MIvsSRH
MIvsSRHpt web

தரமான சம்பவம்.. ஃபயர் ஆன மும்பை அணி! மீண்டும் படுத்தேவிட்ட SRH-க்கு 5வது தோல்வி!

2025 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.
Published on

பரிதாபமான நிலையில் MI மற்றும் SRH

இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னால் யாரிடமாவது வெயிட்டான 2 டீம் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்றுதான் சொல்லுவார்கள். 5 முறை கோப்பையை தட்டித் தூக்கிய அணி மும்பை அணி, எந்த சீசனில் வெடிக்கும் என்றே சொல்ல முடியாது. டீமாக வேற லெவல் பிளேயர்கள் கொண்ட அணி அது. அதேபோல்தான் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா கூட்டணியை நினைத்தாலே எதிரணியினரின் வயிற்றில் புளியை கரைக்கும். அந்த ஜோடியின் அதிரடி தான் கடந்த ஐபிஎல் தொடரில் ரன்னர் அப் வரை அவர்களை கொண்டு சென்றது. ஆனால், இந்த கணிப்பு எல்லாம் இந்த சீசன் தொடங்கிய சில போட்டிகளிலேயே காணாமல் போனது. மிகவும் பரிதாபகரமான நிலையிலேயே இரண்டு அணிகளும் தற்போதுவரை இருக்கின்றன.

இரு அணிகளும் மோதிய இந்தப் போட்டியில் என்ன நடந்தது யார் வெற்றி பெற்றார்கள், யார் தோற்றார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்பாக, இரு அணிகள் கடந்து வந்த தோல்வி பயணத்தை முதலில் பார்த்துவிடலாம். ஏன் என்றால் எந்த அளவிற்கு இந்த இரு அணிகளுக்கும் இந்தப் போட்டியின் வெற்றி முக்கியம் என்பது அப்பொழுதுதான் புரியும்.

கடந்து வந்த பாதை

மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை அணியிடம் அடி வாங்கியது. எப்பொழுதுமே சென்னை அணியை வீழ்த்தும் வல்லமை கொண்ட மும்பை அணி அன்று கோட்டைவிட்டது. சென்னையை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும் சிக்கி சின்னாபின்னமானது மும்பை. கொல்கத்தா அணியை 116 ரன்களில் சுருட்டி மூன்றாவது போட்டியில் வெறித்தனமான வெற்றி பெற்றாலும், லக்னோ, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்தது தோல்வியை தழுவி தோல்விகளின் எண்ணிக்கையை கூட்டியது. விளையாடிய 5 போட்டிகளில் 4ல் தோல்வியை தழுவி பரிதாபகரமான நிலையில் இருந்த மும்பை அணி, கடந்தப் போட்டியில் டெல்லியை வீழ்த்தி நம்பிக்கையுடன் ஹைதராபாத்தை இந்தப் போட்டியில் எதிர்கொண்டது.

srh team
srh teamweb

அதேபோல், ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியிலேயே ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து ஐபிஎல் ரசிகர்களின் புருவங்களை உயர்த்தும் வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், அதன் பின் நடந்ததுதான் சோகக்கதை. ஹைதராபாத் அணியா இது என்று எள்ளி நகையாடும் வகையில் தோல்விகளை தொடர்ந்து பரிசாக ரசிகர்களுக்கு கொடுத்தது அந்த அணி. லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத் என வரும் ஒவ்வொரு அணியும் ஹைதராபாத் அணியை அடித்து இரண்டு பாய்ண்ட்ஸ்களை அள்ளிச் சென்றார்கள். எந்த பேட்டிங் அவர்களுக்கு பலமாக இருந்ததோ அதுவே படுமோசமாக மாறிப்போனது. ஆனாலும், கடந்த போட்டியில் பஞ்சாப்பை அடித்து துவைத்து கம்பேக் கொடுத்தார்கள் எஸ்.ஆர்.ஹெச். நாங்க இன்னும் பேட்டிங்கில் கிங் தான் என அபிஷேக் சர்மா செஞ்சுரி அடித்து மிரட்டினார். இப்படி மும்பை, ஹைதராபாத் அணிகள் இரண்டும் கடந்தப் போட்டியின் வெற்றியுடன் இந்தப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்கள். இப்பொழுது வாருங்கள் இந்தப் போட்டியில் நடந்ததை பார்க்கலாம்.

