MI vs PBKS | நிர்வாகத்திற்கு செலவை ஏற்றிய அர்ஷ்தீப்... கடைக்குட்டி சிங்கம், வளர்ந்துடுச்சுப்பா...!

கடைசி ஓவரை வீசினார் சிறுவர் சிங். 3வது பந்து, மிடில் ஸ்டெம்ப் இரண்டாக உடைந்தது. அடுத்த புதிதாக கொண்டு வந்து ஊன்றிய ஸ்டெம்ப்பும் இரண்டாக உடைந்தது. ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு செலவை ஏற்றினார் அர்ஷ்தீப்
MI vs PBKS
MI vs PBKSKunal Patil

புள்ளப்பூச்சிக்கு கொடுக்கு முளைத்ததுபோல் திடீரென மூன்று வெற்றிகளை அள்ளிவிட்டது மும்பை அணி. ‘இந்த வெற்றி பயணத்தை தக்க வைக்க பஞ்சாப் அணியைத் தடையற தாக்குமா, இல்லை மீண்டும் தோற்குமா?’ எனும் வான்கடே மைதானமே நேற்று பதட்டத்தில் இருந்தது. டாஸ் வென்ற ரோகித், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

Mumbai Indians
Mumbai IndiansKunal Patil

ஷார்ட்டும் ப்ரப்சிம்ரனும் ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் அர்ஜூன் டெண்டுல்கர். வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். தன் தந்தைக்கு பிறந்தநாள் பரிசு வெயிட்டாக கொடுக்கப் போகிறார் என மும்பை ரசிகர்கள் முந்திரிக்கொட்டைத் தனமாக ஆரூடம் சொன்னார்கள். பெஹ்ரன்டார்ஃபின் 2வது ஓவரில் ஒரு பவுண்டரியைத் தட்டினார் ஷார்ட். 3வது ஓவரை வீசவந்தார் க்ரீன். 2வது பந்தில் ஒரு பவுண்டரியை விரட்டிய ஷார்ட், அடுத்த பந்திலேயே சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். பெஹ்ரன்டார்ஃபின் 4வது ஓவரை, சிக்ஸருடன் தொடங்கிய ப்ரப்சிம்ரன், அதே ஓவரில் இன்னொரு சிக்ஸரும் அடித்தார்.

`கொம்பன் இறங்கிட்டான்' எனும் பில்டப்போடு 5வது ஓவரை வீசவந்தார் ஆர்ச்சர். ஓவரின், 5வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டெய்டே. 6வது ஓவரில் சாவ்லா உருட்டி வீசிய போன்டாக்களை, பவுண்டரிக்கு பறக்கவிட்டனர் பேட்ஸ்மேன்கள் இருவரும். பவர்ப்ளேயின் முடிவில், 58/1 என சிறப்பாக தொடங்கியிருந்தது பஞ்சாப் அணி.

சின்னவர் மீண்டும் பந்து வீச வந்தார். எப்படியாவது, சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு விக்கெட்டை பிறந்தநாள் பரிசாக கொடுத்துவிட வேண்டுமென வெறிகொண்டு அலைந்தது மும்பை அணி. ஓவரின் கடைசிப்பந்தில் வலுவான ஒரு யார்க்கரை இறக்கி, ப்ரப்சிம்ரனை எல்.பி.டபிள்யு முறையில் அவுட் செய்தார் அர்ஜூன். அதே ஓவரில் டெய்டே ஒரு பவுண்டரியைத் தட்ட, மீண்டும் வெறியானார் அர்ஜூன்.

