ஆரம்பத்தில் அசத்தல்... தற்போது சொதப்பல்! மீண்டும் மோசமான சாதனையில் இடம்பிடித்த ராஜஸ்தான்!

ஐபிஎல்லைப் பொறுத்தவரை எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே மோதிய போட்டியிலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்PTI

ஐபிஎல் நடப்பு சீசன் அடுத்த சுற்றுக்கு எட்டும் வகையில், வேகம் பிடித்து வருகிறது. 10 அணிகளுக்கும் இன்னும் ஒரு சில போட்டிகளே எஞ்சியுள்ளன. அவற்றின் முடிவைப் பொறுத்தே பிளே ஆப் சுற்று முழுமை பெறும். அந்த வகையில், இன்று ஐபிஎல்லின் 60வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், டு பிளிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில், டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளிசிஸ் 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சிம்ரன் ஹெட்மெயரைத் தவிர (35 ரன்கள்) மற்றவர்கள் யாரும் பெங்களூரு பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து விளையாடாததால் அந்த அணி 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் 4 வீரர்கள் டக் அவுட் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, சந்தீப் சர்மாவும் ரன் எதுவும் எடுக்காமல், அதேநேரத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்றைய போட்டியில், 59 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம், ஐபிஎல்லில் குறைந்த ரன்கள் எடுத்த பட்டியலில் ராஜஸ்தான் அணி, மீண்டும் இடம்பிடித்துள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான் அணி, இதே பெங்களூருவுக்கு எதிராக 2009இல் 58 ரன்களில் சுருண்டு 2வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பெங்களூரு அணி கடந்த 2017ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களில் சுருண்டு முதல் இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஐபிஎல் சீசனில், முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று முன்னிலை வகித்து வந்த ராஜஸ்தான் 2வது போட்டியில் தோல்வியுற்றபோதும், அதற்குப் பிறகு ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து மீண்டும் புள்ளிப் பட்டியலுக்கு முன்னேறியது. ஆனால், தற்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை. மீண்டும் இறங்குமுகத்தில் உள்ளது. எப்படி, ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றதோ, அதுபோல் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தது. கடந்த போட்டியில் மீண்டும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் மேலெழுந்த ராஜஸ்தான், இன்று பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் குறைந்த ரன்கள் ஆல் அவுட்டாகி சோடை போயிருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ்rcb twitter page

தவிர புள்ளிப் பட்டியலிலிருந்தும் கீழே இறங்கியுள்ளது. இதுவரை, அவ்வணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று 6 இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு 7வது இடத்தில் இருந்த பெங்களூரு, இதில் நல்ல ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதையடுத்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com