mi vs dc
மும்பை இந்தியன்ஸ்bcci

இதயத்துடிப்பை எகிறவைத்த இறுதி 2 ஓவர்.. 3 பந்தில் 3 ரன்அவுட்! டெல்லிக்கு எதிராக MI த்ரில் வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
Published on

2025 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது என்பது மீதமுள்ள அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் அவங்க மட்டும் இல்லை, நாங்களும் கோப்பை வெல்லத்தான் வந்திருக்கோம் என தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனைத்து அணிகளும் மும்பை இந்தியன்ஸ்க்கு 5 போட்டியில் 4 தோல்விகளை பரிசளித்தன. ஒரு கட்டத்தில் எல்லாமே சரியா பன்றோம் ஆனால் வெற்றிபெறவே முடியவில்லையே என குழம்பி போனது மும்பை இந்தியன்ஸ் அணி.

வெற்றியின் கடைசி லைன் வரை மும்பை இந்தியன்ஸ் எட்டிப்பார்க்க, ஆட்டத்தின் முடிவில் வெற்றியை மற்ற அணிகள் தட்டிப்பறித்தன.

இந்த சூழலில் 2வது வெற்றியை தேடிய மும்பை அணி, இதுவரை தோல்வியே சந்திக்காமல் 4 வெற்றியுடன் வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

205 ரன்கள் குவித்த மும்பை..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ரோகித் சர்மா சிறந்த டச்சில் தெரிய, ஆஹா இன்னைக்கு ஹிட்மேன் ஷோ-வை பார்க்கப்போகிறோம் என நினைத்தபோது, பவர்பிளேவிலேயே லெக் ஸ்பின்னர் விப்ராஜ் கையில் பந்தை கொடுத்த டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் ரோகித் சர்மாவை 18 ரன்னில் வெளியேற்றினார். கடந்த 3 ஐபிஎல் சீசன்களாக குறைவான பேட்டிங் சராசரி வைத்திருக்கும் தொடக்க வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார் ரோகித் சர்மா. எப்போது தான் ஹிட்மேன் அடிக்கபோறீங்க.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

முதல் விக்கெட்டை இழந்தாலும் அடுத்த விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிக்கல்டன் இருவரும் ரன்வேகத்தை குறையவிடாமல் பார்த்துக்கொண்டனர். 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த ரிக்கல்டனை 41 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார் குல்தீப் யாதவ், ஆனால் ரிக்கல்டன் விட்ட இடத்திலிருந்து அதிரடியை தொடர்ந்த சூர்யகுமார் யாதவும் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்க 13 ஓவரில் 130 ரன்களை கடந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

மீண்டும் வில்லனாக வந்த குல்தீப் யாதவ் இந்தமுறை சூர்யாவை 40 ரன்னில் வெளியேற்றினார்.

திலக் வர்மா
திலக் வர்மா

ஒருத்தர் போனால் ஒருத்தர் என களத்திற்கு வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இருவரும் 5 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்ட 20 ஓவரில் 205 ரன்களை குவித்தது மும்பை அணி.

எப்போது ரிட்டய்ர்டு அவுட் மூலம் மும்பை அணி பாதி போட்டியிலிருந்து வெளியேற்றியதோ, அதற்கு பிறகான இரண்டு ஆட்டத்திலும் வெறித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் திலக் வர்மா. 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய அவர் 59 ரன்கள் அடித்து மும்பையின் 205 டோட்டலில் பெரிய பங்காற்றினார்.

மரண பயத்தை காட்டிய கருண் நாயர்..

206 ரன்கள் அடித்தால் வெற்றி என பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு முதல் பந்திலேயே அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசரை 0 ரன்னில் வெளியேற்றிய தீபக் சாஹர் மும்பைக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்தார்.