Arjun Tendulkar
Arjun TendulkarKunal Patil

8வது ஓவரை வீசிய சாவ்லா, 1 ரன் மட்டுமே கொடுத்தார். ஆர்ச்சர் வீசிய 9வது ஓவரில், 101 மீட்டருக்கு ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் லிவிங்ஸ்டோன். பஞ்சாப் ரசிகர்கள் முகத்தில் சிறுபுன்னகை எட்டிப்பார்த்தது. அடுத்த ஓவரிலேயே எட்டிப்பார்த்த புன்னகையை தலையில் தட்டி உட்கார வைத்தார் சாவ்லா. சூப்பரான ஸ்டெம்பிங் ஒன்றைப் பாய்ந்து அடித்தார் கிஷன். அதே ஓவரில், டெய்டேவின் விக்கெட்டும் காலி. `டேய் டேய்' என தலையில் கைவைத்தார்கள் பஞ்சாப் ரசிகர்கள். 10 ஓவர் முடிவில் 83/4 என பதுங்கியது பஞ்சாப்.

Mumbai Indians vs Punjab Kings
Mumbai Indians vs Punjab KingsKunal Patil

ஷொகீனின் 11வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. க்ரீனின் 12வது ஓவரில், 1 ரன். மீண்டும் 13வது ஓவரை வீசிய ஷொகீன், பாட்டியாவுக்கு ஒரு பவுண்டரியை விட்டுக்கொடுத்தார். க்ரீன் வீசிய 14வது ஓவரில், சாம் கரண் ஒரு பவுண்டரி தட்டினார். ஷொகீனின் 15வது ஓவரில், கேப்டன் கரண் ஒரு சிக்ஸ்ரைத் தூக்கினார். 15 ஓவர் முடிவில், 118/4 என பதுங்கியிருந்த பஞ்சாப் படுத்தேவிட்டது. `ஹலோ பாஸ், எழுந்திருங்க’ என எழுப்பிவிட்டார் அர்ஜூன் டெண்டுல்கர்.

சின்னவர் வீசிய 16வது ஓவரின் முதல் பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் கரண். ஷ்ரூவ்வ்... அடுத்த பந்து அகலபந்து. மாற்றாக வீசபட்ட பந்து, டீப் தேர்டில் பவுண்டரிக்கு பறந்தது. 3வது பந்தில் ஒரு சிங்கிள். 4வது பந்தை மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி அடித்தார் பாட்டியா. 5வது பந்தில் யார்க்கர் மிஸ்ஸாக, பாட்டியா ஒரு சிக்ஸரை கடாசினார். கடைசிப்பந்து, பீமராக பறந்து வந்து பவுண்டரிக்கு சிதறி ஓடியது. `டீப் ப்ரீத் எடு' என ஆலோசனை சொன்னார் டிம் டேவிட். அப்படி எடுத்துப்போட்ட பந்தையும், பவுண்டரியில் பால் பாய்தான் எடுத்துப்போட்டார். ஒரே ஓவரில், 31 ரன்கள்! ஆட்டம் அப்படியே மீண்டும் பஞ்சாப்பின் பக்கம் திரும்பியது.

Mumbai Indians
Mumbai IndiansKunal Patil

அடுத்து யார் வந்தாலும் அடிதான் எனும் மோடில் இருந்த பஞ்சாப், ஆர்ச்சரையும் வெளுத்துவிட்டது. 17வது ஓவர் வீசிய ஆர்ச்சரை முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் கேப்டன் கரண். 3வது பந்தை, சிக்ஸருக்கு கடாசினார் பாட்டியா. க்ரீன் வீசிய 18வது ஓவரில் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சாம் கரண். 4வது பந்தில், பாட்டியா காலி. `வந்த வேலை முடிந்துவிட்டது. வரட்டா மாமேய்’ என ஜாலியாகவே பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து இறங்கிய ஜித்தேஷ் சர்மா, ஓவரில் மிச்சமிருந்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு சிதறவிட்டார். ‘கொம்பன் இப்போதான் இறங்கியிருக்கான்' என தொடையைத் தட்டினார்கள் பஞ்சாப் ரசிகர்கள்.

