மோதல் யூகங்களை நொறுக்கிய ஜடேஜாவின் அந்த செயல்- விக்கெட்டுக்காக ஏங்கிய ரசிகர்கள் ‘வாவ்’ சொன்ன தருணம்!

தோனிக்கும்-ஜடேஜாவுக்கும் மோதல் நிலவி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று வின்னிங் ஷாட் அடித்ததும் ஸ்டிரைக்கரிலிருந்து நேரடியாக தோனியிடம்தான் சென்றார் ஜட்டு.
MS Dhoni-Ravindra Jadeja
MS Dhoni-Ravindra JadejaTwitter

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே லீக் சுற்றுகள் துவங்கின. முதல் லீக் சுற்றில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், அதே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5-வது முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது.

இறுதிப்போட்டியில் அதுவும் இறுதிப் பந்தில் நடக்கும் ட்விஸ்ட்களை தாண்டி, கடந்த இரண்டு நாட்களாக இயற்கை (மழை) காட்டிய ட்விட்ஸ்கள் ஏராளம். நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5-வது பந்தை சிக்ஸராகும், 6-வது பந்தை பவுண்டரிக்கும் அடித்து வின்னிங் ஷாட் அடித்த ஜடேஜா, பந்து பவுண்டரி லைனுக்கும் சென்றதும் துள்ளிக் குதித்து மைதானத்தின் ஓரத்தில் மகிழ்ச்சி துள்ளலுடன் ஓடிவந்தார்.

அப்போது, மற்ற வீரர்கள் எல்லாம் ஜடேஜாவை தேடி மைதானத்திற்குள் ஓடிவர, ஜடேஜாவோ நேராக தோனியிடம் சென்று அவரை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அப்போது, உணர்ச்சிப் பெருக்கில், லேசாக கண்கள் தழும்ப தோனியும் அப்படியே ஜடேஜாவை அலேக்காக தூக்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்தார்.

மிகவும் சிறப்பான இந்தத் தருணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், போட்டி முடிந்தப் பின்பு பேசிய ஜடேஜா, “எனது சொந்தக் கூட்டத்தின் முன் ஐந்தாவது முறையாக பட்டத்தை வென்றது அற்புதமான உணர்வாக இருக்கிறது. சென்னை அணிக்கு ஆதரவாக அவர்கள் வந்துள்ளனர். ரசிகர்களின் கூட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. மழைபெய்த நிலையிலும், இரவு வரை போட்டிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

சென்னை அணி ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்ல வேண்டும். இந்த வெற்றியை எங்கள் அணியின் சிறப்பு உறுப்பினர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். எதுவும் நடக்கலாம் என்பதால், எவ்வாறு இருந்தாலும் கடினமாக ஆட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மோஹித் மெதுவாக பந்து வீசக்கூடியவர் என்பதால் பந்தை நேராக அடிக்க நினைத்திருந்தேன். சிஎஸ்கேவின் ஒவ்வொரு ரசிகருக்கும் வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உற்சாகப்படுத்த விரும்புகிறீர்களோ, அப்படியே உற்சாகப்படுத்துங்கள்” என்று தெரிவித்தார்.

கடந்த 2022-ம் வருடம் ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்துக்கொண்டு சென்னை அணிக்கு சரியாக வெற்றியை தரமுடியாத நிலையில், அந்தப் பதவியிருந்து பாதிப் போட்டியில் விலகினார் ஜடேஜா. அதுமுதலே பல சம்பவங்கள், குறிப்பாக ஜடேஜாவின் பதிவு, தோனி மற்றும் சிஎஸ்கேவுக்கு எதிராக இருந்து வந்ததாகவே கூறப்பட்டு வந்தது. மேலும், தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று கூறப்பட்டு வந்ததால், ஜட்டுவின் விக்கெட்டுக்காக சென்னை ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டதை எல்லாம் வெளிப்படையாகவே பேசியிருந்த ஜடேஜா, அதுகுறித்து ட்விட்டர் பதிவும் செய்திருந்தார்.

ஆனால், அதனை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில், ஜடேஜா மற்றும் தோனிக்கு இடையில் இருக்கும் பிணைப்பை நேற்று பார்க்க முடிந்தது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் தனது விக்கெட்டுக்காக ஏங்கிய ரசிகர்களையே பிரார்த்திக்க வைத்து வெற்றிவாகை சூடியுள்ளார் ஜடேஜா. ‘கடைசிப் பந்தில் ஆட்டத்தை மாற்றும் வல்லமை படைத்தவர் ஜடேஜா’ என்று முன்பு தோனி சொன்னதை நேற்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஜட்டு. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எம்.எஸ்.தோனி என்ற ஒருவருக்காகவே மட்டுமே இதனைச் செய்தோம்’ என்று வெற்றிக்கோப்பை மற்றும் தனது மனைவியுடன் சேர்ந்து தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரவீந்திர ஜடேஜா பகிர்ந்துள்ளார். நேற்று சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதைக் காட்டிலும், இந்த புகைப்படங்களே வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com