அமெரிக்காவில் தொடங்கியது கிரிக்கெட் புரட்சி! டுப்ளெசிஸ் கேப்டன்சியில் களமிறங்கும் குட்டி CSK அணி!

அனைத்து நாடுகளும் டி20 லீக்கின் மீது அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், அமெரிக்காவிலும் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது.
Texas Super KIngs
Texas Super KIngsTwitter

உலகின் பல்வேறு நாடுகளில் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் நடந்துவரும் நிலையில், இப்போது புதிதாக அமெரிக்காவிலும் டி20 லீக் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் மற்ற லீக்குகள் போலவே மேஜர் லீக் கிரிக்கெட் என்று பெயரிப்பட்டிருக்கும் இந்தத் தொடர் ஜூலை 13 முதல் 30 வரை நடைபெறவிருக்கிறது. மொத்தம் 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. அதில் 3 அணிகளை ஐபிஎல் உரிமையாளர்களே வாங்கியிருக்கின்றனர்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒருமுறை மோதும். மொத்தம் 19 போட்டிகள் இந்த சீசனில் நடைபெறவுள்ளன. இந்திய நேரப்படி போட்டிகள் தினமும் காலை 6 மணிக்குத் தொடங்கும். 2 போட்டிகள் இருக்கும் நாள்களில் முதல் போட்டி 2 மணிக்கு தொடங்கும். பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இந்த அணிகளுக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். முதல் MLC சீசனில் விளையாடும் 6 அணிகளைப் பற்றிய விவரங்களை கீழே பார்ப்போம்.

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - MINI CSK

ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பிறகு வெளிநாட்டில் சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியிருக்கும் மற்றொரு அணி. எப்போதும்போல் தங்களின் ஆஸ்தான வீரர்களை ஒப்பந்தம் செய்து 'யெல்லோ' எமோஷனை அமெரிக்காவுக்கும் கொண்டு வந்திருக்கிறது சூப்பர் கிங்ஸ். எல்லைச்சாமி ஃபாஃப் டுப்ளெஸி தான் இந்த அணியின் கேப்டன். இவர்கள் போக சூப்பர் கிங்ஸ் ஜாம்பவான் ட்வைன் பிராவோ, ஸ்டார் ஓப்பனர் டெவன் கான்வே, ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் ஆகியோரையும் அந்த அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

Texas Super KIngs
Texas Super KIngs

JSK வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கொட்சியாவும் கூட இங்கே நீடிக்கிறார். அம்பதி ராயுடுவையும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இந்திய வீரர்களுக்கு ஒரு ஆண்டு 'கூலிங் பீரியட்' என்ற விதியை பிசிசிஐ அறிவித்ததால், அவர் இத்தொடரிலிருந்து விலகினார். சூப்பர் கிங்ஸின் ஆஸ்தான கோச் ஸ்டீபன் பிளெமிங் தான் இந்த அணிக்கும் பயிற்சியாளர். முதல் போட்டியிலேயே நைட்ரைடர்ஸை வீழ்த்தி அட்டகாசமாக இந்த சீசனை தொடங்கியிருக்கிறது TSK.

லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ்

நைட் ரைடர்ஸ் குழுமத்தின் நான்காவது கிரிக்கெட் அணி LAKR.சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், லாகி ஃபெர்குசன், ஜேசன் ராய், மார்டின் குப்தில், அலி கான் என இந்நாள், முன்னாள் KKR வீரர்கள் பலரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த அணி. அவர்கள் போக ஆடம் ஷாம்பா, ரைலி ரூஸோ ஆகியோரும் அந்த அணியில் இருக்கிறார்கள்.

LA Knight Riders
LA Knight Riders

இந்திய அண்டர் 19 அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் நைட் ரைடர்ஸ் அணியால் டிராஃப்டில் எடுக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் இந்த அணியைத் தலைமை தாங்குகிறார். ஃபில் சிம்மன்ஸ் பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.