ஆனால் ’ஒருத்தன் திடீர்னு உள்ள வந்தான் சார், மொத்தமா ஊதிட்டு போய்ட்டான் சார்’ என்பதுபோல், இம்பேக்ட் வீரராக களத்திற்கு வந்த கருண் நாயர் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபில்லில் கம்பேக் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை கதிகலங்க வைத்தார்.

சையத் முஷ்டாக் அலி டிரோபி, ரஞ்சிக் கோப்பை என அனைத்திலும் ரன்களை வாரிகுவித்து மரண ஃபார்முடன் களமிறங்கிய கருண் நாயர், ஜஸ்பிரித் பும்ராவிற்கு எதிராக 2 ஓவரில் 29 ரன்களை பறக்கவிட்டார். இப்படி பும்ரா அதிக ரன்களுக்கு செல்வதை பார்த்து பல ஐபிஎல் சீசன்கள் கடந்திருக்கும். ஜஸ்பிரித் பும்ராவுக்கே இந்த நிலைமைனா, மற்ற பவுலர்களின் நிலையெல்லாம் அதோகதியாக மாறிப்போனது.

karun nair
karun nair

12 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என திரும்பும் திசையெல்லாம் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட கருண் நாயர், ஹர்திக் பாண்டியாவின் கண்களில் மரண பயத்தை காட்டினார். ஒரு கட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு யாரிடம் பந்தை கொடுப்பது என்றே புரியவில்லை, அடுத்த ஓவரை யாருக்கு கொடுப்பது, எங்கு ஃபீல்டரை நிறுத்துவது என டக்அவுட்டையே பார்த்து பார்த்து பயிற்சியாளர்கள் சொல்ல சொல்ல அதன்படியே அனைத்தையும் செய்துகொண்டிருந்தார்.

ஆனால் என்ன செய்தாலும் கருண் நாயரை மும்பை இந்தியன்ஸ் அணியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. எல்லாமே கைவிட்டுப்போன பிறகு மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்ற முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி லெக் ஸ்பின்னரை உள்ளே எடுத்துவர சொல்ல, இம்பேக்ட் வீரரான கரண் சர்மாவின் கையில் பந்து கொடுக்கப்பட்டது.

கரண் சர்மா
கரண் சர்மா

கருண் நாயரை தானே வீழ்த்த முடியாது, ஆனால் மறுமுனையில் இருந்த அபிஷேக் போரலை வெளியேற்றலாமே என 119 ரன்னுக்கு பிறகு விக்கெட்டை எடுத்துவந்த கரண் சர்மா கலக்கிப்போட்டார். ’பேசாம நீங்களே கேப்டன்சி பண்ணுங்க ரோகித் சர்மா’ என்ற நிலைமைக்கே சென்றனர் மும்பை ரசிகர்கள்.

விக்கெட் விழுந்தாலும் அதிரடியை நிறுத்தாத கருண் நாயர் சதத்தை நோக்கி செல்ல ’இதான் யா பவுலிங்’ என ஒரு மாயாஜால பந்தை வீசிய மிட்செல் சாண்ட்னர் கருண் நாயரை 89 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றினார்.

 3 பந்தில் 3 ரன்அவுட்.. மும்பை த்ரில் வெற்றி! 

மிகப்பெரிய விக்கெட்டை சாய்த்த பிறகு உடனடியாக பந்துவீசவந்த பும்ரா கேப்டன் அக்சர் பட்டேலின் விக்கெட்டை எடுத்துவர டெல்லி அணி மீது அழுத்தம் அதிகமானது.

144 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் சரிந்தாலும் களத்தில் கேஎல் ராகுல் என்ற மேட்ச் வின்னரும், அதிரடி வீரர் ஸ்டப்ஸும் உள்ளே வந்தனர். ’இந்த 2 விக்கெட் தானே வேணும், இதோ இப்ப கிளியர் பண்ணிடுவோம்’ என மீண்டும் வில்லனாக வந்த கரண் சர்மா, கேஎல் ராகுலை 15 ரன்னிலும், ஸ்டப்ஸை 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றி மும்பை அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.

