
ப்ளே ஆஃப் ரேஸின் மிக முக்கியமான ஆட்டமான லக்னோ வெர்சஸ் மும்பை போட்டி நேற்றிரவு நடந்தேறியது. லக்னோவின் பூச்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். லக்னோ நிர்வாகமும் ஏதாவது ஒரு மேட்சில் தீபக் ஹூடா மீண்டும் பொங்கி எழுவார் என எதிர்பார்க்கிறது. பாவம்! பால்னா பொங்கும், பச்சைத்தண்ணி எப்படி பொங்கும் என கையை விரிக்கிறார் ஹூடா. இயற்கை எழில் கொஞ்சம் சாலையில் ஓர் நெடுந்தூர பயணத்தில், இயற்கையை ரசிப்பவனை கடைசி சீட்டிற்கு கடாசிவிட்டு, உமட்டல் பார்ட்டியை இடம் மாற்றி ஜன்னலோரம் அமர்த்தி வைப்பார்கள் இல்லையா. அப்படி ஹூடாவை நேற்று ஓபனிங் இறக்கிவிட்டார்கள்.
டி காக்கும் ஹூடாவும் சூப்பர் ஜெயன்ட்ஸின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் பெஹ்ரன்டார்ஃப். முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஜோர்டன் வீசிய 2வது ஓவரின் முதல் பந்து, ஹூடா தூக்கி அடித்த பந்தை கிட்டதட்ட 28 மீட்டர்கள் பொன்வண்டாகப் பறந்து சென்று கேட்ச் எடுக்க முயன்றார் டிம் டேவிட். ஆனால், பந்து கையிலிருந்து நழுவி தவடாவில் பட்டது. பிழைத்தார் ஹூடா. அதே ஒவரின் கடைசிப்பந்தில் டி காக் ஒரு சிக்ஸர் அடித்தார். பெஹ்ரன்டார்ஃப் வீசிய 3வது ஓவரின் முதல் பந்து, அதே டிம் டேவிட் கையில் கேட்ச் கொடுத்துவிட்டு பெருமிதமாக நடந்துச் சென்றார் ஹூடா. அடுத்து களமிறங்கிய மன்கட்டும், சந்தித்த முதல் பந்திலேயே கீப்பர் கிஷனிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.
ஷொகீன் வீசிய 4வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் க்ருணால். ஜோர்டனின் 5வது ஓவரில், இன்னொரு சிக்ஸர் அடித்தார் டி காக். அடுத்த ஒவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஷொகீன். பவர்ப்ளேயின் முடிவில் 35/2 என மோசமாக துவங்கியிருந்தது லக்னோ. சாவ்லா வீசிய 7வது ஓவரின் முதல் பந்து, டி காக் காலி. லக்னோ ரசிகர்களின் முகத்திலும் பூச்சி பறந்தது. ஷொகீனின் 8வது ஓவரில், ஸ்டாய்னிஸ் ஒரு சிக்ஸர் அடித்தார். சாவ்லாவின் 9வது ஓவரில், இன்னொரு சிக்ஸரும் பறக்கவிட்டார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். மத்வாலின் 10வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. பத்து ஓவர் முடிவில் 68/3 என புள்ளப்பூச்சியைப் போல் அமைதியாய் இருந்தது லக்னோ.
