9 ரன்களில் ஆட்டமிழந்த அணி! 6 பேர் ’டக் அவுட்’ ஆன அதிசயம்! எந்த நாடு.. எந்தப் போட்டியில் தெரியுமா?

மகளிர் கிரிக்கெட்டில் பிலிப்பைன்ஸ் அணி, குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.
cricket
cricketfile image

கால்பந்துக்கு அடுத்து, உலக ரசிகர்களைக் கட்டிப்போடும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. மூன்று விதமான வகைகளில் விளையாடப்படும் கிரிக்கெட்டும் இன்றைய கால மாற்றத்துக்குத் தகுந்தாற்போல் பல புதிய விதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதனால் பல சாதனைகள் தகர்க்கப்படுவதுடன் புதிய சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் டி20 கிரிக்கெட் வந்த பிறகு, எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டி20யின் வருகையால் மைதானங்கள் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கி வருகின்றன.

இதனால், பல இளம் வீரர்கள் பேட்டிங்கில் ருத்ர தாண்டவமாடுவதுடன், சர்வதேச போட்டிகளில் இடம்பெறவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. அதுபோல், பந்துவீச்சாளர்கள், பேட்டர்களுக்கு நிகராகப் பந்துவீசி மலைக்க வைக்கின்றனர். அப்படியான டி20யில் பிலிப்பைன்ஸ் பெண்கள் அணி குறைந்த ரன்னில் ஆட்டமிழந்த அணியாக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து பெண்கள் அணிகளுக்கு இடையே எஸ்.இ.ஏ. என்னும் மகளிர் டி20 போட்டி நேற்று (மே 1) நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த தாய்லாந்து மகளிர் அணி, பிலிப்பைன்ஸ் மகளிர் அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய பிலிப்பைன்ஸ் 11.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு வெறும் 9 ரன்களில் சுருண்டது. இதில் 4 பேட்டர்கள் தலா 2 ரன்களை அதிகபட்சமாக எடுத்திருந்தனர். 6 பேர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். 11வது பேட்டரும் ரன் எதுவும் எடுக்காமல், அதே சமயத்தில் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

இதில் 1 எக்ஸ்ட்ரா ரன்னும் வந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 4 ரன்களில் 5.5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்த பிலிப்பைன்ஸ் அணி, 7.5 ஓவர்களில் 6 ரன்களில் அடுத்த 2 விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து 11.1 ஓவர்களில் 9 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் தொடக்க பேட்டர் ஒருவர், 17 பந்துகளைச் சந்தித்து 2 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் பிலிப்பைன்ஸ் மகளிர் அணி சாதனையில் இணைந்துள்ளது. பின்னர் ஆடிய தாய்லாந்து மகளிர் அணி 4 பந்துகளிலேயே இலக்கைத் தொட்டு, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தாய்லாந்து தரப்பில் புத்தாவாங்க் 4 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசியதுடன், 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை அறுவடை செய்துள்ளார். மற்றொரு பந்துவீச்சாளர் 1.1 ஓவர் வீசி, அதில் 1 ஓவரை மெய்டனாக்கியதுடன் 3 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இந்த பட்டியலில் ஏற்கெனவே மாலத்தீவு பெண்கள் அணி, கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக 6 ரன்னில் சுருண்டுள்ளது. அதுபோல் மாலி மகளிர் அணியும் ருவாண்டா அணிக்கு எதிராக அதே 2019இல் சுருண்டுள்ளது. இதே பட்டியலில் மாலத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளது. அது, 2019ஆம் ஆண்டு நேபாள் மகளிர் அணிக்கு எதிராக 8 ரன்னில் சுருண்டுள்ளது. இந்தப் பட்டியலில் நேற்று நடைபெற்ற போட்டியின் மூலம் 3வது இடத்தை பிலிப்பைன்ஸ் மகளிர் அணி பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com