்டநாயகனாக இஷாந்த் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

kl rahul - pant
kl rahul - pant
இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கோட்டைவிட்டுள்ளது. தான்வெளியேறியது மட்டுமில்லாமல் லக்னோ அணியையும் கூடவே அழைத்துச்சென்ற டெல்லி அணி, லக்னோ வீரர்களுக்கு ஒரு நிம்மதியில்லா இரவை பரிசாக வழங்கியுள்ளது.

Playoffs சென்ற ராஜஸ்தான்!

பிளே ஆஃப் ரேஸ்ஸில் இருந்த டெல்லி மற்றும் லக்னோ இரண்டு அணிகளும் வெளியேறியுள்ளதால், தற்போது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதும் லீக் போட்டியானது கிட்டத்தட்ட காலிறுதிப்போட்டியாகவே மாறியுள்ளது. அந்தபோட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ, அது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்பதால் வாழ்வா சாவா போட்டியாக அமையவிருக்கிறது. ஆர்சிபியா? சிஎஸ்கேவா? என தற்போதே ரசிகர்கள் அலப்பறையை கூட்டியுள்ளனர்.

Rajasthan Royals team
Rajasthan Royals teamSwapan Mahapatra

இந்த போட்டியின் முடிவின் மூலம் இரண்டாவது அணியாக பிளே ஆஃப்க்கு சைலண்ட்டாக தகுதிபெற்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com