MPL 2025 | ஒரேநேரத்தில் மூன்று ரன் அவுட் மிஸ்.. வீரர்கள் செய்த செம்ம கலாட்டா.. #ViralVideo
வளர்ந்து வரும் விதவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் டி20 போட்டி என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அப்படியான ஒரு சம்பவம்தான் தற்போது அரங்கேறி இருக்கிறது. மகாராஷ்டிரா பிரீமியர் லீக் 2025 தொடரில், வெளியேற்றும் சுற்றுப் போட்டியில் ராய்காட் ராயல்ஸ் மற்றும் கோலாப்பூர் டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இதில், ராய்காட் ராயல்ஸுக்கு எதிராக கோலாப்பூர் டஸ்கர்ஸ் ஒரேநேரத்தில் மூன்று ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்டதால், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராய்காட் ராயல்ஸ் அணி வீரர் விக்கி ஓஸ்வால் தாம் எதிர்கொண்ட ஒரு பந்தை ஆஃப்-சைடுக்கு வெளியே அடிக்க, அதில் ஒரு ரன் எடுக்கப்படுகிறது. பின்னர், அந்தப் பந்தை ஃபீல்டர் தவறவிட, 2வது ரன்னுக்கு பேட்டர்கள் இருவரும் ஓட, எதிர்பாராமல் முட்டி மோதிக்கொண்டு கீழே விழுந்தனர். இதற்குள் பந்தை ஃபீல்டர் எடுத்து விக்கெட் கீப்பருக்கு எறிய, அவர் அப்போதே ஸ்டிக்கில் வைக்காமல் எதிர் முனைக்கு தூக்கி எறிகிறார். ஆனால், அங்கோ பவுலர் பந்தைப் பிடிக்காமல் வெறும் கையால் ஸ்டிக்கைத் தட்டிவிடுகிறார்.
இதையடுத்து, வேறொரு ஃபீல்டர் அந்தப் பந்தைத் தூக்கிக் கொண்டு அடுத்த எதிர் முனைக்கு ஓடியபடியே ஸ்டிக்கில் அடிக்க முற்படுகிறார். ஆனால், அதில் அடிக்காமல் பந்து போய்விடுகிறது. இதனால், ஒரே நேரத்தில் மூன்று ரன் அவுட் மிஸ் ஆகிறது. முன்னதாக, விக்கெட் கீப்பரிடம் பந்து வந்தபோதே, அதை அவர் செய்திருந்தால், ஒரு விக்கெட் விழுந்திருக்கும். இதைச் செய்யாததால், விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே, இதுபோன்று குழந்தைகள் ரன் அவுட் செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதையும் பிரதிபலிப்பதாக இந்த வீடியோவும் உள்ளது.