MI நியூ யார்க்

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் சேர்த்து மும்பை இந்தியன்ஸின் 'இந்தியாவின்' குழுமத்துக்கு இது ஐந்தாவது கிரிக்கெட் அணி. ILT20 தொடரில் MI எமிரேட்ஸ் அணியை வழிநடத்திய ஜாம்பவான் கரண் பொல்லார்ட் தான் இந்த அணியின் கேப்டன். ராபின் பீட்டர்சன் இந்த அணியின் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

எப்போதும் போல் இந்த அணியிலும் பல உலகத்தர சூப்பர் ஸ்டார்களை குவித்திருக்கிறது MI. டிரென்ட் போல்ட், ரஷீத் கான், டிம் டேவிட், டிவால்ட் பிரெவிஸ், ஜேசன் பெரண்டார்ஃப், டேவிட் வீஸா, ககிஸோ ரபாடா, நிகோலஸ் பூரண் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த அணியில் அணிவகுத்து நிற்கிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் ஆனந்த் ஜெயராமன், வெங்கி ஹரிநாராயணன் இணைந்து இந்த அணியை வாங்கியிருக்கின்றனர். இவர்கள் இருவருமே சென்னையில் பிறந்தவர்கள். ஆரோன் ஃபின்ச் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் இந்த அணியிலும் பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

கோரி ஆண்டர்சன், லியாம் பிளங்கட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், லுங்கி இங்கிடி, மேத்யூ வேட், கைஸ் அஹமது, ஃபின் ஆலன் ஆகியோர் இந்த அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், பாகிஸ்தான் பௌலர்கள் ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷதாப் அஹமது ஆகியோரையும் அந்த அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. பயிற்சியாளராக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் செயல்படுகிறார்.

சியாட்டில் ஓர்காஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான GMR குரூப், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, தொழிலதிபர்கள் சஞ்சய் பார்த்தசாரதி, சோமசேகர் (இருவருமே தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்க தொழிலதிபர்கள்) உள்பட பலர் இணைந்து சியாட்டில் ஓர்காஸ் அணியை வாங்கியிருக்கிறார்கள். டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே இந்த அணியின் பயிற்சியாளராக செயல்படுகிறார். கேபிடல்ஸின் SA20 அணியான பிரிடோரியாவின் கேப்டன் வெய்ன் பார்னெல் இந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

குவின்டன் டி காக், தசுன் ஷனகா, ஆண்ட்ரூ டை, ஹெய்ன்ரிச் கிளாசன், டுவைன் பிரிடோரியஸ், ஷிம்ரன் ஹிட்மெயர், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், இமாத் வசீம் என அத்தனை முன்னணி சர்வதேச அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த அணியில் இருக்கிறார்கள். ஆஷஸ் தொடரில் ஆடுவதன் காரணமாக முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இத்தொடரிலிருந்து விலகினார். அதேபோல், ஜிம்பாப்வேவில் நடக்கவிருக்கும் 10 ஓவர் ஃபிரான்சைஸ் லீகில் விளையாடுவதற்காக சிகந்தர் ராஸாவும் அந்த அணியிலிருந்து விலகியிருக்கிறார்.

வாஷிங்டன் ஃப்ரீடம்

இந்த அணியின் உரிமையாளர் சஞ்சய் கோவிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் தான். ஆஸ்திரேலியாவில் கோப்பை வென்ற பழக்கப்பட்டவர்கள் இந்த அணியின் பொறுப்பில் இருப்பது இந்த அணிக்கு பெரும் பலம். பிக் பேஷ் லீக் வென்ற பயிற்சியாளர் கிரெக் ஷிப்பேர்ட் இவ்வணியின் பயிற்சியாளராகவும், பிக் பேஷ் லீகை அடுத்தடுத்த சீசன்களில் வென்ற ஒரே கேப்டனான மாய்சஸ் ஹென்றிக்ஸ் இந்த அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.

ஆன்ரிச் நார்கியா, மார்கோ யான்சன், கிளென் ஃபிளிப்ஸ், ஜோஷ் ஃபிளிப்பே, பென் துவார்ஷூய்ஸ், அகீல் ஹொசைன் ஆகியோர் இந்த அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். லங்கா பிரீமியர் லீக் இருப்பதால், இந்தத் தொடரில் பங்கேற்க வனிந்து ஹசரங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்கவில்லை. அவருக்குப் பதில் வாஷிங்டன் அணி ஆஸ்திரேலியாவின் தன்வீர் சங்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com