”இனி நாங்கதான்” 150வது வெற்றி.. முதல் அணியாக வரலாறு படைத்த மும்பை! புள்ளி பட்டியலில் 2வது இடம்!
திரைப்படங்களில் எப்படி ஹீரோக்கள் முதலில் அடிவாங்கிவிட்டு பின்பு அடிப்பார்களோ, அப்படியே காலங்காலமாக ஐபிஎல் சீசன்களில் செய்துவருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதல் பாதியில் வரிசையாக 4 போட்டியில் தோல்வி, மோசமான பேட்டிங், இந்த அணியெல்லாம் தேராது என்றவிதத்தில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது பாதியில் அப்படியே தலைகீழான ஒரு அணியாக உருவெடுக்கும். இரண்டாம் பாதியில் ’ஐபிஎல் எங்க கோட்டை, எந்த அணியாலும் எங்களை வீழ்த்தவே முடியாது’ என்னும் வகையில் தரமான கிரிக்கெட்டை விளையாடி பிளே ஆஃப்க்குள் கெத்தாக காலடி எடுத்துவைக்கும். அப்படியே 2025 ஐபிஎல் சீசனிலும் செய்துவருகிறது பல்தான்ஸ் படை.
முதல் 5 போட்டிகளில் நான்கில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, என்ன யா விளையாடுறீங்க என்று புலம்பும் வகையில் மோசமான பேட்டிங் மற்றும் படுமோசமான பவுலிங் என வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியில் கடைசி வரிசையில் பின்தங்கியது.
இந்த சூழலில் இரண்டாவது பாதியில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றிபெற்று தரமான கம்பேக் கொடுத்திருக்கும் மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது.
215 ரன்கள் குவித்த மும்பை அணி..
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. நல்ல டாஸ்ஸை வென்றபோதிலும் முதலில் பேட்டிங் செய்து பெரிய டோட்டலுக்கு செல்லாமல், பந்துவீச்சை தேர்வுசெய்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் சொதப்பினார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்கம் முதலே வந்தவீரர்கள் அனைவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஹிட்மேன் ரோகித் சர்மா 2 சிக்சர்களை பறக்கவிட்டபோதிலும் 12 ரன்னுக்கு நடையை கட்டினார். ஆனால் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரியான் ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ரோகித் சர்மா விட்ட இடத்திலிருந்து பின்தொடர்ந்தனர்.
லக்னோ பவுலர்களை டாமினேட் செய்த ரிக்கல்டன் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என விளாசி 58 ரன்கள் அடித்து வெளியேறினார். வில் ஜாக்ஸ் 29 ரன்னில் அவுட்டாக, 4வது வீரராக களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார்.
சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் அடித்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் போட்டாலும், 6, 5 என சொற்ப ரன்களுக்கு வெளியேறிய திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சொதப்பினர்.
இறுதிநேரத்தில் லக்னோ அணி இழுத்துப்பிடித்தாலும் நடப்பு சீசனில் எக்ஸ் ஃபேக்டர் வீரராக ஜொலித்துவரும் நமன் திர், கடைசியாக வந்து 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என சிதறடித்தார். மறுமுனையில் தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் பாஷ் 10 பந்துக்கு 20 ரன்கள் அடிக்க 215 ரன்களை குவித்தது மும்பை அணி.
161 ரன்னுக்கு சுருண்ட லக்னோ அணி..
216 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியில், தொடக்க வீரர்களான மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியாகவே தொடங்கினர். ஆனால் 3வது ஓவரை வீசவந்த ஜஸ்பிரித் பும்ரா மார்க்ரமை 9 ரன்னில் வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தார்.
அடுத்து களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் ஹாட்ரிக் சிக்சரை பறக்கவிட்டு அச்சுறுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்த, இடது கை ஆஃப் ஸ்பின்னரான வில் ஜாக்ஸ் ஒரே ஓவரில் பூரன் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி அசத்தினார்.
திடீரென லக்னோ அணி மொமண்ட்டமை இழக்க, தொடர்ந்து லக்னோவை எழவே விடாமல் டிரெண்ட் போல்ட்டை களமிறக்கிய ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டி லக்னோ அணிக்கு நம்பிக்கை கொடுத்த மிட்செல் மார்ஷை 34 ரன்னில் வெளியேற்றினார்.
நல்ல ஃபார்மில் இருந்துவரும் ஆயுஸ் பதோனியையும் போல்ட் வெளியேற்ற, அடுத்து வந்த வீரர்களை எல்லாம் பும்ரா பார்த்துக்கொண்டார். இரண்டு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாத லக்னோ அணி 161 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.
54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி, தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவுசெய்த பிறகு புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.
முதல் அணியாக வரலாறு படைத்த மும்பை!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வென்றதற்பிறகு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றிகளை பதிவுசெய்த முதல் அணியாக மாறி சாதனை படைத்துள்ளது மும்பை அணி.
அதேபோல மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த லசித் மலிங்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.
பந்துகள் அடிப்படையில் குறைவான பந்துகளில் 4000 ஐபிஎல் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரராக மாறி சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபிடி வில்லியர்ஸுக்கு அடுத்த இடத்தில் நீடிக்கிறார் சூர்யகுமார் யாதவ்.