தென்னாப்ரிக்கா டி20 லீக்| 2 முறை சாம்பியனை வீழ்த்தி முதல் கோப்பை வென்றது MI கேப்டவுன்!
ஐபிஎல் லீக் ஹிட் அடித்ததை தொடர்ந்து, உலகில் உள்ள பல்வேறு கிரிக்கெட் நாடுகள், உள்நாட்டு டி20 லீக் போட்டிகளை நடத்திவருகின்றன. அந்தவகையில் தென்னாப்பிரிக்காவும் எஸ்.ஏ.20 என்ற டி20 லீக்கை தொடங்கி 2023 முதல் நடத்திவருகிறது.
வளர்ந்து டி20 கிரிக்கெட் லீக்கான எஸ்.ஏ.20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், MI கேப் டவுன், பார்ல் ராயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலிய 6 அணிகள் விளையாடுகின்றன.
தொடக்க சீசனான 2023 எஸ்.ஏ.20 லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, 2024 எஸ்.ஏ.20 டைட்டிலையும் வென்று வீழ்த்தவே முடியாத ஒரு வலுவான அணியாக் தடம் பதித்தது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் மூன்றாவது சீசன் கடந்த ஜனவரி 09-ம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 08-ம் தேதிவரை நடத்தப்பட்டது.
முதல் SA20 சாம்பியன் பட்டம் வென்ற MI!
பரபரப்பாக தொடங்கி நடத்தப்பட்ட SA20 லீக் தொடரில், சிறப்பாக செயல்பட்ட மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், ரசீத் கான் தலைமையிலான MI கேப் டவுன் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய MI கேப் டவுன் அணி 20 ஒவரில் 181 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க வீரர்களான ரிக்கில்டன் மற்றும் பிரேவிஸ் இருவரும் 200 ஸ்டிரைக் ரேட்டில் 33, 38 ரன்கள் விளாசி அணியை நல்ல டோட்டலுக்கு எடுத்துச்சென்றன.
மூன்றாவது பட்டத்தை வென்று ஹாட்ரிக் அடிக்கும் எண்ணத்தில் 182 இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. உலத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் ரபாடா இருவரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஈஸ்டர்ன் கேப்பின் ஹாட்ரிக் கனவை சிதைத்தனர்.
105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்ட சன்ரைடர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 76 ரன்னில் படுதோல்வியை சந்தித்தது. சிறப்பாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய எம்ஐ பிரான்சைஸ் அணி, தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரிலும் தங்களுடைய முதல் பட்டத்தை தட்டிச்சென்றது. ரஷீத் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணி எஸ்.ஏ.20 லீக்கின் முதல் பட்டத்தை தட்டித்தூக்கிய நிலையில், டி20 பிரான்சைஸ் கிரிக்கெட்டில் 11வது பட்டத்தை வென்றது MI அணி.