2024 Women Asia Cup|UAE-க்கு எதிரானப் போட்டியில் முதல் வெற்றி.. வரலாற்றில் இடம்பிடித்த நேபாள் அணி!
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடும் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜூலை 19) தொடங்கியது. அதன்படி, இன்றைய முதல் போட்டியில் நேபாளமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் சந்தித்தன. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த நேபாளம் முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை பேட் செய்ய பணித்தது.
ஆனாலும், அவ்வணியின் தொடக்க வீராங்கனைகள் ஆரம்பம் முதலே நேபாள மகளிர் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். என்றாலும், கவிஷா எகோடேஜ் (22 ரன்கள்) மற்றும் கெளசி ஷர்மா (36 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், அவ்வணி 100 ரன்களைக் கடந்தது. அவர்களின் விக்கெட் இழப்பிற்குப் பிறகு பின்னால் வந்த வீராங்கனைகளும் ரன் குவிப்பில் ஈடுபடாததால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. நேபாள அணி தரப்பில் இந்து பர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய நேபாள அணியில் தொடக்க வீராங்கனையான சம்ஷிகானா காதகா ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட்டார். என்றாலும் அவ்வணியில் அவருக்கு இணையாக எந்த வீராங்கனைகளும் நிலைத்து நிற்கவில்லை. ஆயினும், காதகா சிறப்பாக ஆடி தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவருடைய அதிரடியால் அவ்வணி 16.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் 2024 ஆசியக்கோப்பை மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் முதல் வெற்றியை ருசித்துள்ளது. மேலும், இந்தப் போட்டியின்மூலம் வரலாற்றில் முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளனர். நேபாளம் அணி கடந்த 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 8 போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.
ஆனால் அவற்றில் எதிலும் வெற்றி பெறவில்லை. அதாவது, ஆசியக் கோப்பை வரலாற்றில் அவர்களின் முதல் வெற்றி இதுவே ஆகும். இந்தப் போட்டியில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காதகா 45 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த ஆட்டநாயகன் விருது பெற்றார்.