பஞ்சாப் - மும்பை
பஞ்சாப் - மும்பைipl

மும்பையை பந்தாடிய பஞ்சாப்.. குவாலிஃபையர் 1 சுற்றுக்கு தகுதி! முதல் கேப்டனாக வரலாறு படைத்த ஸ்ரேயாஸ்!

2025 ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்று அசத்தியுள்ளது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி.
Published on

எந்த அணிகள் குவாலிஃபயர் 1-லும், எந்த அணிகள் எலிமினேட்டர் போட்டியிலும் விளையாடும் என்ற குழப்பத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இன்றைய பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான மோதலில் வெற்றிபெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் என்பதால் விறுவிறுப்பான போட்டியாக தொடங்கப்பட்டது.

சச்சின் சாதனையை முறியடித்த சூர்யா..

ஜெய்ப்பூரில் நடைபெற்ற மோதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவரும் அதிரடியாகவே தொடங்கினர். அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விளாசிய ரிக்கல்டன் தரமான தொடக்கத்தை கொடுத்தாலும், 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ரோகித் சர்மா 21 பந்தில் 24 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றினார். ரிக்கல்டன் 27, ரோகித் சர்மா 24 ரன்னிலும் வெளியேற, அடுத்துவந்த திலக் வர்மாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே சேர்த்த மும்பை அணி தடுமாறினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்துவாங்கினர். உடன் நமன் திர்ரும் 2 சிக்சர்களை பறக்கவிட மும்பையின் ரன்வேகம் அதிகரித்தது. ஆனால் இந்த 3 வீரர்களும் நல்ல தொடக்கம் கிடைத்தபோதிலும் விரைவாகவே வெளியேற, மீண்டும் மும்பை அணி அழுத்தத்திற்குள் சென்றது.

’எல்லாரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’ என்ற வசனத்திற்கு ஏற்ப தனியொரு ஆளாக நின்று 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 57 ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை 184 ரன்கள் என்ற டோட்டலுக்கு அழைத்து சென்றார்.

இதன்மூலம் நடப்பு சீசனில் 640 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த 15 வருட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமில்லாமல் நடப்பு சீசனில் 600 ரன்களுக்கு மேல் அடித்து 70க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரராக சூர்யகுமார் மட்டுமே விளங்குகிறார். அதேபோல ஐபிஎல் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் வரிசையாக 14 போட்டிகளில் 25 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரராக சாதனை படைத்தார் சூர்யகுமார் யாதவ்.

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்..

185 ரன்கள் அடித்தால் வெற்றியுடன் களம்கண்ட பஞ்சாப் கிங்ஸ் அணியில், தொடக்க வீரர் பிரப்சிம்ரனை 13 ரன்னிலேயே வெளியேற்றி முதல் விக்கெட்டை விரைவாகவே எடுத்துவந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரியான்ஸ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலீஸ் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மும்பை அணியை நிலைகுலைய வைத்தனர். பிரியான்ஸ் ஆர்யா 27 பந்தில் அரைசதமடிக்க, ஜோஷ் இங்கிலீஸ் 29 பந்தில் அரைசதமடித்து அசத்தினார்.

விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் இங்கிலீஸ் 73 ரன்களும், பிரியான்ஸ் 62 ரன்களும் அடிக்க 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணி குவாலிஃபையர் 1-ல் விளையாட தகுதிபெற்றது. தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு பின்தங்கியது.

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் என 3 அணிகளை டாப் 2-க்கு வழிநடத்திய ஒரே கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் 2014-க்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து பஞ்சாப் அணியை டாப் 2-க்கு வழிநடத்திய ஒரே கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் சம்பவம் செய்தார்.

புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்திருக்கும் மும்பை அணி, டாப் 2-ல் முடிக்காதபோது இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே இல்லை என்ற சாதனையுடன் எலிமினேட்டர் போட்டியில் விளையாடவிருக்கிறது.

நாளைய லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆர்சிபி வெல்லும் பட்சத்தில், புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி குவாலிஃபையர் 1-ல் விளையாடும் தகுதியைபெறும். என்ன நடக்கப்போகிறது? டைட்டன்ஸா? ஆர்சிபியா? யார் தகுதிபெற போகிறார்கள்? என்பது நாளைய கடைசி லீக் போட்டியில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com