ஸ்ரேயாஷ் ஐயரை போல அப்படியே மிமிக்ரி செய்த முஷீர் கான்.. கைத்தட்டி சிரித்த பாண்டிங்! #Video
17 வருட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான செயல்திறனை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் நீடித்து வருகிறது.
17 சீசன்களில் 2014 ஐபிஎல்லில் ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது பஞ்சாப் அணி, அதை தவிர தொடக்க ஐபிஎல் சீசனான 2008-ல் அரையிறுதிப்போட்டிவரை முன்னேறியது. அதற்கு பிறகான 15 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட பிளே ஆஃப்க்கு கூட தகுதிபெறாமல் எதற்கு இருக்கிறோம் என்றே தெரியாத ஒரு அணியாக இருந்துவருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் வழிநடத்தியதே இல்லை என்ற சூழலில், 2024 ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை வழிநடத்தவிருக்கிறார். அதேபோல அணியின் தலைமை பயிற்சியாளராக சர்வதேச கிரிக்கெட்டில் கோப்பைகளை வென்றுகுவித்த ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பார்க்காத ஒரு பஞ்சாப் கிங்ஸை உருவாக்க விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ள நிலையில், அதற்கேற்றார் போல் அணியில், ‘ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் இங்கிலீஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷஷாங் சிங், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ப்ரீத் பிரார், அஸ்மதுல்லா ஓமர்சாய், விஷ்ணு வினோத், ஆரோன் ஹார்டி, லாக்கி பெர்குசன்’ என திறமைக்கு பஞ்சமே இல்லாமல் நிரம்பியுள்ளனர்.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஒரு அணியாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயரை போல் நடித்துக்காட்டிய முஷீர்!
2025 ஐபிஎல் தொடரின் முதல் மோதலில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த சூழலில் ஒரு டீம் மீட்டிங் நிகழ்ச்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் பங்கேற்றுள்ளனர்.
அந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை போல அப்படியே மிமிக்ரி செய்து நடித்துக்காட்டிய இளம் வீரர் முஷீர் கான், குழுவில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார். முஷீர் கானின் நடிப்பை பார்த்த ஷ்ரேயாஸ் ஐயர் வெடித்து சிரித்தார், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் கைத்தட்டி சிரித்தபடி ரசித்தார்.
கடந்தாண்டு விபத்தில் சிக்கிய முஷீர் கான் கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்டுவந்துள்ளார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இளம்வீரர் முஷீர் கான் 2025 ஐபிஎல்லை பெரிய களமாக மாற்றுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.