MI vs PBKS | Points Table-ல் முதலிடம் யாருக்கு? மும்பை அணி முதலில் பேட்டிங்!
2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 18வது ஐபிஎல் கோப்பைக்காக 10 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் முதலிய 4 அணிகள் அடுத்தசுற்றான பிளேஆஃப்க்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
4 அணிகள் தகுதிபெற்றிருந்தாலும் டாப் 4 பட்டியலில் எந்த அணி எந்த இடத்தில் முடிக்கப்போகிறது என்ற போட்டியானது அதிகப்படியான விறுவிறுப்புடன் நடந்துவருகிறது.
தொடரிலிருந்து வெளியேறிவிட்ட சிஎஸ்கே, லக்னோ, ஹைத்ராபாத், டெல்லி முதலிய அணிகள் டாப் 4-ல் இடம்பெற்றுள்ள ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளை தோற்கடித்து புள்ளிப்பட்டியலை தலைகீழாக திருப்பியுள்ளன.
அதன்படி இன்றைய பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான மோதலில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு..
14 போட்டிகளை நிறைவுசெய்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி 0.254 NRR உடன் தற்போது முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் மும்பை 3 அணிகளும் மீதம் ஒரு போட்டியில் விளையாடவிருப்பதால், 17 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அல்லது பஞ்சாப் அணிகள் முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
அதேபோல 16 புள்ளிகளுடன் 1.292 என்ற நல்ல NRR உடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தினால் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது.
இந்த சூழலில் ஜெய்ப்பூரில் நடக்கும் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்து மும்பையை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்துள்ளது. எந்த அணி இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் போட்டி நடைபெறவுள்ளது.