INDvAFG | இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி என்னென்ன மாற்றங்கள் செய்யக்கூடும்?

இந்திய அணி இந்தப் போட்டியில் 1 அல்லது 4 மாற்றங்கள் வரை செய்யலாம். மிடில் ஆர்டர் தவிர்த்து மற்ற அனைத்து ஏரியாக்களுக்குமே மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.
Virat Kohli
Virat KohliAtul Yadav

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பல முக்கிய் மாற்றங்களை எதிர்நோக்கியிருக்கிறது. அவை என்னென்ன?

இந்த சர்வதேச டி20 தொடர் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே இந்த தொடருக்கான ஸ்குவாடில் யார் இடம்பெறவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் முதல் போட்டிக்கு முன்பாக தன்னுடைய சொந்த காரணங்கள் காரணமாக விராட் கோலி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் இப்போது எப்படியும் இரண்டாவது போட்டிக்கு முன்பாக அவர் அணிக்குத் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அவர் அணிக்கு வரும்பட்சத்தில் இந்திய அணி நிச்சயம் அவரை களமிறக்கும். அவர் எப்போதும்போல் தன்னுடைய மூன்றாவது ஸ்லாட்டில் விளையாடுவர். அதனால் அந்த இடத்தில் விளையாடிய திலக் வர்மா பிளேயிங் லெவனில் தன்னுடைய இடத்தை இழக்க நேரிடும். அவர் நான்காவது ஸ்லாட்டில் விளையாட விரும்புவார் என்றாலும் மிடில் ஆர்டரில் ஆடிய ஷிவம் தூபே, ஜித்தேஷ் ஷர்மா ஆகியோர் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். அதனால் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்காது.

பேட்டிங் ஆர்டரில் இன்னொரு முக்கிய மாற்றம் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் தான் ஓப்பனராக விளையாட முடியும். முதல் போட்டிக்கு முன்பே அவர்கள் இருவரில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. அந்தப் போட்டிக்கு முந்தைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு ஜெய்ஸ்வால் ஓப்பனராகக் களமிறங்குவார் என்று கூறியிருந்தார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஆனால் டாஸில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வாலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சுப்மன் கில் ஓப்பனராகக் களமிறங்கினார். அது பெரிய அளவுக்கு இந்திய அணிக்குக் கைகொடுக்கவும் இல்லை. கில் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவது பெரும் பிரச்னை என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. இரண்டாவது பந்திலேயே கில்லின் அலட்சியத்தால் ரோஹித் ஷர்மா ரன் அவுட் ஆனார். அதுமட்டுமல்லாமல், கில்லாலும் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியவில்லை. 12 பந்துகளில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் அவர். ஒருவேளை யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஃபிட்டாக இருந்தால் இன்றைய போட்டியில் கில்லுக்குப் பதில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மிடில் ஆர்டரில் நிச்சயம் எந்த பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. பந்துவீச்சில் மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கடந்த போட்டியில் இந்திய அணி 3 ஸ்பின்னர்களைக் களமிறக்கியது. அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய் மூவரும் விளையாடினார்கள். இந்தப் போட்டியில் இந்தியா ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் செய்யக்கூடும். குல்தீப் யாதவை பயன்படுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா நினைக்கலாம். அதேசமயம், கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஆவேஷ் கானைக் கூட களமிறக்க இந்திய நிர்வாகம் முடிவு செய்யலாம். அதனால் பந்துவீச்சில் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் இந்திய அணி செய்யக்கூடும். இல்லை ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதினால், பிஷ்னாய்க்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று நினைத்தால் மீண்டும் அவர்கள் அதே பௌலிங் அட்டாக்கோடு களமிறங்கலாம்.

ஆக, இந்திய அணி இந்தப் போட்டியில் 1 அல்லது 4 மாற்றங்கள் வரை செய்யலாம். மிடில் ஆர்டர் தவிர்த்து மற்ற அனைத்து ஏரியாக்களுக்குமே மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com