அதிரடி காட்டிய அபிஷேக்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி பேட்டிங்கில் பொலந்து கட்டுவார்கள் என்று தெரிந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் அவர்களையே முதலில் பேட்டிங் செய்ய சொல்லியிருக்கிறார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அபிஷேக் சர்மா இந்தப் போட்டியிலும் வான வேடிக்கையை தொடக்கம் முதலே காட்டினார். டிராவிஸ் ஹெட்டோ ரொம்பவுமே மந்தமாக பேட்டிங் செய்தார்.

அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களத்திற்கு வந்த இஷான் கிஷனும் இரண்டே ரன்களில் நடையைக்கட்டினார். நீங்க போனா நானும் பின்னாடியே வர்றேன் என்று பேட்டிங்கில் ரன் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த ஹெட் 29 பந்துகளில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். சந்தித்த பந்துகளை விட ஹெட் கம்மியா ரன் எடுத்திருக்கிறார் என்றால் நம்பவே முடியாததாக இருந்தது. அந்த அளவிற்கு மும்பை வீரர்கள் அற்புதமாக பந்துவீசினார்கள். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் கிளாசன் இருவரும் ரன்கள் எடுக்க முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டார்கள். இந்த ஆண்டு நிதிஷ் குமார் ரெட்டிக்கு சரியாகவே அமையவில்லை போல. 21 பந்துகளை சந்தித்து வெறும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். க்ளாசென்னும் கடைசி நேரத்தில் கொஞ்சம் ஷாட் ஆடி 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியாக அனிகெட் வர்மா 8 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை எட்டியது. தீபக் சாஹர் வீசிய 18 மற்றும் ஹர்திக் பாண்டியா வீசிய 20 ஆவது ஓவர்களில் ரன்கள் வரவில்லை என்றால் 150 ரன்களை கூட அவர்கள் எட்டியிருக்கமாட்டார்கள். 200 ரன்களுக்குமேல் அசால்ட்டாக அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், 162 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பைக்கு ஓரளவுக்கு எளிய இலக்கை ஹைதராபாத் கொடுத்தார்கள்.

ஆட்ட நாயகன் வில்ஜாக்ஸ்

மும்பை அணியை பொறுத்தவரை தான் ஒரு உலகத்தரமான பந்துவீச்சாளர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்தார் ஜஸ்பிரிட் பும்ரா. 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். அதேபோல், ட்ரெண்ட் போல்ட்டும் நானும் அதற்கு சளைத்தவன் அல்ல என்று 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். இவர்கள் இருவரையும் விட மும்பை அணியில் வில் ஜாக்ஸ்தான் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். 3 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததோடு இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜாக்ஸ். தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா இருவரும் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார்கள்.

163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு வழக்கம் போல் அதிரடி ஷாட்களுடன் தொடங்கினார் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா. சில ஷாட்கள் ஒர்க்அவுட் ஆகி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டாலும் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வழக்கம் போல் நடையைக் கட்டினார். மும்பை அணியில் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் சராசரியாக 20 - 30 ரன்கள் கொடுத்துவிட்டு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தார்கள். ரியான் ரிக்கெல்டன் 23 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பந்துவீச்சில் கலக்கிய வில் ஜாக்ஸ் பேட்டிங்கிலும் அசத்தி 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தன்னுடைய பாணியில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். திலக் வர்மா நிதானமாக விளையாட கேப்டன் ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தார். ஒரு ரன் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், வின்னிங் ஷாட் ஆட முயன்று விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நமன் திர் மூன்று பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆன போதும், திலக் வர்மா பவுண்டரியுடன் ஆட்டத்தை வெற்றிக்கோட்டை எட்ட வைத்தார். மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அற்புதமாக விளையாடிய வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

7 போட்டிகளில் விளையாடி தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. 5வது தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் உள்ள சென்னைக்கு அடுத்தபடியாக 9வது இடத்தில் உள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை ஆட்டம் பிடித்துவிட்டால் அந்த சீசனில் அவர்கள் ஜெட் வேகத்தில் வெற்றிகளை குவித்துவிடுவார்கள். அடுத்தப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com