”கணவரிடமிருந்து விவாகரத்து பெறுகிறேன்” - மேரி கோம் அறிவிப்பு.. பின்னணி என்ன?
மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று, இந்தியாவை தலைநிமிர வைத்தவர், மேரி கோம். மேலும் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றவர். இந்த நிலையில், குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும், அவரது கணவர் ஓன்லரும் பிரிய இருப்பதாக சமீபகாலமாக வதந்திகள் பரவி வந்தன. மற்றொரு வீராங்கனையின் கணவருடன் மேரி கோம் டேட்டிங் செல்வது காரணமாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கணவர் ஒன்லரிடமிருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேரி கோம், ”இப்போது, நானும் எனது கணவர் ஓன்கோலர் (ஓன்லர்) கோமும் திருமண பந்தத்தில் இல்லை. பரஸ்பர ஒப்புதலின் மூலம் விவாகரத்தை இறுதி செய்துள்ளோம்” என அவர் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் அவருடைய வழக்கறிஞர் ரஜத் மாத்தூரின் அறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது. தவிர, மேரி கோம் மற்றொரு வீராங்கனையின் கணவருடன் டேட்டிங்கில் இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். அதில் எந்த உண்மையும் இல்லை என மேரி கோம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது மேரி கோம் தன் 4 பிள்ளைகளுடன் பரிதாபாத்திலும், அவரது கணவர் ஓன்லர் டெல்லியிலும் தனித்தனியே வசிக்கிறார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மேரி கோமின் கணவர் ஓன்லர். அதனால் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாம். இதனாலும் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகூட, அவர்களின் பிரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
என்றாலும், அவர்களின் காதல் கதை 2000ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கியது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த ஒன்லர், போட்டி ஒன்றுக்குச் செல்லும் வழியில் மேரி தனது பொருட்களை இழந்தபோது அவர்களுக்குள் நட்பு உருவானது. பின்னர், அந்த நட்பே அவர்களை இல்வாழ்க்கை வரை இழுத்துச் சென்றது. 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியருக்கு, 2007ஆம் ஆண்டு இரட்டை மகன்களும், 2013ஆம் ஆண்டு மற்றொரு மகனும் பிறந்தனர். மேரிகோம் பெண் குழந்தையை விரும்பியதால், 2018ஆம் ஆண்டு அவர்கள் ஒரு மகளை தத்தெடுத்தனர்.