மிகப்பெரிய தவறு செய்த MI.. சொந்த மண்ணிற்கே வில்லனான ஷர்துல்! லக்னோ அசத்தல் வெற்றி!
என்ன தான் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆண்ட பரம்பரை, கடப்பாரை அணி என ரசிகர்கள் கொண்டாடினாலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொடுங்கனவையே பரிசளித்துள்ளது. 6 முறை இவ்விரண்டு அணிகளும் மோதியுள்ள நிலையில் 5 முறை லக்னோ அணியே மும்பையை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
இந்த சூழலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் எப்படியாவது வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் அணி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் போட்டி தொடங்கப்பட்டது.
203 ரன்கள் குவித்த லக்னோ..
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வுசெய்ய, லக்னோ அணி பேட்டிங்க் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஸ் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 6 ரன்னில் அவரடித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெட்கீப்பர் பிடித்தபோதும், சத்தம் கேட்காததால் மும்பை அணி அதை ரிவ்யூ செய்யாமல் தவறவிட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட மிட்செல் மார்ஷ் 31 பந்தில் 60 ரன்கள் அடித்து அசத்தினார்.
மார்ஷ் வெளியேறினாலும் அவர் விட்ட இடத்திலிருந்து வெளுத்துவாங்கிய எய்டன் மார்க்ரம் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 53 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார்.
கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றினாலும், அவரைத் தொடர்ந்து வந்த ஆயுஸ் பதோனி 19 பந்தில் 30 ரன்கள் அடிக்க, டேவிட் மில்லர் 27 ரன்கள் அடித்து லக்னோவை 203 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துவந்தார். மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, 18வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் கேப்டனாக சாதனை படைத்தார்.
அதிரடியாக ஆடிய நமன்திர், சூர்யா..
204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் வில் ஜாக்ஸ் 5 ரன்னிலும், ரியான் ரிக்கல்டன் 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 17 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தாலும் 3வது வீரராக களத்திற்கு வந்த நமன் திர் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு ஆட்டத்தை தலைகீழாக திருப்பிப்போட்டார். 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் 8 ஓவரில் 86 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு வலுவான கம்பேக் கொடுத்தனர்.
ஆனால் நமன் திர்ரை 46 ரன்னில் வெளியேற்றிய திக்வேஷ் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஒருபுறம் நமன் வெளியேறினாலும் நிலைத்துநின்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 9 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்து 67 ரன்கள் குவித்து அசத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக ஆடிய சூர்யா போட்டியை மும்பைக்கு முடித்துகொடுப்பார் என நினைத்தபோது, டைட்டாக பந்துவீசிய லக்னோ அணி அவரை தவறுசெய்ய அனுமதித்தது. எதிர்பாராத நேரத்தில் ஸ்மார்ட்டாக பந்துவீசிய ஆவேஷ் கான் சூர்யாவை சரியான நேரத்தில் வெளியேற்றி கேப்டன் ரிஷப் பண்ட்டை பெருமூச்சு விடவைத்தார்.
மும்பை செய்த மிகப்பெரிய தவறு..
4 ஓவரில் 52 ரன்கள் என அடிக்க வேண்டிய நிலையில் ஹர்திக் பாண்டியா களமிறங்க, திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி இந்த இலக்கை எப்படியும் எட்டிவிடும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தது. சிக்சர் பவுண்டரி என விரட்டிய ஹர்திக் பாண்டியா நம்பிக்கையை அதிகப்படுத்தினாலும், திலக் வர்மாவிற்கு சரியாக பேட்டில் பந்து படாதது பெரிய கவலையை ஏற்படுத்தியது. ஆனாலும் அவரால் அடிக்க முடியும் என்ற நிலை இருந்ததால், போட்டியில் மும்பை இந்தியன்ஸின் கைகளே ஓங்கியிருந்தது.
கடைசி 2 ஓவருக்கு 29 ரன்கள் தேவையென்ற இடத்தில் தன்னுடைய சொந்த மண்ணான மும்பை அணிக்கு எதிராக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டத்தை லக்னோ அணிக்கு சாதகமான மாற்றினார். ரியல் கேம் சேஞ்சராக ஜொலித்த அவருக்கு எதிராக ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவராலும் ஒரு பவுண்டரியை கூட அடிக்க முடியவில்லை. இந்த சூழலில் 18.5வது ஓவரில் திலக் வர்மாவை ரிட்டயர்டு அவுட் மூலம் வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி, அவருக்கு பதிலாக சாண்ட்னரை களமிறக்கியது.
போட்டியின் முக்கியமான தருணத்தில் ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டரை களமிறக்கும் திட்டம் யாருடையது என்பது புரியவே இல்லை. கடைசி 6 பந்துக்கு 22 ரன்கள் தேவை என்ற கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ஆவேஷ் கான் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஹர்திக் பாண்டியா லக்னோ அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசிய ஆவேஷ் கான் வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது லக்னோ அணி.
மும்பை அணிக்கு எதிரான தன்னுடைய ரெக்கார்டை 6-1 என நீட்டித்து அசத்தியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.