MI vs LSG| மார்ஷ், மார்க்ரம் அதிரடி ஆட்டம்.. 5 விக். வீழ்த்திய ஹர்திக்! மும்பைக்கு 204 ரன்கள் இலக்கு
18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. இரண்டு சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்த சூழலில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுவருகிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
203 ரன்கள் குவித்த லக்னோ..
லக்னோவில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஸ் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 31 பந்தில் 60 அடித்து அசத்தினார். 6 ரன்னில் அவரடித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெ கீப்பர் பிடித்தமோதும், சத்தம் கேட்காததால் மும்பை அணி அதை ரிவ்யூ செய்யாமல் தவறவிட்டது.
மார்ஷ் வெளியேறினாலும் அவர் விட்ட இடத்திலிருந்து வெளுத்துவாங்கிய எய்டன் மார்க்ரம் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 53 ரன்கள் அடித்து மிரட்டினார்.
கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் வெளியேறினாலும் அவரைத் தொடர்ந்து வந்த ஆயுஸ் பதோனி 19 பந்தில் 30 ரன்கள் அடிக்க, டேவிட் மில்லர் 27 ரன்கள் அடித்து லக்னோவை 203 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துவந்தார்.
5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யவிருக்கிறது.