மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்web

’பல்தான்ஸ் வரலாறு எடுத்து பாருங்க’| முதல் 5 போட்டியில் 4-ல் தோல்வி.. தரமான கம்பேக் கொடுத்த MI!

தொடர் தோல்விகளை சந்திப்பதும் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து சில சமயம் சாம்பியன் கூட ஆவதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிது அல்ல. இதற்கு முன்பு இதேபோல் நடந்த சுவாரஸ்யங்களை இங்கே காணலாம்.
Published on

தோல்விகளுக்கு பின் வெற்றிப்பாதைக்கு திரும்புவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலமுறை நடைபெற்றுள்ள போதும் 2015 ஐபிஎல் தொடர் அதில் சிறப்பு வாய்ந்தது. முதல் ஐபிஎல் சீசன் குறித்து பார்த்துவிட்டு அதன்பிறகு 2015 ஐபிஎல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதல் ஐபிஎல் தொடரிலேயே முதல் 4 போட்டியில் தோல்வி!

மும்பை அணிக்கு முதல் ஐபிஎல் சீசனே அப்படித்தான் அமைந்தது. சச்சின் டெண்டுல்கர், சனாத் ஜெயசூர்யா, ஹர்பஜன் சிங், ஷான் பொல்லாக், லஷித் மலிங்கா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட ஸ்டார் வீரர்களுடன் களமிறங்கிய மும்பை அணி மீதுதான் முதல் ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தொடக்கமே அதற்கு நேர்மாறாக அமைந்தது. முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. அதன் பிறகு தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று மீண்டு வந்தது மும்பை அணி.

mumbai indians
mumbai indians

இருப்பினும் அதன் பிறகு ஹாட்ரிக் தோல்வி பின் ஒரு வெற்றியை பெற்று நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பை ரன் ரேட்டில் நழுவ விட்டது மும்பை அணி.

திரும்பி பார்க்க வைத்த 2015 ஐபிஎல் தொடர்!

முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரோகித் சர்மா 65 பந்துகளில் 98 ரன்கள் அடித்த போதும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 178 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. அந்தப் போட்டியில் வெறும் 164 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. அந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் உட்பட முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்ப பொல்லார்டு 34 பந்துகளில் 70 ரன்களில் விளாசி 164 ரன்கள் என்ற கவுரமான ரன் குவிப்புக்கு உதவினார். ஆனாலும் தோல்வியே கிடைத்தது.

mumbai indians
mumbai indians

அடுத்து சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் பொல்லார்டின் 64 ரன்கள் குவிப்பால் 183 ரன்கள் குவித்தபோதும் சென்னை அணி 16.4 ஓவரிலேயே அடித்து வெற்றியை பறித்தது.

தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் மும்பை அணி அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிரானப் போட்டியில் 209 ரன்கள் குவித்த பிறகுதான் முதல் வெற்றியை பதிவு செய்தது MI. ஆனால், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் தோல்வி அடைய ரசிகர்கள் நொந்தே போனார்கள்.

mumbai indians 2015
mumbai indians 2015

முதல் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வி. ஆனால், அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. ஆம், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணியை 137 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றிபெற்று, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி, சென்னை அணிகளுக்கு எதிராக எளிய வெற்றியை தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி மீண்டும் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக அசத்தல் வெற்றியுடன் பிளே ஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி.

mumbai indians
mumbai indians

14 போட்டிகளில் 6 தோல்வி, 8 வெற்றிகளுடன் பிளே ஆஃப்க்குள் நுழைந்தது. முதல் தகுதிச் சுற்றில் சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை சென்றது. மீண்டும் இறுதிப் போட்டியிலும் சென்னை அணியுடன் தான் மோதியது. இறுதிப் போட்டியில் 202 ரன்கள் குவித்தது மும்பை அணி. சென்னை அணியை 161 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி கோப்பையை தட்டிச் சென்றது மும்பை அணி.