ஆர்ச்சரின் 19வது ஓவரில், சாம் கரண் ஒரு பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அதே ஒவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்த கரண், அடுத்த பந்திலேயே ஆர்ச்சரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெஹ்ரன்டார்ஃப் வீசிய கடைசி ஓவரில், முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஜித்தேஷ். அடுத்து ஒரு டாட். அடுத்து ஒரு சிக்ஸர்! ரோகித் சர்மா நொந்துவிட்டார். அடுத்த பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்கும் முயற்சியில், போல்டானார் ஜித்தேஷ். அடுத்த பந்தில், ப்ரார் ஒரு பவுண்டரி அடிக்க, 214/8 என சிறப்பான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி.

Punjab Kings
Punjab KingsKunal Patil

ப்ரப்சிமரனுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் நாதன் எல்லீஸ். ரோகித்தும் இஷானும் மும்பையின் இன்னிங்ஸை வழக்கம்போல் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் ஷார்ட். ஓவரின் கடைசிப்பந்து, இறங்கிவந்து ஒரு பவுண்டரி அடித்தார் ரோகித். அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரில், கிஷன் அவுட் ஆனார். ஸ்விங் ஆகி அந்த பந்தை விளாச, அது பறந்துபோய் டீப்பில் கேட்ச் ஆனது. அருமையான கேட்ச் பிடித்தார் ஷார்ட்ஸ். அதே ஓவரில், ஒரு பவுண்டரி தட்டி நம்பிக்கை கொடுத்தார் ரோகித்.

ப்ரார் வீசிய 3வது ஓவரில், க்ரீன் ஒரு சிக்ஸரை நொறுக்கினார். அர்ஷ்தீப்பின் 4வது ஓவரில், க்ரீன் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசிப் பந்தில், ஃபைன் லெக்கின் ஒரு சிக்ஸை பறக்கவிட்டார் ஹிட்மேன். கரண் வீசிய 5வது ஓவரில், ரோகித் மீண்டும் ஒரு சிக்ஸரும், க்ரீன் மீண்டும் ஒரு பவுண்டரியும் அடித்தனர். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில், க்ரீன் ஒரு பவுண்டரி தட்ட, 54/1 என ஓரளவுக்கு நன்றாகவே தொடங்கியிருந்தது மும்பை அணி. பஞ்சாப்பின் இன்னிங்ஸை அப்படியே ப்ளூப்ரின்ட்டாக உபயோகிக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

Mumbai Indians vs Punjab Kings
Mumbai Indians vs Punjab KingsKunal Patil

7வது ஓவரை வீசிய ராகுல் சஹார், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ப்ராரின் 8வது ஓவரில், க்ரீன் ஒரு பவுண்டரியை விளாசினார்.

மீண்டும் பாம்பு சஹார் வந்து 9வது ஓவரை வீச, ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியும் பறக்கவிட்டார் ரோகித். லிவிங்ஸ்டோனிடம் 10வது ஓவரை கொடுத்தார் கரண். 2வது பந்து பவுண்டரிக்கு தட்டினார் ரோகித். ப்ராப் பந்தை எல்லைக்கோடு அருகே கோட்டைவிட்டார். அடுத்த பந்தை, வீசவந்த பாதியிலேயே லிவிங்ஸ்டோன் நிப்பாட்ட, ரோகித்துக்கு கோவம் தலைக்கேறியது. அடுத்த பந்திலேயே தடுமாறி லிவிங்ஸ்டோனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோகித். 10வது ஒவரை வீசிய லிவிங்ஸ்டோன், பவுண்டரிகள் ஏதுமின்றி 9 ரன்கள் கொடுத்தார். 10 ஓவர் முடிவில் 88/2 என்ற நிலையை எட்டியிருந்த மும்பை, அடுத்த 60 பந்துகளில் 127 ரன்கள் குவிக்க தயாரானது.

