2026 IPL-ல் களமிறங்கும் பாகிஸ்தான் பவுலர் முகமது அமீர்? அவரே உறுதிப்படுத்திய தகவல்!
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு பிசிசிஐ தடைவிதித்தது. அதன்படி உலகம் முழுக்க உள்ள மற்ற கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்று விளையாடிவரும் பாகிஸ்தான் வீரர்கள், ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் இருந்துவருகின்றனர். முதலும் கடைசியுமாக தொடக்க சீசனான 2008 ஐபிஎல் தொடரில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் கடைசியாக விளையாடினர்.
இந்த சூழலில் சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர், 2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும், அதில் விராட் கோலியுடன் சேர்ந்து ஆர்சிபி அணியில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியபோதும், ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரால் எப்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும் என்ற கேள்விக்கு? தனது குடியுரிமையை மாற்றும் முயற்சியில் அமீர் இருப்பது தெரியவந்துள்ளது.
RCB அணிக்காக விளையாட விரும்புகிறேன்..
சமீபத்திய டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முகமது அமீர், “அடுத்த வருடத்தில் ஐபிஎல்லில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கும், ஐபிஎல் போன்ற ஒரு லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் ஏன் விளையாடக்கூடாது. நான் ஐபிஎல்லில் விளையாடுவேன். நான் ஆர்சிபிக்காக விளையாட விரும்புகிறேன், ஆர்சிபி எனக்கு மிகவும் பிடித்த ஐபிஎல் அணி” என்று அமீர் கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி தனக்கு பிடித்த வீரர் என்று கூறிய முகமது அமீர், “விராட் கோலி சிறந்தவர், அவர் எப்போதும் திறமையை அங்கீகரிக்கக்கூடியவர். அவர் தன்னுடைய பேட்டை எனக்கு பரிசளித்தார், அவருடைய அந்த அணுகுமுறையால் நான் வியந்து போனேன். நான் எப்போதும் அவரது பேட்டிங்கை மிகவும் விரும்புகிறேன், அவரும் எனது பந்துவீச்சை மிகவும் விரும்புகிறார். நான் அவர் வழங்கிய பேட்டால் சில நல்ல ஷாட்களை விளையாடியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
32 வயதாகும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரை உலத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்று விராட் கோலி ஒருமுறை புகழ்ந்துள்ளார். 2009-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முகமது அமீர், பாகிஸ்தான் அணி 2009 டி20 உலகக்கோப்பை மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி வெல்லும் போது அணியில் பெரிய பங்காற்றினார். 119 டெஸ்ட் விக்கெட்டுகள், 81 ஒருநாள் விக்கெட்டுகள் மற்றும் 71 டி20 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் முகமது அமீர் கடந்த 2024 டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
அமீரால் எப்படி ஐபிஎல்லில் விளையாட முடியும்?
ஐபிஎல்லில் விளையாடுவதற்கான தகுதி என்பது அமீர் தன்னுடைய இங்கிலாந்து குடியுரிமையை பெறுவதை பொறுத்து உள்ளது. அவரின் மனைவி நர்ஜிஸ் பிரிட்டிஷை சேர்ந்தவர் என்பதால், அமீரும் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இது அவருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உதவியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அமீரின் கூற்றுப்படி 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் அவருக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றவுடன், ஐபிஎல் விதிமுறைகளின் கீழ் அவர் இனி ஒரு பாகிஸ்தான் வீரராகக் கருதப்பட மாட்டார். இதன் மூலம் அவர் வெளிநாட்டு வீரராக ஏலத்தில் நுழைய அனுமதிக்கப்படுவார்.
இப்படி நடப்பது புதுமையானது அல்ல, ஏற்கெனவே முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத் இதேபோன்ற பாதையைப் பின்பற்றி 2011-ல் பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2012-2013) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2015) அணிக்காக விளையாடினார்.
அமீர் போன்ற திறமையான பந்துவீச்சாளர் ஐபிஎல்லில் விளையாடுவதை ரசிகர்கள் உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளனர்.