759 ரன்கள்.. இறுதிவரை போராடிய சாய்! பும்ரா உதவியால் Qualifier 2-ல் நுழைந்த MI! வெளியேறியது GT!
2025 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்திய நிலையில், 18வது ஐபிஎல் கோப்பை யாருக்கு என்ற கேள்வி அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்த ஆர்சிபி அணி, 2025 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பட்லர், ரபாடா போன்ற மேட்ச் வின்னர்கள் இல்லாததால் மும்பை இந்தியன்ஸை குஜராத் அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கவலை டைட்டன்ஸ் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருந்தது. அதேநேரத்தில் 1200 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி டைட்டன்ஸ் அணிக்கு வெற்றியை தேடித்தருவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
228 ரன்கள் குவித்த மும்பை..
அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் பவுலர்கள் விக்கெட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தபோதுsம், கைக்கு வந்த கேட்ச்களை எல்லாம் கோட்டைவிட்ட டைட்டன்ஸ் அணி ஃபீல்டர்கள் சொதப்பினர். அதிலும் விக்கெட் கீப்பர் குசால் மெண்டீஸ் 2 கேட்ச்களை கோட்டைவிட்டது அணிக்கு பெரிய பாதகமாக மாறியது.
கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொண்ட பேர்ஸ்டோ மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்மழை பொழிந்தனர். 22 பந்தில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 47 ரன்கள் அடித்த பேர்ஸ்டோ தரமான தொடக்கத்தை கொடுக்க, 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 81 ரன்கள் குவித்த ரோகித் சர்மா மிகப்பெரிய டோட்டலுக்கு அடித்தளம் போட்டார்.
அடுத்தடுத்து வந்த சூர்யகுமார் 33 ரன்கள், திலக் வர்மா 25 ரன்கள் மற்றும் ஹர்திக் பண்டியா 22 ரன்கள் என அடித்து நொறுக்க 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
20 ரன்னில் தோற்ற குஜராத்..
மும்பை அணியை இழுத்துப்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், கேட்ச்சை தவறவிட்டும், மோசமான பந்துவீச்சையும் வெளிப்படுத்திய டைட்டன்ஸ் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
229 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களம்கண்ட டைட்டன்ஸ் அணிக்கு, தன்னுடைய இன்ஸ்விங் டெலிவரி மூலம் முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை அவுட்டாக்கி வெளியேற்றிய டிரெண்ட் போல்ட் மும்பை அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். விரைவாகவே விக்கெட்டை இழந்தாலும் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சாய் சுதர்சன் மற்றும் குஷால் மெண்டீஸ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். சாய் சுதர்சன் பவுண்டரிகளாக விரட்ட, அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட குஷால் மெண்டீஸ் நம்பிக்கை கொடுத்தார். 6 ஓவருக்கு 67 ரன்களை கடந்து எல்லாம் சரியாக சென்றுகொண்டிருக்க, சாண்ட்னர் வீசிய பந்தில் ஹிட்விக்கெட்டான மெண்டீஸ் சொதப்பிவிட்டு வெளியேறினார். குஷால் மெண்டீஸின் மோசமான செயல்பட்டால் விக்கெட் கீப்பிங்கில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பட்லரை மிஸ் செய்தனர் டைட்டன்ஸ் ரசிகர்கள்.
அடுத்துவந்த வாசிங்டன் சுந்தர் மட்டும் என்ன அடிக்க போகிறார் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது, ஆனால் ஒரு பக்கம் சாய் சுதர்சன், மறுபக்கம் வாசிங்டன் சுந்தர் என வெளுத்துவாங்கிய தமிழக வீரர்கள் ஜோடி மும்பை இந்தியன்ஸை கதிகலங்க வைத்தது. 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய வாசிங்டன் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்த, 14வது ஓவரை வீசவந்த பும்ரா ஒரு அற்புதமான யார்க்கர் மூலம் சுந்தரை போல்டாக்கி வெளியேற்றினார். அதுவரை ஓவருக்கு 12 ரன்கள் என விரட்டிக்கொண்டிருந்த ஜோடியை பிரித்துவைத்த பும்ரா, மும்பை அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.
49 பந்தில் 10 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டி sதனியொரு ஆளாக போராடிய சாய் சுதர்சன், அடித்து ஆடும் முயற்சியில் 80 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சுதர்சன் வெளியேறிய பிறகு என்னதான் டைட்டன்ஸ் அணி போராடினாலும் வெற்றியை பெறமுடியவில்லை. முடிவில் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய மும்பை அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது. குஜராத் அணி எலிமினேட்டர் சுற்றுடன் தொடரிலிருந்தே வெளியேறியது.
சாய் சுதர்சன் படைத்த சாதனை..
நடப்பு சீசனில் தலைசிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 15 போட்டிகளில் 6 அரைசதம் மற்றும் 1 சதமடித்து 759 ரன்கள் குவித்து முடித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் 700 ரன்களுக்கு மேல் அடித்த 3வது இந்திய வீரராகவும், முதல் தமிழக வீரராகவும் மாறி சாதனை படைத்துள்ளார் சாய் சுதர்சன். விராட் கோலி, சுப்மன் கில்லுக்கு பிறகு ஒரு ஐபிஎல் சீசனில் 700 ரன்கள் குவித்த இந்திய வீரர் சாய் சுதர்சன் மட்டுமே.
இன்றைய போட்டியில் 81 ரன்கள் அடித்த ரோகித் சர்மா, ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பிறகு 7000 ரன்களை கடந்த இரண்டாவது வீரராகவும், ஐபிஎல்லில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரராகவும் மாறி சாதனை படைத்தார்.
நாளை மறுநாள் நடக்கவிருக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.