அந்த 'Impact Player' ராயுடுவை நிறுத்துங்க! வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்களை கவனியுங்க CSK!

சென்னை அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு சொதப்பி வரும் அம்பத்தி ராயுடுவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தோனி, ராயுடு, சேனாபதி
தோனி, ராயுடு, சேனாபதிtwitter page

அடுத்தகட்டத்தை நெருங்கியிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்று (மே 7) நடைபெறும் குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான வெற்றியைப் பொறுத்து இந்தப் பட்டியல் மாற்றம் பெறலாம்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இம்பேக்ட் பிளேயராகத் தொடர்ந்து களமிறக்கப்பட்டு வரும் அம்பத்தி ராயுடுவுக்கு எதிராக கிரிக்கெட் வல்லுநர்களும் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள், “கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடுவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார். ஆனால், அவர் எந்தப் போட்டியிலும் நிலைத்து நின்றும் பொறுப்புணர்ந்தும் ஆடுவதில்லை. ஏதோ, வருவதுமாகப் போவதுமாக இருக்கிறார். குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்து செல்கிறார்.

அதேநேரத்தில் ரஹானே, ஷிவம் துபே, கான்வே, ருதுராஜ் உள்ளிட்ட வீரர்கள் பொறுப்பு உணர்ந்து தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆகையால், இனிவரும் போட்டிகளில் அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்குவதற்குப் பதில் அணியில் இருக்கும் பிற இளைய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம். குறிப்பாக பேட்டரான சுப்ரன்ஷு சேனாபதிக்கு வாய்ப்பு வழங்கி, இளைய தலைமுறை வீரர்களை உருவாக்கலாம்” என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

ஏற்கெனவே, ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 37வது லீக் போட்டியில், சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியதில் ராஜஸ்தான் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு டக் அவுட் ஆகியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது. குறிப்பாக, அவரது ரன் அவுட்டை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், கடுமையாக விமர்சித்திருந்தார். அவர், “முதலில் நீங்கள் ஃபீல்டிங் செய்யவேண்டும். ஃபீல்டிங் செய்யாமல் நேரடியாக பேட்டிங் செய்ய களத்திற்கு வந்து முதல் பந்தையே அதிரடியாக அடிக்கத் துவங்க முடியாது. இதே நிலைமையைதான் பிரித்வி ஷாவிடமும் (டெல்லி கேப்பிடல்ஸ் இம்பேக்ட் பிளேயர்) நாம் பார்க்கிறோம். பீல்டிங் செய்யவில்லையென்றால், ரன்கள் எடுக்க முடியாது. இரண்டாவது பந்திலேயே ராயுடு டக் அவுட்” என்று கூறியிருந்தார்.

இதற்கு அம்பத்தி ராயுடுவும் தக்க பதிலடி கொடுத்திருந்தார். பின்னர், மீண்டும் ஒரு பதிவில் சரணடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தபடியே உள்ளன. ஆகையால், அடுத்த போட்டியில் அம்பத்தி ராயுடுவுக்குப் பதில் சுப்ரன்ஷு சேனாபதி களமிறக்கப்படுவாரா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்னை அணி இதுவரை 11 லீக் போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் அம்பத்தி ராயுடு, தாம் இறங்கியுள்ள போட்டிகளில் விளையாடி வெறும் 95 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com