ஐபிஎல் 2025| 6 ரன்னில் சிஎஸ்கே தோல்வி.. ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!
18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இன்றைய போட்டியில் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
81 ரன்கள் அடித்த நிதிஷ் ராணா..
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை இழந்தாலும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
82 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி பவர்பிளேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 36 பந்தில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என துவம்சம் செய்த நிஷிஷ் ராணா 81 ரன்கள் அடித்து அசத்தினார்.
ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் ராஜஸ்தான் அணி அடிக்கும் என்ற நிலை இருந்தபோது, சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது ராஜஸ்தான் அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார். நிதிஷ் ராணாவை 81 ரன்னில் அஸ்வினும், கேப்டன் பராக்கை 37 ரன்னில் பதிரானாவும் வெளியேற்ற 20 ஓவரில் 182 ரன்களுக்கு ராஜஸ்தானை கட்டுப்படுத்திய சிஎஸ்கே அணி.
6 ரன்னில் சிஎஸ்கே தோல்வி..
183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் சிறப்பான ஃபார்மில் இருந்துவரும் ரச்சின் ரவிந்திராவை 0 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் ஆர்ச்சர். விரைவாகவே முக்கியமான விக்கெட்டை இழந்த சிஎஸ்கே அணி, அடுத்த விக்கெட்டை இழக்க கூடாது என பவர்பிளேவில் பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
6 ஓவர் முடிந்தபோதே 11 ரன்கள் என நெட் ரன்ரேட் மாற சிஎஸ்கே அணி மீது அழுத்தம் அதிகமானது. அதற்கேற்றார் போல் திரிப்பாத்தி, துபே, விஜய் ஷங்கர் என அனைவரும் அடுத்தடுத்து வெளியேற சிஎஸ்கே அணி தடுமாறியது. ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ருதுராஜ் 64 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுக்க, ஹசரங்கா அவரை வெளியேற்றி ராஜஸ்தானின் வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தினார்.
கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் என போட்டி மாற 19வது ஓவரில் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் சேர்ந்து 19 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தனர். 20வது ஓவரின் தொடக்கத்திலேயே தோனியை ஒரு அபாரமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் ஹெட்மயர். அதற்குபிறகு வெற்றிக்காக போராடிய சிஎஸ்கே அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்துவீசிய ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.