சஹாரின் 11வது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்தார் ஸ்கை. 12 ஓவரை வீசவந்தார் லிவிங்ஸ்டோன். ஷார்ட் ஃபைன், ஷார்ட் தேர்ட் திசைகளில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை ஸ்வீப்பினார் ஸ்கை. எல்லீஸ் வீசிய 13வது ஓவரில், ஷால்வை போர்த்துவது போல ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் சூர்யகுமார். கரண் வீசிய 14வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கிய ஸ்கை, சிக்ஸருடன் முடித்தார். சஹாரின் 15வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார் க்ரீன். அதே ஓவரில், க்ரீனும் ஒரு பவுண்டரியை விரட்ட 15 ஓவர் முடிவில், 149/2 என ஆட்டத்தை திருப்பியிருந்தது மும்பை. 30 பந்துகளில் 66 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்கள்!

`ஆரம்பிக்கலாங்களா' என்றனர் மும்பை ரசிகர்கள்.
Mumbai Indians vs Punjab Kings
Mumbai Indians vs Punjab KingsKunal Patil

எல்லீஸ் வீசிய 16வது ஓவரின் முதல் பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டர் க்ரீன். அடுத்த பந்து, பவுண்டரிக்கு தெறித்து ஓடியது. 3வது பந்தை மெதுவாக வீச, வீழ்ந்தார் க்ரீன். 43 பந்துகளில் 67 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சாம் கரணின் 17வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்து சூர்யகுமார் 23 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். ஓவரின் கடைசிப்பந்தில், 87 மீட்டருக்கு ஒரு சிக்ஸ் பறந்தது. 18வது ஓவரை வீசவந்தார் சிறுவர் சிங். முதல் பந்து, சிக்ஸருக்கு கடாசினார் டேவிட். அப்போதும், அரவுண்ட் தி விக்கெட்டிலேயே வந்து வீசினார் அர்ஷ்தீப்.

4வது பந்து, ஃப்ளிக் ஆட முயன்று டெய்டேவிடம் கேட்ச் ஆனார் சூர்யகுமார். அவர் பந்தைப் பிடிக்கவில்லை, பந்துதான் அவரைப் பிடித்தது என்பதுபோல ஒரு கேட்ச். டெய்டேவாலேயே நம்பமுடியவில்லை. 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை.

எல்லீஸ் 19வது ஓவரை வீசினார். 2வது பந்து, சிக்ஸருக்கு பறந்தது. இந்த ஓவரில் 15 ரன்கள். 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை எனும் நிலை. டேவிட்டும் திலக் வர்மாவும் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரை வீசினார் சிறுவர் சிங்.

முதல் பந்து சிங்கிள், திலக்கை நம்பி ஸ்ட்ரைக் கொடுத்தார் டேவிட். அதுவே, தவறாக முடிந்தது. இரண்டாவது பந்து, டாட். அகலப்பந்து என அப்பீலுக்கு சென்றார் திலக் வர்மா. ரிவ்யூவில் இல்லை என்றார் நடுவர்.

3வது பந்து, மிடில் ஸ்டெம்ப் இரண்டாக உடைந்தது.

Mumbai Indians vs Punjab Kings
Mumbai Indians vs Punjab KingsKunal Patil

திலக் வர்மா, பேச்சு மூச்சின்றி கிளம்பினார். அடுத்து களமிறங்கினார் இம்பாக்ட் வீரர் வதேரா. அடுத்த புதிதாக கொண்டு வந்து ஊன்றிய ஸ்டெம்ப்பும் இரண்டாக உடைந்தது. ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு செலவை ஏற்றினார் அர்ஷ்தீப்.

5வது பந்து, டாட். கடைசிப்பந்தில் ஒரு சிங்கிள். கடைசி ஓவரில், 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்த, 201/6 என இன்னிங்ஸை முடித்தது மும்பை. 55 ரன்கள் விளாசிய சாம் கரணுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது, இந்த விருது அர்ஷ்தீப்புக்கு அல்லது எல்லீஸுக்குதான் கொடுக்கபட வேண்டும் என்றார் கேப்டன் கரண்.

கடைக்குட்டி சிங்கம், வளர்ந்துடுச்சுப்பா...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com