11வது ஓவர் வீசவந்த சாவ்லாவை, சிக்ஸருடன் வரவேற்றார் கேப்டன் க்ருணால். க்ரீன் வீசிய 12வது ஓவரில், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். பெஹ்ரன்டார்ஃபின் 13வது ஓவரில், பவுண்டரியும் இல்லை, டாட் பந்தும் இல்லை. 9 ரன்கள் கிடைத்தது. பவுண்டரி, சிக்ஸர் என்று இல்லாமல், சிங்கிள், டபுள்ஸ் என தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக ஓடினர் க்ருணாலும் ஸ்டாய்னிஸும். மத்வாலின் 14வது ஓவரில், 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 15 ஓவரை வீசிய ஜோர்டன், 8 ரன்கள் கொடுத்தார். 15 ஓவர் முடிவில் 108/3 என புள்ளைப்பூச்சிக்கு லேசாக கொடுக்க முளைக்கத் துவங்கியது. க்ரீன் வீசிய, 16வது ஓவரில் ஒரு சிக்ஸரை வெளுத்துவிட்டார் ஸ்டாய்னிஸ். ஓவரின் கடைசிப்பந்து, காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுவிட, ரிட்டைர்டு ஹர்ட்டாகி கிளம்பினார் கேப்டன் க்ருணால். இன்னும் 1 ரன் எடுத்திருந்தால் அவருக்கு அரைசதம் கிடைத்திருக்கும்! மத்வாலின் 17வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரின் 4வது பந்து, தரமான யார்க்கர் ஒன்று ஸ்டாய்னிஸ் காலில் நங்கென அடித்தது. சட்டென கையைத் தூக்கி அவுட் கொடுத்தார் நடுவர். இரண்டு ரிவ்யூதான் மிச்சம் இருக்கிறதே என ரிவ்யூவுக்கு போனார் நம்பிக்கை இல்லாத ஸ்டாய்னிஸ். மீண்டும் பரீசலித்து பார்க்கையில் பந்து ஸ்டெம்ப்பை மிஸ் செய்ய, மீண்டும் களத்துக்குள் வந்தார் ஸ்டாய்னிஸ்.
18வது ஓவரை வீசவந்தார் ஜோர்டன். முதல் பந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டு தனது அரைசதத்தை நிறைவு செய்தார் ஸ்டாய்னிஸ். அடுத்த பந்தில் ஒரு டாட். 3வது பந்து, பவுண்டரிக்கு பறந்தது. 4வது பந்தும் பவுண்டரிக்கு துள்ளி குதித்து ஓடியது. 5வது பந்து லாங் ஆன் திசையில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர். கடைசிப்பந்தில், மீண்டும் ஒரு பவுண்டரி. கிட்டதட்ட ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்து பட்டாம்பூச்சி போல் சிறகு விரித்தது லக்னோ அணி. பெஹ்ரன்டார்ஃப் வீசிய 19வது ஓவரில், மடார் மடாரென இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ். மத்வால் வீசிய கடைசி ஓவரில் பூரனுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. 5வது பந்தில் பூரன் கொடுத்த கேட்சை மிஸ் செய்தார் ஜோர்டன். கடைசிப்பந்தில், மீண்டும் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார் ஸ்டாய்னிஸ். 10 ஓவர் முடிவில் 68/3 என இருந்த அணி, 20 ஓவர் முடிவில் 177/3 என மாஸ் காட்டியது.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆட்டத்தை துவங்கியது இஷான் - ரோகித் ஜோடி. ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறிய க்ருணால், முதல் ஒவரை வீசினார். 2வது பந்து, பவுண்டரிக்கு பறக்கவிட்டார் கிஷன். மன்கட்டுக்கு பதில் யாஷ் தாக்கூரை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது லக்னோ. மோஷின் கான் வீசிய 2வது ஓவர், 2வது பந்து சிக்ஸருக்குப் பறக்கவிட்ட கிஷன், கடைசிப்பந்திலும் ஒரு பவுண்டரி தட்டினார். மாம்பழத்து வண்டு நவீன் உல் ஹக் வீசிய 3வது ஓவரில், கிஷன் இன்னொரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவர் வீசவந்த யாஷ் தாக்கூரை சிக்ஸருடன் வரவேற்றார் ஹிட்மேன். நவீனின் 5வது ஒவரில், ரோகித் இன்னொரு சிக்ஸரும் பறக்கவிட்டார். தாக்கூரின் கடைசி ஓவரில், ஹிட்மேனிடமிருந்து மற்றொரு சிக்ஸர். எல்லைக் கோட்டின் அருகே பந்தை பிடித்து, காலையும் தூக்கி உள்ளே வைத்தார் பிஷ்னோய். பவர்ப்ளேயின் முடிவில் 58/0 என அட்டகாசமாகத் துவங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஸ்வப்னில் வீசிய 7வது ஒவரில், 2 பவுண்டரிகள் அடித்தார் கிஷன். பிஷ்னோயின் 8வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 9வது ஓவரை வீசிய க்ருணால், கிஷனுக்கு ஒரு பவுண்டரியை வழங்கினார். பிஷ்னோயின் 10வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்த ஹிட்மேன், ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டும் ஆனார். 25 பந்துகளில் 37 ரன்கள் அடித்ததே மகிழ்ச்சி என சந்தோஷமடைந்தனர் மும்பை வாலாக்கள். 10 ஓவர் முடிவில் 92/1 சிறப்பான நிலையிலிருந்தது மும்பை. இன்னும் 60 பந்துகளில் 86 ரன்கள் தேவை.
