3வது டி20 | 2023 உலகக்கோப்பைக்கு பின் களத்தில் முகமது ஷமி.. இந்தியா பந்துவீச்சு தேர்வு!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தா மற்றும் சென்னை ஆடுகளங்களில் நடைபெற்றன. இரண்டு போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 3வது டி20 போட்டியானது ராஜ்கோட்டில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட முகமது ஷமி தன்னுடைய கம்பேக் போட்டியில் இன்று விளையாடி வருகிறார்.
2023 உலகக்கோப்பைக்கு பிறகு களம்காணும் ஷமி..
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற பெரிய காரணமாக அமைந்தார். ஆனால் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதற்கு இறுதிப்போட்டியில் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதும் பெரிய பாதகமாக அமைந்தது. ஷமி டிராவிஸ் ஹெட்டை தொல்லை செய்தபோதிலும் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை.
காயத்தால் அவதிப்பட்ட முகமது ஷமி இரண்டு அறுவை சிகிச்சைகளை ஒரே நேரத்தில் எதிர்கொண்டார். அதற்குபிறகு ஓராண்டுக்கு மேலாக ஓய்வில் இருந்த அவர், ஒரு மாதத்திற்கு முன்னரே உடற்தகுதியை நிரூபித்து விஜய் ஹசாரே டிரோபியில் பங்கேற்று விளையாடினார்.
இந்தசூழலில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற முகமது ஷமி, முதலிரண்டு போட்டிகளில் களமிறங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் என்ன காரணமோ அவர் களமிறக்கப்படவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முகமது ஷமி களமிறக்கப்பட்டுள்ளார். அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 4 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் சாய்த்தார்.
இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன்(w), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(c), துருவ் ஜூரல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி