rcb vs pbks
rcb vs pbkscricinfo

சின்னசாமி vs RCB பிரேக்கப் ஸ்டோரி 46! சொந்த மண்ணில் அதிக தோல்விகள்! முதல் அணியாக மோசமான சாதனை!

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் அணியாக மோசமான சாதனை படைத்துள்ளது ஆர்சிபி அணி.
Published on

நடப்பு ஐபிஎல் சீசனில் அனைத்து அணிகளும் சொந்த மண்ணில் மோசமான ஆட்டத்தையும், வெளி ஆடுகளங்களில் அபாரமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த பட்டியலில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் முதலிய அணிகளும் துரதிருஷ்டவசமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இணைந்துள்ளன.

இதில் மோசமான அணியாக சொந்த மண்ணில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றுள்ள ஆர்சிபி அணி, நடப்பு சீசனில் கிடைத்த நல்ல மொமண்டமை இழந்துவருகிறது. போதாக்குறைக்கு சொந்த மண்ணில் நடந்த இன்றைய போட்டியில் மழை மிகப்பெரிய வில்லனாக மாறியது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் போடுவதற்கு முன்பாகவே மழையின் காரணமாக ஆட்டம் தள்ளிப்போனது. ஒரு கட்டத்தில் போட்டி நடக்குமா நடக்காதா என்ற நிலை இருந்தபோது 6 ஓவர்கள் குறைக்கப்பட்டு 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

95 ரன்கள் மட்டுமே அடித்த ஆர்சிபி!

மழை குறுக்கிட்ட போட்டியில் டாஸ் வெல்வது பெரிய சாதகமாக இருக்கும் என்ற நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு, மழைபெய்த ஆடுகளத்தில் விளையாடுவது பெரிய சவாலாகவே இருந்தது. ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் மார்கோ யான்சன் இருவரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த, கூடுதலாக எக்ஸ்ட்ரா பவுன்ஸ் கிடைத்தது பவுலர்களுக்கு சாதகமாக மாற ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர்.

நின்று ஆடுவதா, அடித்து ஆடுவதா, ஆடுகளம் எப்படி இருக்கிறது என்ற குழப்பத்தில் அடிக்க முயன்ற ஆர்சிபி வீரர்களான சால்ட் 4 ரன், கோலி 1, லிவிங்ஸ்டன் 4, ஜிதேஷ் சர்மா 2 மற்றும் க்ருணால் பாண்டியா 1 ரன் என பேட்டிங் செய்ய வந்தவர்கள் எல்லோரும் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் 3 பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, 42 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி அணி. மோசமான நிலைக்கு அணி செல்ல, அணியை மீட்டு எடுத்துவரும் பொறுப்பு ரஜத் பட்டிதார் மற்றும் டிம் டேவிட் இருவரின் தோள்களில் சேர்ந்தது. ஆனால் சாஹலை அட்டாக் செய்ய நினைத்த பட்டிதார் 23 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி பேட்டர்கள் அடித்த பந்தும் ஈரப்பதம் காரணமாக பவுண்டரிக்கு செல்லாத நிலையில், ஒரு சிக்சர் அடிப்பதே குதிரை கொம்பாக மாறி போனது.

அனைத்து வீரர்களும் அவுட்டான பிறகும், கடைசிவரை களத்தில் நின்று தனியொரு ஆளாக போராடிய டிம் டேவிட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் அடித்து அசத்தினார். டிம் டேவிட்டின் உதவியால் 14 ஓவரில் ஒருவழியாக 95 ரன்களை சேர்த்தது ஆர்சிபி அணி.

பஞ்சாப் அசத்தல் வெற்றி!

96 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசல்வுட், 3 ஓவரில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். ஹசல்வுட்டின் அசத்தலான பந்துவீச்சால் 8 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இங்கிருந்து 2 விக்கெட்டுகள் விழுந்தால் ஆர்சிபி அணியின் பக்கம் போட்டி திரும்பும் என்ற நிலை இருந்தபோது, தைரியமான கிரிக்கெட்டை விளையாடிய இளம்வீரர் வதேரா 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என பறக்கவிட்டு ஆர்சிபி அணியின் கையிலிருந்த போட்டியை தட்டிப்பறித்தார். முடிவில் இலக்கை எட்டிய பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது பஞ்சாப் அணி, 3வது இடத்திலிருந்து ஆர்சிபி அணி 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

சொந்த மண்ணில் நடந்த இன்றைய போட்டியில் தோற்ற ஆர்சிபி அணி, ஹோம் கிரவுண்ட்டான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 46வது தோல்வியை பதிவுசெய்தது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு அணி அவர்களின் சொந்த மண்ணில் அடைந்த அதிகபட்ச தோல்வியாகும்.

சின்னசாமி ஸ்டேடியத்திற்கும் ஆர்சிபி அணிக்குமான காதல் முறிவு எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. ‘எங்களுக்கு மட்டும் ஹோம் கிரவுண்ட்ல மேட்ச் வைக்காம, வெளி ஸ்டேடியத்துல மேட்ச் நடத்துறீங்ளா-னு’ ஐபிஎல்லுக்கு கடிதம் எழுதும் நிலைக்கே சென்றுள்ளது ஆர்சிபி அணி. நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமானால், உங்களுடைய சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளை வெல்வது புள்ளிப்பட்டியலில் பிளேஆஃப் தகுதியை தக்கவைக்க பெரிய சாதகமாக அமையும். விரைவில் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் வெற்றிப்பாதைக்குதிரும்பும் என்ற நம்பிக்கையில் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com