"IPL தொடரில் முழுமையாக விளையாடுவதில் பன்ட் உறுதி" - டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் பான்டிங்

தான் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக மிகவும் நம்பிக்கையுடன் ரிஷப் பண்ட் கூறியிருக்கிறார். ஆனால் ...
rishabh pant | ponting
rishabh pant | pontingTwitter

காயம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், 2024 ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடுவதில் உறுதியாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தை சந்தித்தார். கடும் காயத்துக்கு உள்ளான பண்ட், அதிலிருந்து மீண்டு வருகிறார். அதனால் அவர் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்துவருகிறார். காயத்திலிருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கும் பண்ட், சமீபமாக பல இடங்களுக்குச் சென்றுவருகிறார். ஐபிஎல் ஏலத்தின்போது டெல்லி கேபிடல்ஸ் அணியினரோடு அமர்ந்திருந்தார் அவர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி சர்வதேச டி20 தொடரில் விளையாடியபோது இந்திய வீரர்களோடு இணைந்து பயிற்சியிலும் கூட ஈடுபட்டார். இந்நிலையில் ஊடகங்களில் ரிஷப் பண்ட் விளையாடுவது பற்றி பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வந்தன. அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று செய்திகள் வந்தன. விளையாடினாலும் அவர் கீப்பிங் செய்யமாட்டார் என்றும் கூறப்பட்டது. அது உறுதியாகாத நிலையில், சமீபத்தில் அதுபற்றி டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பேசியிருக்கிறார்.

அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அணியான வாஷிங்டன் ஃப்ரீடமின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பான்டிங். அதை அறிவிக்கும் நிகழ்வின்போது ரிஷப் பண்ட் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தான் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக மிகவும் நம்பிக்கையுடன் ரிஷப் பண்ட் கூறியிருக்கிறார். ஆனால் எந்த வகையில் அவர் பங்களிப்பு இருக்கும் என்பது பற்றி எங்களால் இப்போது உறுதியாகக் கூற முடியாது. அவர் நன்கு துடிப்பாக தயாராக இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பார்த்திருப்பீர்கள். அதேசமயம் முதல் போட்டிக்கு இன்னும் 6 வாரங்களே இருக்கின்றன. அதனால் இந்த ஆண்டு அவரால் எங்கள் அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்ய முடியுமா என்று தெரியவில்லை" என்று கூறினார்.

மேலும், "நான் இப்போது அவரிடம் கேட்டால், கண்டிப்பாக 'நான் அனைத்து போட்டிகளும் விளையாடுகிறேன். அனைத்து போட்டிகளிலும் கீப்பிங் செய்கிறேன். மேலும் நம்பர் 4 பொசிஷனில் பேட்டிங் செய்கிறேன்' என்று தான் அவர் கூறுவார். அவர் அப்படித்தான். ஆனால் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். அவர் பல ரோல்களில் விளையாடிக்கூடிய வீரர். மேலும் எங்கள் கேப்டன் வேறு. அவரை கடந்த ஆண்டு நாங்கள் பெரிதாக மிஸ் செய்தோம்.

கடந்த 12-13 மாதங்களாக அவர் கடந்து வந்திருக்கும் இந்தப் பாதையைப் பார்த்தால் தெரியும் அவர் எவ்வளவு கடினமான விபத்தை கடந்து வந்திருக்கிறார் என்பது. கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஒரு விபத்திலிருந்து பிழைத்து வந்திருப்பதே கடினம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அவர் நிச்சயம் களத்துக்கு வந்து விளையாடுவார் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம். அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும், 14 போட்டிகளில் பத்து போட்டிகளில் விளையாடினால் போதும். ஏன், அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியுமே கூட போனஸ் தான்" என்று கூறினார் பான்டிங்.

rishabh pant | ponting
TNPL 2024 ஏலம்: 82.85 லட்சத்தை அள்ளிய 5 வீரர்கள்! அதிக விலைக்கு சென்ற சாய்கிஷோர் - சஞ்சய் யாதவ்!

கடந்த ஆண்டு ரிஷப் பண்ட் இல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி பெரிதாக கஷ்டப்பட்டது. டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டார். இருந்தாலும் பேட்டிங்கில் அவரை பெரிய அளவு மிஸ் செய்தது டெல்லி கேபிடல்ஸ். அவர்களின் மிடில் ஆர்டர் ஒட்டுமொத்தமாக சொதப்பியது. கீப்பர் ஸ்லாட்டுக்கும் சரியான ஆப்ஷன் இல்லை. இந்த முறை பண்ட் வந்தால் அவை அனைத்துமே சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com