2014 போட்டியில் மேஜிக் நிகழ்த்திய MI !

2014 ஐபிஎல் தொடரில் முதல் 5 போட்டிகளில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி. பின்னர் அடுத்தடுத்து இரண்டு வெற்றி, பின் ஒரு தோல்வி, ஒரு வெற்றி என மாறி மாறி வந்தது. கடைசி 4 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப்க்குள் நுழைந்தது மும்பை. இருப்பினும் எலிமினேட்டரில் சென்னையிடம் தோற்று வெளியேறியது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவி பின்னர் மீண்டு வந்து பிளே ஆஃப்க்குள் நுழைவது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. ஆனால் ஒன்றுமே இல்லை என்ற இடத்திலிருந்து வெற்றிபெறமுடியும் என்பதை எல்லாம் மும்பை அணி மட்டுமே சாத்தியப்படுத்தியிருந்தது.

mumbai indians
mumbai indians

அப்படியான மீண்டெழும் குணம் கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் தான் பல்தான்ஸ் அணியை எப்போதும் எந்த அணியும் எளிதில் எடுத்துக்கொள்ளாமல் விளையாடும், அப்படி நடப்பு தொடரிலும் தோல்விப் பாதையில் இருந்த மும்பை அணி தற்போது வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

2025 சீசனில் தடாலடியாக கம்பேக் கொடுத்த மும்பை!

நடப்பு 2025 சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளுமே அடைந்தன. இதில் இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், சென்னை அணி வீரர்களிடம் வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் மந்தமாக விளையாடியது, அதாவது போராட்டக் குணம் இல்லை. ஆனால், மும்பை விளையாடிய போட்டிகளில் அதன் போராட்ட குணம் வெளிப்பட்டுக் கொண்டே வந்தது. அதுதான் நிச்சயம் அந்த அணி மீண்டு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

csk vs mi
csk vs mi

முதல் போட்டியில் சென்னை அணியிடம் 155 ரன்கள் எடுத்த போதும் போராடியே தோற்றது. இரண்டாவது போட்டியில் குஜராத் அணியிடம் எளிதாக தோற்றது. பின்னர் மூன்றாவது போட்டியில் கொல்கத்தாவை 116 ரன்களுக்கு சுருட்டி அதனை 12.5 ஓவர்களிலேயே அடித்து துவம்சம் செய்தது மும்பை அணி. லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் 200 ரன்களுக்கு மேல் தான் இலக்கு இருப்பினும், இறுதிவரை போராடி வெறும் 12 ரன்கள் வித்தியாசத்திலேயே தோற்றது. இதற்கு பின் தான் விஸ்வரூபம் எடுத்தது மும்பை.

mumbai indians 2025
mumbai indians 2025

அடுத்த மூன்று போட்டிகளில் தரமான சம்பவம் செய்து கம்பேக்னா இப்படிதான் இருக்கும் என்று எடுத்துக்காட்டியது. எல்லா டீமையும் வீழ்த்தி வந்த டெல்லி அணியை வீழ்த்தியது. அதிரடிக்கு பெயர் போன ஹதராபாத்தை 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அதனை 18.1 ஓவரிலேயே எட்டியது. அதனையும் மிஞ்சும் வகையில் சென்னைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவும், சூர்ய குமார் யாதவும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். 176 ரன்கள் என்ற இலக்கை 15.4 ஓவர்களிலேயே எட்டி எல்லா அணிகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியது.

ஃபார்ம் அவுட்டில் இருந்த ரோகித் சர்மா, திலக் வர்மா, வில் ஜாக்ஸ் அனைவரும் ஃபார்முக்கு திரும்பியாச்சு, காயத்திலிருந்து பும்ராவும் திரும்பி வந்தாச்சு என்ற நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த சீசன் பெரிய பலத்தை கொடுத்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமா மேல வரானுங்க சார் என்பது போல தரமான கம்பேக் கொடுத்துவருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com