இது என்னங்க பஞ்சாப்க்கு வந்த சோதனை.. 111 ரன்னுக்கு சுருண்ட PBKS! பந்துவீச்சில் KKR மிரட்டல்!
2025 ஐபிஎல் தொடரானது ஒரு சில அணிகள் அதிக வெற்றிகளும், சில அதிக தோல்விகளும் என ஒருசார்பாக சென்ற நிலையில், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் முதலிய அணிகள் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருப்பது விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் நடப்பு சீசனில் பலம்வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
111 ரன்னுக்கு சுருண்ட பஞ்சாப்!
சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பிரியான்ஸ் மிரட்டிவிட, க்ரீஸில் பிஷியாக இருந்த பிரப்சிம்ரன் 3 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். 3 ஓவர்களுக்கு 39 ரன்களை கடந்த பஞ்சாப் அணி மிரட்டிவிட, சரியான நேரத்தில் பந்துவீச வந்த ஹர்சித் ரானா பிரியான்ஸை 22 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 0 ரன்னில் அவுட்டாக்கி மிரட்டிவிட்டார்.
அடுத்துவந்த அதிரடிவீரர் ஜோஷ் இங்கிலீஸை 2 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய வருண் சக்கரவர்த்தி பஞ்சாப் அணியை நசுக்கினார். மீண்டும் பந்துவீச வந்த ஹர்சித் ரானா நம்பிக்கை அளிக்கும் ஒரே வீரராக இருந்த பிரப்சிம்ரனையும் 30 ரன்னில் வெளியேற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தடுமாறியது.
தொடர்ந்து வந்த வதேரா 10, மேக்ஸ்வெல் 7, சூர்யான்ஸ் 4 மற்றும் மார்கோ யான்ஸன் 1 ரன்னிலும் வரிசையாக நடையை கட்ட, இவர்களை எல்லாம் பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஷஷாங் சிங்கும் 18 ரன்னில் வெளியேறி ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்தார். 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 111 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது.
112 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 7 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், ரகுவன்ஷி மற்றும் கேப்டன் ரகானே ஆட்டத்தை மீட்டனர். 6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.