MI vs DC போட்டியை அச்சுறுத்தும் மழை.. அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட்! வலைப் பயிற்சி ரத்து!
2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் 3 அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், மீதமிருக்கும் கடைசி ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இரண்டு அணியில் எந்த அணி தகுதிபெறும் என்ற விறுவிறுப்பான சூழலில், நாளைய வாழ்வா சாவா போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
நடப்பு ஐபிஎல் சீசனின் மிக முக்கியமான போட்டியாக MI vs Dc போட்டி பார்க்கப்படும் நிலையில், மழையால் நாளைய ஆட்டம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
நாளைய ஆட்டம் மழையால் கைவிடப்படுமா?
இந்திய வானிலை ஆய்வு மையமானது அடுத்த 4 நாட்களுக்கு மும்பை நகரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் இருப்பதால், மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் மும்பை மற்றும் டெல்லி அணிக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்படும் சூழலுக்கு சென்றுள்ளது.
நாளைய போட்டிக்கு முன்னதாக இன்று நடக்கவிருந்த வலைப்பயிற்சி அமர்வும் நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு கவலையை அதிகரித்துள்ளது. மும்பை முதலில் வலைப்பயிற்சியை முடித்ததாகவும், பின்பு டெல்லியின் வலைப்பயிற்சி ரத்துசெய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஒருவேளை நாளை நடக்கவிருக்கும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டால், இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அப்படி நடந்தால் தற்போது 13 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி 14 புள்ளிகளும், 14 புள்ளிகளுடன் இருக்கும் 15 புள்ளிகளும் பெறும். இது டெல்லி அணிக்கு பாதகமான சூழலையே ஏற்படுத்தும், அடுத்த போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு டெல்லி அணி செல்லும்.
ஒருவேளை நாளைய போட்டி முழுமையாக நடைபெற்று டெல்லி அணி வெற்றிபெற்றாலும், அடுத்த போட்டியிலும் கேபிடல்ஸ் அணி வெற்றிபெறவேண்டும். ஆனால் மும்பை அணி டெல்லியை வீழ்த்தினால், டெல்லி கேபிடல்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறும். எப்படி பார்த்தாலும் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பையை வீழ்த்துவதோடு, அடுத்த போட்டியையும் வெல்ல வேண்டும்.
மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லியை விட மும்பையின் கைகளே ஓங்கியுள்ளன. ஒருவேளை மும்பையை டெல்லி வீழ்த்தவேண்டுமானால், வான்கடேவில் 60 சராசரி வைத்திருக்கும் கேஎல் ராகுல் சிறந்த இன்னிங்ஸை விளையாட வேண்டும். கடந்த 4 போட்டிகளாக விக்கெட்டையே வீழ்த்தாத குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீச வேண்டும்.
அனைத்தையும் கடந்து MI vs DC இடையேயான போட்டி எப்படி செல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.