கடைசி 4 ஓவருக்கு 42 ரன்கள் தேவையென்ற நிலைக்கு போட்டி செல்ல, ஆட்டம் இந்தப்பக்கமா அந்தபக்கமா என மாறியது. டெல்லி அணிக்கு இன்னும் வெற்றியை பெற்றுத்தரும் ஜோடியான அஷுதோஷ் சர்மா மற்றும் விப்ரஜ் நிகம் இருவரும் களத்தில் இருந்தனர்.

கரண் சர்மா
கரண் சர்மா

முக்கியமான தருணத்தில் 17வது ஓவரை சிறப்பாக வீசிய டிரெண்ட் போல்ட் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து டெல்லி அணியின் மீது அழுத்தத்தை அதிகப்படுத்தினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே சாண்ட்னருக்கு எதிராக சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்ட விப்ராஜ் நிகம் மீண்டும் அழுத்தத்தை மும்பை அணியின் பக்கம் திருப்பிவிட்டார். ஆனால் அடுத்தபந்தையும் சிக்சர் அடிக்க முயன்ற விப்ராஜை ஸ்மார்ட்டாக பவுலிங் போட்ட சாண்ட்ன்ர் ஸ்டம்ப்அவுட் மூலம் வெளியேற்றினார்.

கடைசி 12 பந்துக்கு 23 ரன்கள் மட்டுமே வேண்டும் என்ற நிலைக்கு போட்டி செல்ல பும்ரா வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய அஷுதோஷ் சர்மா மிரட்டிவிட்டார். ஆனால் அடுத்தபந்தை பும்ரா சிறப்பாக வீச, 1 ரன் மட்டுமே இருந்த இடத்தில் இரண்டாவது ரன்னுக்கு சென்ற அஷுதோஷ் சர்மா ரன் அவுட்டாகி வெளியேறினார்.

RunOut
RunOut

பும்ரா போன்ற ஒருபவுலருக்கு எதிராக 4 பந்தில் 9 ரன்கள் அடித்தபிறகு எதற்காக ஆபத்தான இன்னொரு ரன்னுக்கு செல்லவேண்டும் என்ற முடிவுக்கு அஷுதோஷ் சென்றார் என்பது புரியவேயில்லை. அடுத்த ஓவரில் நீங்கள் 15 ரன்களை கூட அடித்திருக்கலாமே என ரசிகர்கள் புலம்பவே செய்தனர்.

அஷுதோஷ் மட்டுமில்லை அடுத்து களத்திற்கு வந்த குல்தீப் யாதவும் இரண்டாவது ரன்னுக்கு சென்று ரன் அவுட்டாக இரண்டு பந்தில் 2 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

RunOut
RunOut

கடைசி ஓவருக்கு போட்டி செல்லும் சூப்பர் ஓவர் வரக்கூட வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் ரசிகர்கள் காத்திருக்க, பும்ரா வீசிய கடைசி பந்திலும் ரன்அவுட்டாக, வரிசையாக 3 பந்தில் 3 ரன்அவுட்களை பறிகொடுத்த டெல்லி அணி தோல்வியை தழுவியது.

கேஎல் ராகுலின் பொறுப்பற்ற ஆட்டம், அஷுதோஷ் சர்மாவின் தவறான ரன் அவுட் என அனைத்தும் சேர்ந்து கருண் நாயரின் தலைசிறந்த ஆட்டத்தை வீணடித்தது.

MI 2025
MI 2025

ஒருவழியாக மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சந்திக்க கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முகத்தில் மிகப்பெரிய நிம்மதி தெரிந்தது. இந்த த்ரில் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. தனிப்பட்ட வீரரின் உதவியால் வெல்லாமல் ஒருஅணியாக ஒன்று சேர்ந்து வென்றிருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com