க்ருணாலின் 11வது ஓவரில், 2 பவுண்டரிகள் அடித்த இஷன் கிஷன், தனது அரைசதத்தை நிறைவு செய்தார். பிஷ்னோயின் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே, நவீனிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார் கிஷன். 39 பந்துகளில் 59 ரன்கள்! 13வது ஓவரை வீசிய க்ருணால், ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். பிஷ்னோயின் 14வது ஓவரில், வதேராவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. யாஷ் தாக்கூர் வீசிய 14வது ஓவரின் முதல் பந்து, ஸ்கூப் ஷாட் ஆடுகிறேன் என எங்கேயே போன பந்தை வளைத்து ஸ்டெம்பில் அடித்தார் ஸ்கை. லக்னோவில் மின்னல் அடிக்க, மும்பையில் இடி இடித்தது. அடுத்து களமிறங்கிய டேவிட், முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்து தான் ஒரு இடிதாங்கி என்றார். இன்னும் 30 பந்துகளில் 53 ரன்கள் தேவை.
நவீனின் 16வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே. மோசின் வீசிய 17வது ஓவர் முதல் பந்து, வதேரா அவுட். 20 பந்துகளில் 16 ரன்கள் என வதேரா உருட்டிய ஊதுபத்தியைதான் எடுத்து கொளுத்தியது மும்பை. மத்வாலுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் விஷ்னு வினோத். அதே ஓவரின் 5வது பந்து, டேவிட் ஒரு சிக்ஸர் அடித்தார். 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை. யாஷ் தாக்கூரின் 18வது ஓவரில், விஷ்னு வினோத் காலி. எல்லைக் கோட்டில் நின்று அற்புதமான கேட்ச் பிடித்தார் பூரன். கத்துக்கிடனும்யா, கத்துக்கிடனும் என பிஷ்னோயிடம் சொன்னார் க்ருணால். 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை. டேவிட்டும் க்ரீனும் களத்தில்.
நவீன் உல் ஹக் வீசிய 18வது ஓவரின், 2வது பந்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார் டேவிட். பீமராக வந்து 4வது பந்து, நோ பாலுடன் ஒரு பவுண்டரியும் சேர்த்து கொடுத்தது. கிடைத்த ஃப்ரீஹிட்டில் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால், கடைசி பந்தில் இன்னொரு சிக்ஸரைப் பறக்கவிட்டு இன்னும் 6 பந்துகளில் 11 ரன்கள் என நிலைமையை தலைகீழாக்கினார் டேவிட். கடைசி ஓவரை வீசவந்தார் மோசின் கான். முதல் பந்து டாட். 2வது பந்து சிங்கிள். 3வது பந்து சிங்கிள். 4வது பந்து டாட். 5வது பந்து சிங்கிள். 6வது பந்து, டபுள்ஸ். கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தலாக பந்து வீசிய மோசின், 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை ஜெயிக்கவைத்தார். 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ப்ளே ஆஃப் ரேஸ் இன்னும் சூடுபிடிக்க, `கத்திரி வெயிலில் எங்கள கத்த வைக்காதீங்கலே' என ஐ.பி.எல் ரசிகர்கள் கிறங்கிவிட்டார்கள்.